ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்,
சம்மாந்துறை.
20க்கு வாக்களித்த முஸ்லிம் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கட்சி தலைவர்கள் என்ன தண்டனையை வழங்க போகிறார்கள் என்ற வினா பரவலாக மக்களின் உள்ளத்தில் இருந்தது. மக்களின் இவ் வினாவுக்கான விடையை மு.கா தலைவர் பல வழிகளிலும் தவிர்த்து வந்திருந்தாலும், அவர் பதில் வழங்கியேயாக வேண்டிய நிர்ப்பந்தம் நடைபெற்று முடிந்த 30வது பேராளர் மாநாட்டில் ஏற்பட்டிருந்தது. இதற்கான பதில் கிடைத்துமிருந்ததெனலாம்.
20க்கு ஆதரவளித்த பைசால் காசிம் மற்றும் தௌபீக் ஆகியோருக்கு பேராளர் மாநாட்டில் பதவிகள் வழங்கி வைக்கப்பட்டிருந்தன. ஹரீஸுக்கு மாத்திரம் பதவிகள் வழங்கப்படவில்லை. ஹரீஸ் தவிர்ந்த ஏனைய இருவரும் மன்னிப்பு கேட்டதாக கூறப்படுகிறது. இவர்கள் யாரிடம் மன்னிப்பு கோர வேண்டும் என்ற நியாயமான வினா மக்களிடையே இருந்தாலும், மன்னிப்பு கேட்டதன் மூலம் அவர்கள் செய்த தவறுகளை, தானாக ஏற்றுக்கொண்டுள்ளனர். இவ் இருவரில் ஒருவர் கடந்த ஜனாதிபதி தெரிவின் போது கூட மு.காவின் முடிவை புறக்கணித்து, ரணிலை ஆதரித்திருந்ததான பலத்த சந்தேகமுள்ளது. இவருக்கு மன்னிப்பளிப்பது வெட்கிக்க வேண்டிய ஒன்று.
இவ் விடயத்தில் ஹரீஸ் மன்னிப்புகோர தயங்கியுள்ளார். மன்னிப்பு கோருவதானது, தான் செய்த பிழையை ஏற்றதாக பொருள்படும் என்பதை ஹரீஸ் நன்கே அறிவார். தனது கடந்த கால செயற்பாடுகளுக்கு மக்கள் முன்பு பல நியாயங்களை முன் வைத்த ஹரீஸுக்கு இது பலத்த அவமானத்தை ஏற்படுத்தும். அச் செயற்பாடானது ஹரீஸ் மீதான நம்பிக்கையீனத்தை அதிகரிக்கும். அவரின் நெருங்கிய ஆதரவாளர்கள் கூட ஹரீஸை நியாயப்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்படுவார்கள். இது ஹரீஸின் அரசியல் எதிர்காலத்தை பூச்சியமாக்கும்.
கடந்த பாராளுமன்ற தேர்தலில் மு.கா தலைவர் ஹக்கீம் ஹரீஸுக்கு எதிரான அரசியலை நேரடியாகவே செய்தார். ஹரீஸும் ஹக்கீமின் சவாலையும் சமாளித்தே தேர்தலை எதிர்கொண்டார். எதிர்வரும் தேர்தலில் மு.காவில் ஹரீஸுக்கு வாய்ப்பளிக்கப்பட்டாலும் ஹரீஸுக்கு எதிரான அரசியலை ஹக்கீம் முன்னெடுப்பார் என்பதில் ஐயமில்லை. தற்போது ஹரீஸ் மன்னிப்பு கேட்பாராயின் அவ் வேளையில் அது அவருக்கு பாரிய சவாலாக அமையும். வேட்பாளராக களமிறக்கிய பின்பு இவ் விடயத்தை வைத்து ஹரீஸை வீழ்த்த முனைவார் ஹக்கீம். எதிர்வரும் தேர்தலில் மு.கா தனித்து களமிறங்கவே அதிக வாய்ப்புள்ளது. ஹரீஸ் என்ற தனி நபரின் தோல்வி கட்சிக்கு சிறிய பாதிப்பையும் ஏற்படுத்தாது என்பதால், இது ஹரீஸுக்கு எதிரான ஹக்கீமின் செயற்பாட்டை மேலும் வீரியமாக்கும்.
