(சுஐப் எம்.காசிம்)
வெள்ளத்தால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு, வடமேல் மாகாண மக்களுக்கு அவசர நிவாரண உதவிகளை வழங்குமாறு கைத்தொழில், வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீன், அமைச்சர் அனுரபிரியதர்ஸன யாப்பாவிடம் விடுத்த வேண்டுகோளை அடுத்து, குறிப்பிட்ட மாகாணங்களில் அமைந்துள்ள, அனைத்து மாவட்டச் செயலாளர்களுக்கும் உரிய நடவடிக்கை எடுக்குமாறு, அமைச்சர் அனுர பிரியதர்ஸன யாப்பா அவசர பணிப்புரை விடுத்துள்ளார்.
இன்று (16/05/2016) காலை அமைச்சர் அனுர பிரியதர்ஸன யாப்பாவுடன் தொடர்புகொண்ட அமைச்சர் றிசாத் பதியுதீன், கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் பெருமழையினாலும், வெள்ளப் பெருக்கினாலும் பல்வேறு மாவட்டங்களில், தாழ்நிலப் பிரேசங்களில் வாழும் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பல குடும்பங்கள் பொது இடங்களில் தஞ்சமடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
முல்லைத்தீவில் 60 குடும்பங்களும், வவுனியாவில் 247 குடும்பங்களும், மன்னாரில் 51 குடும்பங்களும் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள அமைச்சர், எவ்வளவு விரைவாக உலர் உணவுகளை அனுப்ப முடியுமோ, அந்தளவு விரைவாக அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார். அத்துடன் புத்தளம் மாவட்டத்தில் பல வீடுகள் வெள்ளத்தில் அமிழ்ந்து கிடப்பதாக, புத்தள அரசாங்க அதிபரிடம் அமைச்சர் தெரிவித்தார்.
இதேவேளை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் எம்.பிக்கள் அனைவரையும், பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் சென்று, மக்களின் கஷ்டங்களைத் தீர்த்து வைக்குமாறு அமைச்சர் கோரியுள்ளார்.
நாட்டின் அசாதாரண காலநிலையால் மக்கள் படுகின்ற கஷ்டங்களை உணர்ந்து, பரோபகாரிகளும். வசதி படைத்தவர்களும் தங்களால் முடிந்த உதவிகளைப் புரியுமாறும் அமைச்சர் றிசாத், அன்பான வேண்டுகோள் ஒன்றையும் விடுத்துள்ளார்.