(துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை)
அமைச்சர் ஹக்கீம், தனது அரசியல் அஸ்தமன காலத்தை நோக்கி வேகமாக பயணித்து கொண்டிருக்கின்றார். அவரது அரசியல் அழிவை நோக்கிய பயணத்துக்கு, அவரது எதிரிகளை விட, அவரைச் சூழவுள்ளவர்கள் பிரதானமானவர்கள் என்பது தான் மிக முக்கியமான விடயம். அதில் முக்கியமான ஒருவராக முன்னாள் முதலமைச்சர் நஸீர் ஹாபிசை சுட்டிக் காட்டலாம். அவர் அண்மையில் “நான் விரைவில் பாராளுமன்றம் சென்று அமைச்சராவேன்” என கூறியிருப்பதானது இன்னும் அமைச்சர் ஹக்கீமை நெருக்கடிக்கும் தள்ளப்போகிறது என்பதில் ஐயமில்லை.
அவர் பாராளுமன்ற உறுப்பினர் ஆவதானது, மு.காவிடமுள்ள தேசியப்பட்டியல் மூலமே சாத்தியமாகும். இந்த தேசியப்பட்டியலானது அட்டாளைச்சேனைக்குரியது. இதனை இவர் இந் நேரத்தில் தெரிவித்துள்ளமையானது அட்டாளைச்சேனை வாக்கு வங்கியில் பெரும் தாக்கத்தை செலுத்தும். முஸ்லிம் கூட்டமைப்பினுடைய தாக்கம் அதிகம் உள்ள அட்டாளைச்சேனை மக்களை இந் நேரத்தில் குழப்புவது, தேசியப்பட்டியலை நோக்கி திருப்புவது மு.காவுக்கு மிகவும் பாதகமான செயலாகும்.
அமைச்சர் ஹக்கீம் முன்னாள் கிழக்கு முதலமைச்சர் நசீரை கண்டு சில காரணங்களால் அஞ்சுவதாக நம்பப்படுகிறது. இந்த விடயமானது பல விடயங்களில் இவர்கள் இருவருக்குமிடையில் உள்ள தாருஸ்ஸலாம் விவகாரம் போன்ற சில தொடர்புகளை உறுதி செய்வதாக அமைகிறது. இவர்கள் இருவருக்குமிடையில் உடைக்க முடியாத உறவு ஒன்று இருக்க வேண்டும். இல்லாவிட்டால் ஏன் வழங்க வேண்டும் அல்லது அஞ்ச வேண்டும்?
ஏறாவூரில் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் உள்ளார். அந் நிலையில், எத்தனையோ ஊர்களில் தேசியப்பட்டியலின் தேவை உள்ள போது அவ் ஊருக்கு இன்னுமொரு பாராளுமன்ற உறுப்பினரை வழங்குவது மு.கா ஆதரவாளர்களின் அதிக எதிர்ப்பை பெறும். ஏறாவூரில் பாராளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர் மௌலானாவுக்கும் நஸீர் ஹாபிசுக்கும் இடையில் யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. இந் நிலையில் நஸீர் ஹாபிசுக்கு தேசியப்பட்டியலும் அமைச்சுப் பதவியும் வழங்கப்படுமாக இருந்தால், அது நேரடியாக பா.உ அலி சாஹிர் மௌலானாவை அவமானப்படுத்துவதாக அமையும். இதன் போது அவர் மிகக் கடுமையான தீர்மானத்தை நோக்கி நிச்சயம் நகர்வார். அல்லாது போனால், அவரது தன் மானத்தை சற்று உரசிப் பார்க்க வேண்டி வரும்.
இன்று முஸ்லிம் காங்கிரஸ் பற்றி பலவாறான பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. அமைச்சர் ஹக்கீம் இவ் வேலையை செய்வாராக இருந்தால் அவை அனைத்தையும் இச் செயல் உண்மைப்படுத்துவதாக அமையும். இன்று மு.காவை அதிகம் நேசிக்கும் உண்மைப் போராளிகள் நஸீர் ஹாபிஸ் மீது அதிகம் வெறுப்புக்கொண்டே உள்ளனர்.
இவருக்கு அமைச்சு வழங்குவதென்றால், இன்று அமைச்சர் ஹக்கீம் பிரதி அமைச்சை வழங்கியுள்ள ஒருவரிடமிருந்து பிரதி அமைச்சை எடுக்க வேண்டி வரும். இரண்டு அமைச்சு, இரண்டு பிரதி அமைச்சு வழங்கும் அளவு ஐக்கிய தேசியக் கட்சியிடம் அமைச்சுப் பதவி இல்லை.அவர்கள் இருவரும், இந் நேரமே தங்களது பதவிகளை தக்க வைத்துக்கொள்ள முயற்சி செய்வார்கள். இதுவும் அமைச்சர் ஹக்கீமுக்கு தலையிடியாக அமையும்.
இவருக்கு பிரதி அமைச்சை வழங்குவதன் பின்னால் ஐக்கிய தேசிய கட்சி உள்ளதாக சிலாகிக்கப்படுகிறது. இவருக்கு ஐக்கிய தேசிய அமைச்சுப் பதவி வழங்குகின்றதென்றால் இவரின் செயற்பாடு எந்த விதத்தில் அமையும் என்பதை யூகிக்க முடியும். இவரை மு.கா போராளிகளே ஒதுக்க வேண்டும். அமைச்சர் ஹக்கீம் கலகெதர தொகுதொயின் அமைப்பாளராக உள்ள போது, இது என்ன பெரிய விடயமா?
எது எப்படி இருப்பினும், முன்னாள் கிழக்கு முதலமைச்சர் நஸீர் ஹாபிசுக்கு தேசியப்பட்டியல் வழங்குவதானது அமைச்சர் ஹக்கீமை பெரும் நெருக்கடிக்குள் தள்ளும் என்பதில் ஐயமில்லை.