பிரதான செய்திகள்

“வேண்டாத பொண்டாட்டியின் கை பட்டாலும் குற்றம் கால் பட்டாலும் குற்றம்” வை.எல்.எஸ் ஹமீட்டின் நிலை

(இப்றாஹீம் மன்சூர்)

 

“வேண்டாத பொண்டாட்டியின் கை பட்டாலும் குற்றம் கால் பட்டாலும் குற்றம்” என்ற பழ மொழியை நினைவு படுத்தியவனாக இக் கட்டுரையை வரையலாம் என நினைக்கின்றேன்.வை.எல்.எஸ் ஹமீத் அமைச்சர் றிஷாத் மீது கொண்ட கோபத்தை,அவரை எழுத்தின் மூலம் கரித்து கொட்டுவதிலிருந்து தீர்க்கலாம் என சிந்திக்கின்றார்.தற்போது வை.எல்.எஸ் ஹமீதிற்கு அரசியல் ரீதியான எந்த தளமுமில்லை.எதிர்வரும் காலங்களில் முஸ்லிம் கூட்டமைப்பு உருவாவதற்கான சாதக நிலை உருவாகி வருகிறது.இந்த கூட்டமைப்பில் வை.எல்.எஸ் ஹமீதும் நுழைந்து கொண்டால் மிக இலகுவாக தனக்கான தளத்தை கட்டமைத்து கொள்ளலாம்.அதற்கு “நானும் ரௌடி தான்” என்ற வடிவேலின் நகைச்சுவை வரி போன்று “நானும் அரசியல் வாதி தான்” என மக்களுக்கு நினைவுபடுத்த வேண்டிய தேவை உள்ளது.அதற்கு அவர் இப்படி ஏதாவது செய்து கொண்டே இருக்க வேண்டும்.செய்து கொண்டே இருப்பார்.

 

அவர் தனது “கிழக்கு முதலமைச்சர் தனது கட்சிக்கு கிடைத்தால் கிழக்கு மாகாணத்தையே குடிசையின்றி ஆக்குவேன்” என்ற அமைச்சர் றிஷாதின் கூற்றிற்கு 12இற்கும் மேற்பட்ட வினாவை அடுக்கிய அவரது கட்டுரையை “மேற்படி செய்தியை சில அமைச்சர்கள் தெரிவிப்பதாக சமூக வலைத்தளங்கள் தெரிவிக்கின்றன” என்றே ஆரம்பிக்கின்றார்.இதிலிருந்து அமைச்சர் றிஷாத்தின் குறித்த பேச்சை இவர் முழுமையாக கேட்கவில்லை என்பதை அறிந்து கொள்ளலாம் (தேசியப்பட்டியல் விவகாரத்திலும் கேட்டிருந்தால் இவரே இன்று ராஜா என்பது வேறு விடயம்).ஒரு வரியை வைத்து ஒரு போதும் விமர்சிக்க முடியாது.முன்,பின் போன்ற பல விடயங்களை அவதானித்த பிறகே ஒன்றின் மீதான விமர்சனத்தை செய்ய வேண்டும்.இன்று பொது பல சேனா அமைப்பானது குர்ஆன் வசனங்களை முன்,பின் அவதானிக்காதே விமர்சனனம் செய்து கொண்டிருக்கின்றமையை இவ்விடத்தில் நினைவு படுத்துவது பொருத்தமாக அமையும் என நினைக்கின்றேன்.இன்று சாதாரணமாக முக நூல் நேரடி ஒளிபரப்பில் அவர் பேசிய பேச்சுக்கள் உள்ளன.அதனை சென்று பார்க்குமாறு அவரிடம் வேண்டுகோள் விடுக்கின்றேன்.

 

அவர் தனது அறிக்கையில் அமைச்சர் றிஷாத் என்ற வார்த்தையை எங்கும் பயன்படுத்தவில்லை (இது அவருக்குத் தான் எழுதப்பட்டதென்பதை சிறு பிள்ளையும் அறியும்).ஏன் பயன்படுத்தவில்லை? முழுமையாக நனைந்த பின் முக்காடு எதற்கு? அவர் தனது அறிக்கையில் “சில அமைச்சர்கள்” என்றே குறிப்பிடுகிறார்.இது பன்மை வசன அமைப்பாகும்.அவரது 11வது வினாவிலும் பன்மை வசன அமைப்பை அவதானிக்க முடிகிறது.இருப்பினும் அவரது 10வது வினா ஒருவர் கூறியதை அடிப்படையாக கொண்டுள்ளது.இன்னும் பல இடங்களில் ஒருமை வசன அமைப்பு பயன்படுத்தப்படுகிறது.அதாவது ஒருமை வசன அமைப்பு.வை.எல்.எஸ் ஹமீத் அறிக்கை எழுத முன்பு ஒருமை,பன்மை பற்றி அறிந்தெழுதுவது சிறப்பாக இருக்கும்.இதற்கு முன்பும் இவ்விடயத்தை எனது கட்டுரை ஒன்றில் சுட்டிக்காட்டிய நினைவுள்ளது.

