(காத்தான்குடி ஷாஜகான்)
ஒரு அரசியல் கட்சியின் தலைவர் மரணித்தால் புதிய தலைமைகள் எவ்வாறு தேர்வு செய்யப்பட வேண்டும் என்று எந்த அரசியல் கட்சியும் அதன் யாப்பில் எழுதி வைக்கவில்லை என கிழக்கு ஐக்கிய முன்னணியின் ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது,
மனித வாழ்வில் இரண்டு விடயங்கள் மாத்திரமே நிஜமானது. ஒன்று பிறப்பு மற்றது மரணம். எந்த நேரத்திலும், எந்த வயதிலும், எந்த இடத்திலும் மரணம் நிகழக் கூடியது.
தலைவர்களின் மரணம் நிகழ்கின்ற போது அரசியல் அமைப்புக்கள் எல்லாம் பிளவுபட்ட அல்லது பின்னடைவு ஏற்பட்ட சம்பவங்கள் வரலாறு நெடுகிலும் காணக்கூடியதாக உள்ளது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அஷ்ரஃப் அவர்கள் திடீரென சிங்கள பௌத்த வெளிநாட்டு சதியில் கொல்லப்பட்டது போன்று திட்டமிட்டு ஹக்கீம் கொல்லப்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் காணப்படுகின்ற இச்சூழலில், மறைந்த அஷ்ரஃப் அவர்களின் மரணத்தின் பின் கட்சி துண்டு துண்டாக பிளவுபட்டது போன்ற ஒரு நிலை ஹக்கீமின் மரணத்தின் பின்னும் ஏற்படக்கூடிய வாய்ப்புக்கள் நூறு வீதமாமாக காணப்படுகின்றது. அஷ்ரஃப் அவர்களின் மரணத்தின் பின் சமூகத்திற்குள் உருவாகியுள்ள இவ் பிரிவானது முஸ்லிம் சமூகத்தின் ஒற்றுமையையும், அரசியல் கோரிக்கைகளையும்ட தொடர்ச்சியாக சிதைவடையச் செய்து வந்துள்ளது. தலைவர் அஷ்ரஃப் அவர்களை கொன்றவர்களின் நோக்கம் நிறைவேற்றப்பட்டுள்ளதை நாம் நிதர்சனமாக காண்கின்றோம்.
ஒரு அரசியல் கட்சியின் தலைவர் மரணித்தால் புதிய தலைமைகள் எவ்வாறு தேர்வு செய்யப்பட வேண்டும் என்று எந்த அரசியல் கட்சியும் அதன் யாப்பில் எழுதி வைக்கவில்லை. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் அதற்கு விதிவிலக்கல்ல. எல்லா அரசியல் கட்சிகளும் தனி நபரை முன்னிறுத்தியதாகவே உருவாக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் விசேடமாக தலைவர்தான் எல்லாம் என்ற நிலையில் அடுத்த ஆளுமைகளுக்கு அங்கே இடமேயில்லை. யாப்பில் ஏற்பாடு இல்லாத போது ஹக்கீம் போன்ற தனி நபரை மையப்படுத்திய கட்சிகள் தலைவரின் மரணத்தின் பின் பிளவுபடுவது என்பது இயற்கையானதாகும்.
ஹக்கீமை பொறுத்தவரையில் அவரின் மரணத்துடன் கட்சியும் மரணிக்க வேண்டும் என்பதே அவரின் விருப்பமாகும். கட்சிக்குள் எந்த ஆளுமைகளையும் வளர விடுவதுமில்லை, வளர்ப்பதுமில்லை. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்பது இப்போது முஸ்லிம்களுக்கு மிக அவசியமானதாகும். தீர்வு திட்டம் பற்றி பேசப்படுகின்ற இச் சந்தர்ப்பத்தில் முஸ்லிம்களிடம் உள்ள ஒரே ஓட்டைத் தோணி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மாத்திரமே. இச்சந்தர்ப்பத்தில் ஹக்கீம் திட்டமிட்டு கொல்லப்பட்டால் அல்லது திடீரென மரணமடைந்தால் கட்சியை தலைமை தாங்குவது ஹரீஸ் எம்பியா? நிஷாம் காரியப்பரா? அல்லது நஸீர் ஹாபிஸா? என்ற கேள்வி மக்களிடம் தற்போது எழத் தொடங்கியுள்ளது. இவர்களில் யார் வந்தாலும் கட்சி மரணத்தை தழுவும் என்பதில் மக்களுக்கு சந்தேகமேயில்லை.
இதே போன்றுதான் அதாவுல்லாஹ்வின் மரணத்தின் பின் அந்தக் கட்சியை யார் வழிநடத்துவார்? றிஷாத் பதியுதீனின் மரணத்தின் பின் அந்தக் கட்சியின் நிலை என்ன, அப்துல் றஹ்மானின் மரணத்தின் பின் நிலை என்ன? முஸ்லிம் பிரதேச மக்கள் இது பற்றி தற்போது சிந்திக்க தொடங்கியுள்ளார்கள். முஸ்லிம் மக்களின் அரசியல் கோரிக்கைகள் வென்றெடுக்கப்பட அரசியல் அமைப்பு க்களின் ஸ்திரமான அமைப்பு முக்கியமானதாகும். சுவர் இருந்தால்தான் தானே சித்திரம் வரையலாம்.