ஹலால் சான்றிதழ் வழங்குவதன் மூலம் பெற்றுக் கொள்ளப்பட்ட நிதி ஐ.எஸ்.அமைப்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் தற்போதும் ஹலால் சான்றிதழ் மூலம் கிடைக்கப்பெறும் பணம் ஐ.எஸ்.அமைப்புக்கு அனுப்பி வைக்கப்படுகிறது என பொதுபலசேனா அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி டிலன்த விதானகே தெரிவித்தார்.
கிருலப்பனையிலுள்ள பௌத்த மத்திய நிலையத்தில் நடைபெற்ற பொதுபலசேனாவின் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு கூறினார்.
இலங்கையிலிருந்து சிரியா சென்று ஐ.எஸ்.அமைப்பில் இணைந்து போரிடும் போது காலமான அபூ சைலான் என்பவரது குடும்பத்துக்கும் இந்த நிதியிலிருந்து நஷ்ட ஈடு வழங்கப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், ஹலால் சான்றிதழுக்கு எதிராக நாம் குரல் கொடுத்ததையடுத்து உலமா சபை அந்த கடமையை கைவிட்டு தற்போது வேறோர் நிறுவனம் இந்த வேலையைச் செய்கிறது.
ஹலால் தொடர்பாக நாம் மறந்திருந்தோம். ஆனால் அமைச்சர் ராஜித சேனாரத்ன மீண்டும் அதனை ஞாபகப்படுத்தி விட்டார்.
ஊடகவியலாளர் மாநாட்டில் ஞானசாரதேரரை குற்றம் சுமத்தியுள்ளார். ஹலாலுக்கு எதிராக குரல்கொடுத்ததை தவறானது எனவும் இனவாதம் எனவும் தெரிவித்துள்ளார்.
ராஜித சேனாரத்னவின் கருத்தை நாங்கள் கண்டிருக்கிறோம். ஹலால் முஸ்லிம்களின் உரிமை. ஆனால் ஹலால் சான்றிதழ் மூலம் இந்துக்களையும் பௌத்தர்களையும் ஹலாலுக்கு நிர்ப்பந்திப்பதை நாம் எதிர்க்கிறோம். ஹலால் சான்றிதழ் வழங்கப்படுவதன் மூலம் பெற்றுக் கொள்ளப்படும் பணம் இஸ்லாமிய தீவிரவாதத்துக்கு பயன்படுத்தப்படுகிறது என்று நாம் உறுதியாக கூறுகிறோம்.
பொதுபல சேனாவோ ஞானசார தேரரோ இனவாதத்தைப் பரப்பவில்லை. ராஜித சேனாரத்னவின் கருத்துகளே இனவாதத்தை தூண்டுவதாக அமைந்துள்ளன.
ஹலால் விடயத்தில் அமைதியாக இருந்த எம்மை ராஜித சேனாரத்ன மீண்டும் தூண்டிவிட்டுள்ளார் என்றார்.