தற்போது ஹரீஸை உள்வாங்கி பதவி வழங்கினாலும், ஹரீஸுக்கு தேர்தல் கேட்க ஆசனம் வழங்கப்படுமா என்ற ஒரு சிறிய அச்சமும் இல்லாமலில்லை. அந்தளவு இவர்கள் மீதான மக்கள் எதிர்ப்புள்ளது. 20க்கு ஆதரவளித்தவர்களுக்கு தேர்தல் கேட்க வாய்ப்பளித்தால் மு.கா பலத்த எதிர்ப்பை பெறும். ஹரீஸ் மன்னிப்பும் கேட்டு, தேர்தலில் களமிறங்க வாய்ப்பளிக்கபடாமலும் விட்டால், ஹரீஸின் அரசியல் என்னவாவது ? மன்னிப்பு கேட்ட பிறகு, இக் குறித்த விடயத்தில் ஹரீஸ், தன்னை நியாயப்படுத்த மக்கள் முன்னிலையிலும் செல்ல முடியாது. இவ் விடயத்தில் முன்னர் போன்று ஹக்கீமின் அனுமதியோடே செய்தேன் என குற்றம் கூறவும் முடியாது. இவற்றை எல்லாம் வைத்து நோக்கும் போது ஹரீஸ் இக் குறித்த விடயத்தில் மன்னிப்பு கேட்காமல் தவிர்ப்பதே சாதூரியம் எனலாம்.
ஹரீஸ் மன்னிப்பு கேட்காமல் அவரை கட்சியோடு இணைக்க முடியாத நிர்ப்பத்தில் ஹக்கீம் உள்ளார். யார் என்ன சொன்னாலும் ஹக்கீமை பொறுத்தமட்டில் தற்போது ஹரீஸை உள்வாங்குவதையே பொருத்தமாக கருதுகிறார். உள்வாங்கி வெட்டு கொடுப்பதே அவரது நோக்கம் எனலாம். இதனையே கடந்த பேராளர் மாநாட்டிலும் ஹக்கீம் வெளிப்படுத்தி இருந்தார். ஹரீஸ் மன்னிப்பு கோரினால் அவரது பதவிகளை வழங்க, தலைமை முன் நிற்கும் என்பதை பகிரங்கமாக பேராளர்கள் முன்னிலையில் வெளிப்படுத்தியிருந்தார். இது மன்னிப்பின் நோக்கை பிறழச் செய்கிறது எனலாம்.
ஒருவர், தன் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்க வேண்டும். அப்போதே மன்னிப்பின் நோக்கம் சரியாகும். ஒருவரிடம், நான் உனக்கு பதவி தருகிறேன், மன்னிப்பு கேளு என அழைப்பு விடுப்பது மிக கேவலமானது. மன்னிப்பு வழங்குபவரே மன்னிக்க தயார் என, மன்னிப்பு கேட்க முன்பே பகிரங்கமாக கூறுவது நாகரீகத்தின் மிக இழி நிலை எனலாம். இதனை விட இயலாமை வேறொன்றுமில்லை. மன்னிக்கவே முடியாத பாரிய சமூக துரோகத்தை செய்துள்ள இவருக்கு, மன்னிப்பு கேட்க முன்பே மன்னிப்பு வழங்கியுள்ள ஹக்கீமின் தாராள குணம் வேறு யாருக்கும் இருக்காது. அஷ்ரபின் முயற்சியில் விருட்சகமான இந்த மரம் ஹரீஸ் எனும் தனி நபரில் எந்தளவு தங்கியுள்ளது என்பதை இவ் விடயம் துல்லியமாக்கின்றது.