ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகமும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான எம்.ரி.ஹசன் அலி, அந்தக் கட்சியின் 19ஆவது தேசிய மாநாட்டில் கலந்து கொள்ளாமை குறித்து விளக்கமளிக்க வேண்டும் என்று அந்தக்கட்சியின் தேசிய அமைப்பாளர் சபீக் ரஜாப்தீன் கூறினார்.
இன்றைய மாநாட்டில் சுகயீனம் காரணமாகவே எம்.ரி.ஹசன் அலி, கலந்து கொண்டிருக்கவில்லை என்று கூறிய சபீக் ரஜாப்தீன், எனினும் அவர் சரியான விளக்கமளிக்க தவரும் பட்சத்தில் அவருக்கு எதிராக கட்சியின் உயர்மட்டம் கூடி உரிய நடவடிக்கை எடுக்கும் என்றும் கூறினார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இன்றைய தேசிய மாநாட்டில் எம்.ரி.ஹசன் அலி கலந்து கொள்ளாமைக்கான காரணம் குறித்து அந்தக்கட்சியின் தேசிய அமைப்பாளர் சபீக் ரஜாப்தீனிடம் இவ்வாறு கூறி இருந்தார்.
அதேநேரம் இந்தவிடயம் குறித்து எதிர்வரும் தினங்களில் கட்சியின் உயர்பீடம் கூடி கலந்தாலோசிக்க உள்ளதாகவும் கூறினார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 19ஆவது தேசிய மாநாடு சனிக்கிழமை காலை அம்பாறை மாவட்டத்திலுள்ள பாலமுனை பொது மைதானத்தில் நடைபெற்றது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் இரா சம்பந்தன், அமைச்சர்களான சரத் பொன்சேகா, தயா கமகே, மனோ கணேசன் உட்பட அரசியல் தலைவர்கள் மற்றும் வெளிநாட்டுத் தூதுவர்கள் பலரும் அதிதிகளாக கலந்து கொண்ட இம்மாநாட்டில், அக்கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான எம்.ரி.ஹசன் அலி பங்குபற்றாமல் பகிஷ்கரிப்பு செய்திருந்தார்.
இதேவேளை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 19ஆவது தேசிய மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மூத்த உறுப்பினர்கள் பலருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்றும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.