இலங்கையில் இயங்கி வரும் ஷரீஆ வங்கி முறைமையை தடைசெய்யுமாறு பொதுபலசேனா அமைப்பு ஜனாதிபதி, பிரதமரிடம் கோரிக்கை முன்வைத்துள்ள நிலையில், அவ்வமைப்பின் குற்றச்சாட்டுக்கள் சட்டத்தை அவமதிக்கும் செயல் எனவும், சட்ட ரீதியாகவே இந்நாட்டில் ஷரீஆ வங்கிகள் இயங்கி வருவதாகவும் மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
இதேவேளை, இலங்கையில் ஷரிஆ வங்கி முறை சட்டத்தினால் அங்கீகரிக்கப்பட்டதாகும். மத்திய வங்கி இதற்கான அனுமதியை வழங்கியுள்ளது. நாடாளுமன்றத்தில் சட்டமாக்கப்பட்டதன் பின்பே இவ்வங்கி முறைமை நாட்டில் அமுலிலுள்ளது. இதனை பொதுபலசேனா அமைப்பினால் சவாலுக்குட்படுத்த முடியாது என அவர் மேலும் தெரிவித்தார்.
‘இலங்கை இஸ்லாமிய அபிவிருத்தி வங்கியில் உறுப்புரிமை பெறக்கூடாதெனவும் இலங்கையில் ஷரிஆ வங்கி முறையை தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனவும் பொதுபலசேனா அமைப்பு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் மத்திய வங்கி ஆளுநரிடம் கோரிக்கை விடுத்திருப்பது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் இதனைத் தெரிவித்தார்.
அவர் இது தொடர்பில் மேலும் கூறியதாவது,
பொதுபலசேனா சட்ட ரீதியாக அனுமதிக்கப்பட்டுள்ள ஷரிஆ வங்கி முறையில் கைவைக்க முடியாது. நாடாளுமன்ற சட்டமொன்றில் மூலம் நடைமுறையிலுள்ள ஷரீஆ வங்கி முறையை இல்லாமற் செய்யக் கோருவது கேலிக்குரியதாகும். பொதுபலசேனா அமைப்பின் கோரிக்கையை எந்தவகையிலும் அனுமதிக்க முடியாது. இதனை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
ஜனாதிபதி இந்த விவகாரம் தொடர்பில் தேசிய கொள்கை, பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் எம்.ஐ.எம்.ரபீக்கிடம்; அறிக்கை கோரியுள்ளார். பிரதமர் உள்ளிட்ட முக்கிய தரப்புகளுடன் கலந்துரையாடிய பின்னர் அவ்வறிக்கை சமர்;ப்பிக்கப்படவுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் மத்திய வங்கி ஆளுனர் அர்ஜுன் மஹேந்திரன் இது தொடர்பில் பொதுபலசேனாவுக்கு உரிய விளக்கத்தினை வழங்குவார்கள் என எதிர்பார்கிறேன்- எனத்தெரிவித்தார்.