இம்முறை உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் பல்வேறு குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்கியுள்ளவர்களின் விபரங்கள் அடங்கிய அறிக்கையை இன்று முற்பகல் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிடம் கையளித்ததாக பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.
பொலிஸ் தலைமையகத்தில் இன்று முற்பகல் பெப்ரல் அமைப்பு பொலிஸ் மா அதிபரை சந்தித்ததுடன் அப்போது பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் பலர் சந்திப்பில் கலந்துக்கொண்டதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி குறிப்பிட்டுள்ளார்.
வேட்புமனு தாக்கல் செய்யப்பட்ட இறுதி தினத்தன்று ஊர்வலம் சென்ற வேட்பாளர்களுக்கு எதிராக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் வன்முறை மற்றும் மோசடிகளுடன் தொடர்புடைய சுமார் 50 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் மா அதிபர் கூறியதாகவும் ஹெட்டியாராச்சி குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து இதுவரை காலம் பொலிஸாரின் செயற்பாடுகளை பாராட்டியதாகவும் தொடர்ந்தும் தேர்தல் முடியும் வரை பொலிஸாரின் இந்த சேவை கிடைக்கும் என நம்பிக்கை வெளியிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்