மன்னார் மாவட்டத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு உடமைகளை இழந்த பொது மக்களுக்கான இழப்பீட்டு தொகை வழங்கும் நிகழ்வு நேற்று (3) மன்னார் அரசாங்க அதிபர் திருமதி.அ.ஸ்ரான்லி டிமெல் அவர்களின் தலைமையில் மன்னார் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான காதர் மஸ்தான் அவர்கள் அதிதியாக கலந்து கொண்டு இழப்பீட்டு தொகைகாண காசோலைகளை பயனாளிகளிடம் கையளித்தார்.
நிதியமைச்சின் நஷ்டஈட்டு அலுவலகத்தின் ஊடாக வழங்கப்பட்ட இக் கொடுப்பனவானது யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட , வறிய மற்றும் உடமைகளை இழந்த மக்களுக்காக வழங்கிவைக்கப்பட்டது.
குறித்த கொடுப்பனவானது 56 பயனாளிகளுக்கு மொத்தமாக 20 இலட்சத்து 62 ஆயிரத்து 431 ரூபாய்க்கான காசோலை மற்றும் சேதமாக்கப்பட்ட 3 வணக்கஸ்தலங்கலுக்காக ஒதுக்கப்பட்ட 7 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகளும் வழங்கி வைக்கப்பட்டன.
மேலும் இக்கொடுப்பனவானது பூரணமான முறையில் விண்ணப்பங்களை சமர்ப்பித்த பயனாளிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டதுடன் இழப்பீட்டு தொகை கிடைக்க பெறாதவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு அவர்களுக்கான இழப்பீட்டு தொகை கூடிய விரைவில் வழங்கப்பட உள்ளன.
இந் நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ செல்வம் அடைக்கலநாதன், மேலதிக அரசாங்க அதிபர், திட்டமிடல் பணிப்பாளர், பிரதம கணக்காளர், பிரதம உள்ளகக் கணக்காய்வாளர், பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட பயனாளிகள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.