தமது கட்சி கிழக்கு மாகாண சபையை கைப்பற்றுமாயின் ஐந்து வருடங்களுள் குடிசை வீடுகளில் ஒழிப்போம் என அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தேசிய தலைவரும் அமைச்சருமான ரிசாத் பதியுதீன் சொல்லியிருப்பதை வை. எல் .எஸ் ஹமீத் கொச்சிப்படுத்தியுள்ளமை அவரது அரசியல் அறிவுக்குறையை காட்டுகிறது. என உலமா கட்சி தெரிவித்துள்ளது.
அக்கட்சி மேலும் தெரிவித்துள்ளதாவது,
அரசியல் அதிகாரத்தின் மூலம் நடக்க முடியாத எதையும் சாதிக்க முடியும் என்பதை இந்த நாட்டின் அரசியல் காட்டித்தந்துள்ளது. ஒரு ஆளும் கட்சி உறுப்பினர் மாகாண சபை உறுப்பினராக இருந்தால் அவர் மாகாண சபையின் ஒதுக்கீடு மட்டுமன்றி சர்வதேச உதவிகளையும் பெற முடியும். இதனால்தான் கல்முனை முஸ்லிம் காங்கிரசின் மேயராக இருந்த நிசாம் காரியப்பர் கல்முனையை ஜேர்மணியுடன் இணைக்கப்போவதாக மக்களை ஏமாற்றினார். ஒரு மாநகர மேயரால் சர்வதேசத்தின் நிதியுதவியை பெற முடியாது என்றிருப்பின் சட்டத்தரணியான நிசாம் காரியப்பர் இவ்வாறு சொல்லியிருக்க மாட்டார்.
உண்மையில் நிசாம் காரியப்பரால் அவ்வாறு செய்யக்கூடிய அரசியல் அதிகாரம் இருந்தும் செய்யாமைக்கு காரணம் மக்கள் பற்றிய கவலை இல்லாமையும், மக்களிடம் பொய் சொல்லி ஏமாற்றும் கொள்கை கொண்ட முஸ்லிம் காங்கிரசின் பிரதிநிதியாக அவர் இருந்ததுமாகும்.
ஆனால் அமைச்சர் ரிசாத் பதியுதீன் தனக்கிருக்கும் அரசியல் அதிகாரங்களையும் தாண்டி மக்களுக்கு சேவை செய்யக்கூடியவர் என்பதை நாட்டு மக்கள் மட்டுமல்ல இனவாதிகள் கூட அறிவர். அதன் காரணமாகவேதான் அவரை இனவாதிகள் எதிர்க்கின்றனர்.
அமைச்சர் ரிசாத் பதியுதீன் வடமாகாண முஸ்லிம்களின் வீட்டுப்பிரச்சினையை தீர்க்கவில்லை என வை. எல். எஸ் போன்றோர் சொல்வது பிழையான குற்றச்சாட்டாகும். அம்மக்கள் பல வருடங்களாக அகதியாக வாழ்ந்த மக்கள் என்பதால் அவர்களின் தேவைகளை முழுமைப்படுத்துவது என்பது இலேசுப்பட்ட விடயமல்ல. இருந்தாலும் அமைச்சர் ரிசாத் தனக்கிருக்கும் அதிகாரத்தை பயன்படுத்தி அம்மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வருகிறார்.
அவரின் வேண்டுகோளை ஏற்று ஜாசிம் சிட்டி என்ற பெயரில் வெளிநாட்டு நிறுவனம் வீடுகள் கட்டிக்கொடுத்திருப்பதைக்கூட சிங்கள் இனவாதிகள் குதறியதை நாம் அறிவோம்.
அமைச்சர் ரிசாதுக்கு சிங்கள, தமிழ் இனவாதிகள் தடையாக இல்லாமல் இருந்திருந்தால் வட மாகாண முஸ்லிம்களின் பிரச்சினைகள் கணிசமாக தீர்ந்திருக்கும்.
ஆனால் கிழக்கின் கள நிலவரம் அப்படியல்ல. கிழக்கு மாகாண சபையின் அதிகாரம் அமைச்சர் ரிசாதின் கட்சிக்கு கிடைத்தால் கிழக்கின் குடிசைகளை ஒழிப்பது இலகுவானதாக அமையும் என்பதை நாம் நம்பலாம். காரணம் மக்களை ஏமாற்ற நினைக்காத ஒரு கட்சி மாகாண சபையின் பொறுப்பை ஏற்றால் நிச்சயம் அக்கட்சியால் சர்வதேச உதவியுடன் மாகாணத்தை கட்டியெழுப்ப முடியும்.
நாம் இவ்வாறு சொல்வதால் அமைச்சருக்கு ஒரு பக்க ஆதரவாக பேசுவதாக நினைக்கலாம். ஆனால் நாம் எந்த நிலையிலும் உண்மை பேசும் அரசியல்வாதிகளாகும். எமது கட்சி அமைச்சர் ரிசாதின் கட்சியுடன் மீண்டும் இணைவதற்கு முன்பு அமைச்சர் என்னிடம் தேசிய பட்டியல் எம் பியை புத்தளத்துக்கு கொடுத்தது பிழையா என கேட்ட போது, வை எல் எஸ் மிக மோசமான அரசியல்வாதி என்று நாம் அனுபவப்பட்ட நிலையிலும் புத்தளத்துக்கு தேசிய பட்டியல் வழங்குவது தவறில்லை. ஆனாலும் முதல் இரண்டு வருடங்கள் வை எல் எஸ்சுக்கு கொடுத்து விட்டு அடுத்த இரு வருடம் புத்தளத்துக்கு கொடுத்திருக்கலாம் என்ற எமது பக்க நியாயத்தை சொன்னோம். அக்கருத்தை அமைச்சர் ரிசாதும் அமைதியாக செவி மடுத்தார்.
ஆகவே கிழக்கு மாகாண சபை மீண்டும் மது, மாது, சூது எனத்திரியும் முஸ்லிம் காங்கிரசிடம் கொடுத்து முஸ்லிம்கள் தமது தலையில் தாமே மீண்டும் மண்ணை அள்ளிப்போடாமல் கட்சி மாற்றத்திற்கும் ஆட்சி மாற்றத்திற்கும் தயாராக வேண்டும் என உலமா கட்சி கிழக்கு மக்களை கேட்டுக்கொள்கிறது.