 

இவரது கட்டுரையில் உள்ளடக்கிய வினாக்களை இரு பகுதிகளாக பிரித்து நோக்கலாம்.ஒன்று மாகாண சபையின் அதிகாரத்தை கொண்டு இதனை செய்வது சாத்தியமா? இரண்டாவது ஒரு பலமிக்க அமைச்சராக உள்ள நீங்கள் இதனை செய்ய முடியுமாக இருந்தால் ஏன் வடக்கு மீள் குடியேற்றத்தை செய்யவில்லை? இந்த இரண்டு வினாவிற்குமான பதிலை ஒரு விடயத்தை அறிந்து கொள்வதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.2012ம் ஆண்டு மாகாண சபைத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் வெறும் ஏழு ஆசனங்களை வைத்துக் கொண்டு முதலமைச்சை தீர்மானிக்கும் பேரம் பேசும் சக்தியை பெற்றுக்கொண்டது.இதன் போது அவர்கள் மஹிந்த அணியினருடன் கரையோர மாவட்டம் உட்பட பல ஒப்பந்தங்களை செய்தனர்.இன்று அதனைப் பற்றி பேச யாருமில்லை என்பது வேறு விடயம்.கரையோர மாவட்டம் இலங்கை அரசியலமைப்புடன் சம்பந்தப்பட்ட விடயம்.கிழக்கு முதலமைச்சு இலங்கையின் அரசியலமைப்பில் தாக்கம் செலுத்துமளவு சக்தி வாய்ந்ததென்பதை இதனூடாக அறிந்து கொள்ளலாம்.முதலமைச்சு பதவியை நேரடியாக நோக்குகின்ற சக்தி மிக்கதோ இல்லையோ மறைமுகமாக பல விடயங்களை அதனூடாக சாதிக்கலாம்.இந் நிலையில் முதலமைச்சுக்கும் கரையோர மாவட்டத்திற்கும் என்ன சம்பந்தமுள்ளதென வை.எல்.எஸ் ஹமீத் கேட்பாரா?

 

அமைச்சர் றிஷாத் திருகோணமலையில் சில விடயங்களை செய்ய நினைத்த போது தனது மாகாண சபை அதிகாரத்தை கொண்டு முதலமைச்சர் தடுத்தி நிறுத்தி இருந்தார்.இதனை அமைச்சர் றிஷாத் குறித்த தினம் தனதுரையில் குறிப்பிட்டிருந்தார்.இதனை தடுக்கும் அதிகாரம் முதலமைச்சுக்குள்ளதா என சிந்தித்தால் “ஆம்” என்றே கூறலாம்.ஒரு மாகாணத்தின் முக்கிய அரசியல் பதவி முதலமைச்சாகும்.எனவே,கிழக்கு மாகாணத்தில் ஒரு வேலை செய்ய வேண்டுமாக இருந்தால் கிழக்கு முதலமைச்சரின் ஆதரவு சில இடங்களில் நேரடியாகவும்,மறைமுகமாகவும் தேவைப்படும்.இலங்கை முஸ்லிம்களுக்கு உள்ள மிகப் பெரும் பேரம் பேசும் சக்தி கிழக்கு முதலமைச்சு மூலமே கிடைக்கும்.இதனை அமைச்சர் ஹக்கீம் தனது 27வது பேராளர் மாநாட்டு தலைவர் உரையில் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.இப்படி பல விடயங்களை அடிப்படையாக கொண்டே அமைச்சர் றிஷாத் கிழக்கு முதலமைச்சர் தனது கட்சிக்கு கிடைத்தால் கிழக்கு மாகாணத்தையே குடிசையின்றி ஆக்குவேன் என்று கூறி இருந்தாரே ஒழிய வை.எல்.எஸ் ஹமீத் சிந்திப்பது போன்றல்ல.வை.எல்.எஸ் ஹமீத் ஒரு வசனத்தை வைத்து விமர்சிக்கும் கீழ் தரமான நிலைக்கு தள்ளப்பட்டமையே கவலைக்குரிய விடயமாகும்.உங்கள் ஆட்டங்கள் இங்கே செல்லாது.வேறு பக்கம் சென்று விளையாடுங்கள்.

Related posts

நடுக்கடலில் சிக்கிய 700 கிலோ கிராம் ஹெரோயின் மற்றும் ஐஸ்​ போதைப்பொருள்.

Maash

விவசாயத்துறையில் மாற்றம்! 3போக பயிர் செய்கை

wpengine

கிழக்கில் கொந்தளிப்பு! பல பகுதிகளில் ஹர்த்தால் கடையடைப்பு!

wpengine