அமெரிக்க ஜனாதிபதியாக ஹிலாரி கிளின்டனை தெரிவுசெய்ய வேண்டும் எனக் கோரி அமெரிக்க தேர்தல் கல்லூரி அங்கத்தவர்களுக்கு மில்லியன் கணக்கானோர் மனுவொன்றின் மூலம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த 8 ஆம் திகதி நடைபெற்ற தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றுள்ளார். ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளின்டனே இத்தேர்தலில் வெற்றி பெறுவார் என அமெரிக்காவிலும் ஏனைய நாடுகளிலும் அதிகமானோர் எதிர்வு கூறிய நிலையில், இத் தேர்தல் முடிவு பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுவரை வெளியான பெறுபேறுகளின்படி மக்களின் வாக்குகளில் டொனால்ட் ட்ரம்பை விட, ஹிலாரி கிளின்டன் சுமார் 5 இலட்சம் வாக்குகளை அதிகமாக பெற்றுள்ளார்.
எனினும், அமெரிக்க தேர்தல் விதிகளின்படி மக்களின் நேரடி வாக்குகளின் மூலம் ஜனாதிபதி தெரிவு செய்யப்படுவதில்லை.
ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒதுக்கப்பட்ட தேர்வாளர்கள் எனும் தேர்தல் கல்லூரி வாக்குகளின் அடிப்படையிலேயே ஜனாதிபதி தெரிவு செய்யப்படுகிறார்.
ஒவ்வொரு மாநிலத்திலும் மக்களின் வாக்குகளில் முதலிடம் பெறும் வேட்பாளருக்கு அந்த மாநிலத்தின் தேர்தல் கல்லூரி வாக்குகள் அனைத்தும் சென்றுவிடும். மொத்தமாகவுள்ள 538 தேர்தல் கல்லூரி வாக்குகளில் 270 வாக்குகளைப் பெறுபவர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவார்.
இதுவரை 48 மாநிலங்களின் பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. இதன்படி, டொனால்ட் ட்ரம்ப் சுமார் 6 கோடியே 2.6 இலட்சம் வாக்குகளைப் பெற்றுள்ளார். அவருக்கு 290 தேர்தல் கல்லூரி வாக்குகள் கிடைத்துள்ளன.
ஹிலாரி கிளின்டனுக்கு 6 கோடியே 8.3 லட்சம் வாக்குகள் கிடைத்துள்ளன. ஆனால், அவர் 228 தேர்தல் கல்லூரி வாக்குகளையே பெற்றுள்ளார்.
எஞ்சியுள்ள தேர்தல் முடிவுகளில் மிச்சின் மாநிலத்தில் ட்ரம்ப் வெல் வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் அவரின் தேர்தல் கல்லூரி வாக்குகள் 306 ஆக அதிகரிக்கலாம். நியூ ஹாம்ப்ஷயரில் ஹிலாரி கிளின்டன் வெற்றி பெறுவார் எனவும் இதன்மூலம் அவரின் தேர் தல் கல்லூரி வாக்குகள் 232 ஆக அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், எதிர்வரும் டிசெம்பர் 19 ஆம் திகதியே தேர்தல் கல்லூரியின் தேர்வாளர்கள் ஜனாதிபதிக்கான தமது வாக்குகளை அளிக்கவுள்ளனர். இதையடுத்தே உத்தியோகபூர்வமாக ஜனாதிபதி தெரிவு அறிவிக்கப்படும்.
இந்நிலையில், மக்களின் அதிக வாக்குகளைப் பெற்ற ஹிலாரியை அடுத்த ஜனாதிபதியாக தெரிவு செய்யுமாறு தேர்வாளர்களுக்கு மனு மூலம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
”ஜனாதிபதியாக சேவையாற்றுவதற்கு ட்ரம்ப் தகுதியற்றவர். அவர் பொய்யர், வெருட்டுபவர், கடந்த கால பாலியல் தாக்குதல்களை ஒப்புக்கொண்டவர், அவரின் அனுபவமற்ற தன்யைமானது அமெரிக்க குடியரசுக்கு ஆபத்தை ஏற்படுத்தும்” எனவும் மேற்படி மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எலிஜா பேர்க் என்பவர் இந்த மனுவை ஆரம்பித்திருந்தார். இந்த மனுவில், இலங்கை நேரப்படி நேற்று மாலை வரை சுமார் 38 இலட்சம் பேர் கையெழுத்திட்டிருந்தனர்.
ஹிலாரி, தேர்தல் கல்லூரி வாக்குகளிலும் முதலிடம் பெறுவதற்கு குறைந்த பட்சம் 38 தேர்வாளர்கள் எதிர்மாறாக வாக்களிக்க வேண்டும். அமெரிக்க தேர்தல் விதிகளின்படி மாநிலங்களில் வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கு தமது வாக்குகளை அளிப்பதற்கு தேர்வாளர்கள் கடமைப்பட்டவர்கள். ஆனால் சில தேர்வாளர்கள் எதிர்மாறாக வாக்களித்துள்ளனர்.
தோல்வியை ஒப்புக் கொண்டபோது…
மொத்தமாக 157 தடவைகள் தேர்வாளர்கள் எதிர்மாறாக வாக்களித்தனர் என ‘ஃபெயார் வோட்’ எனும் அமைப்பு கூறுகிறது. இவற்றில் 71 தடவைகள் தேர்வாளர்கள் தமது வாக்குகளை அளிப்பதற்கு முன்னர், வேட்பாளர் இறந்தமை காரணமாக இவ்வாறு வாக்களிக்கப்பட்டது.
3 வாக்குகளுக்குரிய தேர்வாளர்கள் வாக்களிப்பதற்கு சமுகமளிக்க வில்லை. ஏனைய எதிர்மாறான வாக்குகளுக்கு தேர்வாளர்களின் சொந்த அபிப்பிராய ங்கள் காரணம் எனக் கூறப்படுகிறது.
குடும்பத்தினருடன் டொனால்ட் ட்ரம்ப்
அமெரிக்காவின் 29 மாநிலங்களில், அந்தந்த மாநிலத்தில் மக்களின் கூடுதல் வாக்குகளைப் பெற்ற வேட்பாளருக்கு தேர்வாளர்கள் வாக்குகளை அளிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.