ஹிலாரியின் வெற்றிக்காக தேங்காய் உடைத்த கூட்டமைப்பினர் தற்போது தேங்காய் நீரை குடிக்கட்டும் என முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்தார்.
அமெரிக்காவின் பெரும்பான்மை மக்கள் குழுவினர் ஒன்றிணைந்து உறுதி செய்துள்ள டொனால்ட் டிரம்பின் வெற்றியை இலங்கையின் பெரும்பான்மை மக்களும் பாடமாகக் கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
அதேநேரம், ஒபாமாவின் காலத்தில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையினால் இலங்கை மீது விடுக்கப்பட்ட அழுத்தங்கள் குறைவதற்கும் டிரம்பின் வெற்றி பங்களிப்புச் செய்யும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
நேற்று கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின் போது டொனால் ட்ரம்ப் வெற்றி பெறுவாரா என்பது கேள்விக்குரியாக இருந்தது.இருப்பினும் தற்போது அவர் வெற்றி பெற்றுள்ள நிலையில் அவரது கொள்கைகளை வெளிப்படுத்தியுள்ளார்.
அவரின் அரசியல் கொள்கைகள் இலங்கை போன்ற சிறிய நாடுகளுக்கு எந்த பாதிப்புக்களும் ஏற்படாது.
இந்நிலையில் தற்போதைய இலங்கை அரசாங்கத்தின் வெளிநாட்டு கொள்கை இந்த சந்தர்ப்பத்தில் பயனடையும் வகையில் அமையுமா என்பது கேள்விக்குரியாகவே உள்ளது.
இன்று எமது நாட்டிலுள்ள அமைச்சர்கள் கூறும் கருத்துக்களும் கூட எந்த வித அடித்தளமற்றதாகவும் வேடிக்கையானதாகவுமே உள்ளன.அதனால் மக்கள் அரசியல் வாதிகள் என்றாலே வெறுப்படையும் நிலை தோன்றியுள்ளது.
ஐ.நா மனித உரிமைகள் பேரவை இல்லாத பல விடயங்களை மனித உரிமைகள் என்ற பேரில் எமது நாட்டினுள் புகுத்த பார்க்கின்றது. அதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்க கூடாது.
அத்துடன் இன்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையினால் எமது நாட்டின் மீது விடுக்கப்படும் அழுத்தங்களில் இருந்து விடுபடுவற்கு சாதகமான காரணியாகவும் டொனால் ட்ரம்பின் வெற்றி அமையும்.
ஒபாமாவின் காலத்தில் மனித உரிமை விவகாரம் பெரிதாக இருப்பதற்கும் ட்ரம்பின் வெற்றிக்கு தடையாக இருந்தவர்களே காரணம்.
அதனால் ஹிலாரியின் வெற்றிக்காக தேங்காய் உடைத்த கூட்டமைப்பினர் தற்போது தேங்காய் நீரை குடிக்கட்டும் என்றார்.