Breaking
Sun. Nov 24th, 2024

(அமைச்சரின் ஊடகப்பிரிவு)

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அக்கரைப்பற்று பிராந்தியக் காரியாலயம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் காரியாலயமாக மாற்றப்பட்டுள்ளதாக, முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் உச்சபீட உறுப்பினரும், முன்னாள் அக்கரைப்பற்று மாநகர சபை எதிர்கட்சித் தலைவரும், ஐக்கிய மக்கள் கூட்டமைப்பில் இணைந்துகொண்டவருமான மௌலவி ஹனீபா மதனி தெரிவித்தார்.

முஸ்லிம் காங்கிரஸின் அக்கரைப்பற்று பிராந்தியக் காரியாலயத்தை, மக்கள் காங்கிரஸின் பிராந்தியமாக மாற்றும் நிகழ்வு நேற்று மாலை (14) இடம்பெற்றபோது, பிரதம அதிதியாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கலந்துகொண்டார்.

இந்த நிகழ்வுக்கு தலைமை வகித்த மௌலவி ஹனீபா மதனி கூறியதாவது,

முஸ்லிம் சமூகத்தின் பல்வேறு பிரச்சினைகளை தீர்ப்பதற்காகவும், தான் பிறந்த மண்ணான அக்கரைப்பற்று பிரதேச மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தீர்க்கும் வகையிலும், கடந்த காலங்களில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் இணைந்து தாம் பணியாற்றிய போதும் அதில் ஏமாற்றமே கிடைத்தது. எமக்கு வழங்கப்பட்ட எந்தவொரு வாக்குறுதிகளும் இதுவரையில் நிறைவேற்றப்படவில்லை.

இந்த நிலையிலேதான் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமயிலான மக்கள் காங்கிரஸ் அங்கம் வகிக்கும், ஐக்கிய மக்கள் கூட்டமைப்பில் நாம் இணைந்து பணியாற்ற முடிவெடுத்தோம்.

முஸ்லிம் காங்கிரஸின் அக்கரைப்பற்று மத்திய குழு உறுப்பினர்களான எம்.ஏ.மொஹிடீன், எச்.என்.நளீம், எம்.பி.அமீன், எஸ்.எம்.எம்.ஜெமீல் ஆகியோரும் இந்த தூய பயணத்தில் இணைந்துகொண்டமை வரவேற்கத்தக்கது.

அக்கரைப்பற்று மக்கள் காலாகாலமாக பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். அவற்றில் புரையோடிப்போய்க் கிடக்கும் வட்டமடு பிரச்சினை, அக்கரைப்பற்று நுரைச்சோலை வீடமைப்புத் திட்டம் ஆகிய பல்வேறு பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படாமல் இழுத்தடிக்கப்படுகின்றன.

முஸ்லிம் காங்கிரஸ் பல தசாப்தங்களாக அரசியல் அதிகாரத்தில் இருந்தபோதும், இந்தப் பிரச்சினைகளை இன்னும் தீர்த்துவைக்கவும் இல்லை, தீர்க்க எத்தனிக்கவும் இல்லை. இந்த நிலையில் முஸ்லிம் காங்கிரஸுக்கு வாக்களித்த ஆயிரக்கணக்கான மக்களும், அவர்களின் பிரதிநிதிகளான நாங்களும் மனமுடைந்து போயிருக்கின்றோம்.

இதனாலேதான், முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு முன்னின்று செயற்படும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அங்கம் வகிக்கும் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பில் நாம் இணைந்து, சமூகத்தின் விடிவுக்காக பாடுபட எண்ணுகின்றோம். அரசாங்கத்தின் பலமான அமைச்சரான அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வழியாக சமூகத்துக்கான எமது பிரச்சினைகளைத் தீர்த்துவைக்க முடியுமென நாம் திடமாக நம்புகின்றோம்.

இறைவனின் நாட்டமின்றி எதுவுமே நடக்காது என்ற உறுதியான நம்பிக்கையில் வாழும் முஸ்லிம்களாகிய நாம், சுயலாபங்களை கருத்திற்கொள்ளாமல் இந்தப் பயணத்தை முன்னெடுத்துச் செல்வோம் என உறுதியளிக்கின்றோம்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *