நாடாளுமன்றத் தேர்தலில் கூடுதலான ஆசனங்களைப் பெற்றுக்கொள்வதே எமது நோக்கம். அதற்காக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ‘மொட்டு’ சின்னத்தில் போட்டியிடுவதில் எமக்குப் பிரச்சினை இல்லை.
அதேவேளை, வடக்கு, கிழக்கில் ‘வெற்றிலை’ அல்லது ‘கை’ சின்னத்தில் தனித்துப் போட்டியிடுவது தொடர்பிலும் கலந்துரையாடி வருகின்றோம்.”
இவ்வாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த இராஜாங்க அமைச்சர் திலங்க சுமதிபால தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,
“நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான கூட்டணியில் போட்டியிடுவது என்பதே எமது தீர்மானம்.
ஜனாதிபதித் தேர்தலில் நாங்கள் கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆதரவளித்து அவரை வெற்றிபெறச் செய்தோம்.
நாடாளுமன்றத் தேர்தலிலும் அனைவரும் இணைந்து செயற்பட்டால்தான் ஜனாதிபதியின் வேலைத்திட்டத்தை முன்னுக்குக் கொண்டு செல்லலாம்.
எந்தச் சின்னத்தில் போட்டியிடுவது தொடர்பாக நாங்கள் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. எனினும், தற்போதுள்ள நிலையில் மக்கள் மத்தியில் ‘மொட்டு’ சின்னமே பிரபலமடைந்திருக்கின்றது.
அத்துடன், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பொறுத்தவரை 22 மாவட்டங்களிலும் ஒரே சின்னத்தில் போட்டியிடாமல், 15 மாவட்டங்களில் ஒரு சின்னத்திலும் அதாவது ‘மொட்டு’ சினத்திலும், ஏனைய மாவட்டங்களில் ‘வெற்றிலை’ அல்லது ‘கை’ சின்னத்தில் போட்டியிடுவது தொடர்பாகவும் கலந்துரையாடி வருகின்றோம்.
ஏனெனில் கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வடக்கு, கிழக்கில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு குறிப்பிடத்தக்க வாக்குகள் கிடைக்கப்பெற்றன. அந்த வாக்குகளைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்” – என்றார்.