பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பிரதம அதிதியாக கலந்து கொள்ளும் காத்தான்குடி நகர சபையின் புதிய கட்டிட திறப்பு விழா நிகழ்வை, மட்டு மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத்தலைவரும், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் புறக்கணிப்பதாக நேற்று வெள்ளிக்கிழமை உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.
தனது முழுமையான நிதி ஒதுக்கீட்டிலும் – பங்களிப்புடனும் கட்டி முடிக்கப்பட்ட காத்தான்குடி நகர சபையின் புதிய கட்டிடத்தை கிழக்கு முதல்வர் மற்றும் அவரது சகாக்கள் இணைத்து அவர்களது அரசியல் இலாபங்களுக்காக என்னை புறக்கணித்து விட்டு திறந்து வைக்க திட்டமிட்டுள்ளதாக இதன்போது குற்றம்சாட்டிய இராஜாங்க அமைச்சர், கலைக்கபட்டுள்ள காத்தான்குடி நகர சபையின் அதிகாரத்தை நாங்கள் மீண்டும் கைப்பற்றிய பின்னர் அதன் நினைவுக் கல்வெட்டு கழற்றி எரியப்பட்டு மீண்டும் புதிய நினைவுக் கல்வெட்டு நடப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.
மட்டக்களப்பு பல்கலைக்கழக கல்லூரி மண்டபத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் கூறியதாவது,
–
எனவே, இவ்வாறான காரணங்களால் பிரதமர் கலந்து கொள்ளும் இந்த நிகழ்வை புறக்கணிப்பது என்ற தீர்மானத்தை எமது மத்திய குழு எடுத்துள்ளது. அதற்கமைய நான் எனது சொந்த ஊரில் நடக்கும் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை.
இதேவேளை, காத்தான்கு நகர சபையின் திறப்பு விழா மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் மட்டு. விஜயம் சம்பந்தமான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டமை இம்மாவட்டத்தில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தெரியப்படுத்தப்படவில்லை. இது சம்பந்தமாக பிரதியமைச்சர் அமீர் அலி மற்றும் அலி ஸாஹிர் மௌலான ஆகியோர் பிரதமருடன் கலந்துரையாடினர். பின்னர், பிரதமர் இந்த விடயம் சம்பந்தமாக என்னுடன் தொலைபேசியிலும் உரையாடினார். இதன் காரணமாகவே பிரதமர் தனது விஜயத்தை ஒத்தி வைத்திருந்தார்.
இந்நிலையில், பிரதமர் மீண்டும் ஆகஸ்ட் 20ஆம் திகதி வருகைத் தருவதாக அறிவித்தாலும் முன்னர் நடைபெறவிருந்த நிகழ்வுக்கு கடந்த ஒரு மாதங்களுக்கு முன்னர் அச்சிட்ட அழைப்பிதழையே முதல்வர் மீண்டும் விநியோகம் செய்துள்ளார். அவருடன்; இது சம்பந்தமாக பேசி பயனில்லை என்பதால் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளாது தவிர்ந்து கொள்ள தீர்மானித்தோம்.
காத்தான்குடி நகர சபை நிர்மாணப் பணிக்கு முழுமையான நிதிப் பங்களிப்பு மத்திய அரசினாலே பெற்றுக்கொடுக்கப்பட்டது. இந்தப் பணிக்கும் கிழக்கு மாகாண சபைக்கோ அல்லது கிழக்கு மாகாண முதலமைச்சருக்கோ எந்த தொடர்பும் இல்லை. அவர்கள் ஒரு ரூபாய் கூட இதற்காக வழங்கவில்லை.