வங்காளதேசத்தின் வடகிழக்கு சிலெத் பகுதியில் உள்ள தர்காவிற்கு வந்த பிரிட்டன் தூதர் அன்வர் சவுத்ரியை குறி வைத்து கடந்த 2004-ம் ஆண்டு வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், மூன்று போலீஸ்காரர்கள் கொல்லப்பட்டனர். 70 பேர் காயம் அடைந்தனர். பிரிட்டன் தூதர் அன்வர் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
இந்த தாக்குதல் தொடர்பாக தடை செய்யப்பட்ட இயக்கமான ஹர்கத்-உல்-ஜிகாத் அல்-இஸ்லாமி (ஹூஜி) இயக்கத்தின் தலைவர் முப்தி அப்துல் ஹன்னான் மற்றும் அந்த அமைப்பின் முக்கிய தலைவர்களான ஷெரிப் ஷாகதுல் ஆலம், டேல்வார் உசைன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது.
அவர்கள் மீதான குற்றம் நிரூபணமானதையடுத்து, அவர்கள் மூவருக்கும் 2008ம் ஆண்டு மரண தண்டனை விதித்து விசாரணை நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனை உச்ச நீதிமன்றம் கடந்த டிசம்பர் மாதம் உறுதி செய்தது. கடந்த மார்ச் மாதம் 19-ம் தேதி தண்டனையை மீண்டும் உறுதி செய்தது.
இதனையடுத்து ஹன்னான் மற்றும் 2 பேர் சார்பிலும் ஜனாதிபதிக்கு கருணை மனுக்கள் அனுப்பப்பட்டன. அந்த மனுக்களை பரிசீலனை செய்த ஜனாதிபதி அப்துல் ஹமீது, மனுக்களை நிராகரித்துவிட்டார். கடைசி வாய்ப்பும் கைநழுவிப் போனதால் மூன்று பேரின் மரண தண்டனை நிறைவேற்றப்படுவது உறுதியாகிவிட்டது. தண்டனையை நிறைவேற்றுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாக உள்துறை மந்திரியும் கூறியுள்ளார். எனவே, எந்த நேரத்திலும் ஹன்னான் உள்ளிட்ட 3 பேரின் மரண தண்டனை நிறைவேற்றப்படலாம்.
இதேபோல் டாக்கா வெடிகுண்டு தாக்குதல் தொடர்பாகவும் ஹன்னான் மற்றும் 7 பேருக்கு டாக்கா கோர்ட் மரண தண்டனை விதித்திருப்பது குறிப்பிடத்தக்கது.