அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜனநாயக கட்சி வேட்பாளரான ஹிலாரி கிளிண்டனுக்கு நிமோனியா காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ஹிலாரி தனது கலிபோர்னியா பயணத்தை ரத்து செய்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்களுக்கும் குறைவான நாட்களே உள்ளதால் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் ஹிலாரி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், அமெரிக்காவில் நடந்த இரட்டை கோபுர தாக்குதல் சம்பவத்தின் 15ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதற்கான நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஹிலாரிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து அவருக்கு மருத்துவ பரிசோதனைகளும் செய்யப்பட்டது. இதில் அவருக்கு நிமோனியா பாதிப்பு ஏற்பட்டிருப்பது தெரிய வந்தது. இதனால் ஹிலாரி ஓய்வில் இருக்க வேண்டும் என டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
இதன் காரணமாக ஹிலாரியின் பிரசார திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் மருத்துவ பரிசோதனை முடித்து வெளியே வந்த ஹிலாரி, கூடி இருந்த பத்திரிக்கையாளர்களை நோக்கி, தான் நன்றாக இருப்பதாக உணர்வதாகவும், இன்று நியூயார்க்கின் அழகிய நாள் எனவும் உற்சாகமாக பேசினார். ஹிலாரிக்கு எதிராக, குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் கடுமையான விமர்சனங்களையும், குற்றச்சாட்டுக்களையும் முன்வைத்து பிரசாரம் செய்து வரும் நிலையில், ஹிலாரிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டிருப்பது அவரது ஆதரவாளர்களை கவலையடைய வைத்துள்ளது.