Breaking
Sun. Nov 24th, 2024

பயங்கரவாத அமைப்பிடம் பணத்தை பெற்று, பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக குருணாகல் வைத்தியசாலையின் மருத்துவர் மொஹமட் சிஹாப்தீன் ஷாபிக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை நிரூபிக்க போதுமான சாட்சியங்கள் இல்லை என சட்டமா அதிபர் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் துசித் முதலிகே தெரிவித்துள்ளார்.


மருத்துவர் சிஹாப்தீன் ஷாபிக்கு எதிரான வழக்கு இன்று குருணாகல் நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்டதுடன், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஷாபி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார்.

நீதிமன்றத்தில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல், மருத்துவர் ஷாபிக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள பயங்கரவாத ஊக்குவிப்பு தொடர்பாக குற்றச்சாட்டை நிரூபிக்க சாட்சியங்கள் இல்லை என கூறியதை அடுத்து, ஷாபியை மூன்று மாதங்கள் தடுத்து வைத்து விசாரிக்க நேற்று வழங்கப்பட்ட உத்தரவு இரத்துச் செய்யப்பட்டது.

அத்துடன் மருத்துவருக்கு எதிரான சொத்து குவிப்பு குற்றச்சாட்டு குறித்து தொடர்ந்தும் விசாரணை நடத்தப்படுகிறது எனவும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

குருணாகல் வைத்தியசாலையில் செய்யப்பட்டதாக கூறப்படும் சந்தேகத்திற்குரிய சிசேரியன் சத்திர சிகிச்சை சம்பந்தமாக 850 தாய்மார் செய்துள்ள முறைப்பாடுகள் தொடர்பில், தாய்மாரிடம் தனித்தனியாக வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இது சம்பந்தமான தடயங்களை பெற்று முழுமையான விசாரணை நடத்த வேண்டியுள்ளது.

அத்துடன் குருணாகல் வைத்தியசாலையில், ஏனைய மருத்துவர்கள் தனித்தனியாக மேற்கொண்ட சிசேரியன் சத்திர சிகிச்சைகள் தொடர்பான அறிக்கைகளை பெற்று, அந்த மருத்துவர்கள் செய்த சிகிச்சைகள், அதனால், ஏற்பட்ட மாற்றங்கள் தொடர்பாக அறிக்கை தயாரிக்க வேண்டும் என பிரதி சொலிசிட்டர் ஜெனரல் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை மருத்துவர் ஷாபியிடம் சத்திர சிகிச்சை செய்துகொண்ட பின்னர், இரண்டு வருடங்களாக பிள்ளை பிறக்கவில்லை என்று முறைப்பாடு செய்துள்ள 147 தாய்மார் சம்பந்தமாக எஸ்.எச்.ஜீ. பரிசோதனை நடத்தப்பட வேண்டும் என விசேட மருத்துவ குழு வழங்கிய ஆலோசனையை கட்டாயம் செய்யுமாறு உத்தரவிட வேண்டும் எனவும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றத்தில் கேட்டுக்கொண்டார்.

இதன் போது கருத்து வெளியிட்ட நீதவான், மருத்துவர் ஷாபிக்கு எதிராக குருணாகல் மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு கிடைத்துள்ள முறைப்பாடுகளை எவராது திரும்ப பெற்றிருந்தால், அது எதிர்கால விசாரணைகளுக்கு தடையாக இருக்கும் எனக் கூறினார்.

இதற்கு பதிலளித்த குருணாகல் வைத்தியசாலையின் பணிப்பாளர் மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோர் எவரும் அப்படி முறைப்பாடுகளை திரும்ப பெறவில்லை என தெரிவித்தனர்.

இதனிடையே மருத்துவர் சிஹாப்தீன் ஷாபியிடம் சிசேரியன் சத்திர சிகிச்சை செய்து கொண்ட தாய்மார், இன்று நீதிமன்றத்திற்கு வந்திருந்தனர். அவர்கள் குருணாகல் ஏகந்த விகாரைக்கு அருகில் இருந்து பேரணியாக நீதிமன்றத்திற்கு வந்தனர். நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரரும் இதில் கலந்துக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *