Breaking
Mon. Nov 25th, 2024

ஜனாதிபதி பணிப்புரை….

• சிரேஷ்டத்துவத்திற்கு பாதிப்பு ஏற்படாமல் அரச ஊழியர்களுக்கு வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்ல சந்தர்ப்பம்…

• பல்நோக்கு வேலைத்திட்டத்தின் கீழ் பணியமர்த்தப்பட்ட பணியாளர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு…

பல்வேறு துறைகளில் திறமையான தொழிலாளர்களுக்கு ஜப்பான், போலாந்து மற்றும் ருமேனியா உள்ளிட்ட நாடுகளில் பல்வேறு வேலை வாய்ப்பு வெற்றிடங்கள் உள்ளன. அந்த வாய்ப்புகளை இலக்காகக் கொண்டு மொழி மற்றும் தொழில் பயிற்சி வேலைத் திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்.

திறமையான பணியாளர்களை வெளிநாட்டு வேலைவாய்ப்புச் சந்தைகளுக்கு உள்ளீர்க்கும் வேலைத்திட்டத்தின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்வதற்காக இன்று (25) முற்பகல் கொழும்பு, கோட்டை ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி அவர்கள் இதனைத் தெரிவித்தார்.

நிலவுகின்ற பொருளாதார பின்னடைவை எதிர்கொள்ளும் வகையில், அந்நியச் செலாவணி மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை பெற்றுக்கொள்வது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டுமென ஜனாதிபதி அவர்கள் மேலும் சுட்டிக்காட்டினார். திறமையான பணியாளர்களை உருவாக்குவதன் மூலம், உயர் ஊதியம் பெறும் தொழில்களுக்கான வாய்ப்புகளை அதிகளவில் பெற்றுக்கொள்ள முடியும்.

ஐரோப்பா உட்பட பல நாடுகளில் தாதியர் சேவைகளுக்கு அதிக தேவை உள்ளது. ஜப்பானில் மட்டும் முதியோர் பராமரிப்பு மற்றும் உணவு விநியோகம் சார் துறையில் 350,000 க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்பு வெற்றிடங்கள் இருப்பதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் சுட்டிக்காட்டுகிறது. அதற்கு ஜப்பானிய மொழி அறிவு கட்டாயம்.

தேசிய பயிலுனர் மற்றும் கைத்தொழில் பயிற்சி அதிகாரசபை, தொழிற்பயிற்சி அதிகாரசபை மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் உள்ளிட்ட அரச மற்றும் தனியார் துறைகளின் பங்களிப்புடன் ஜப்பானிய மொழி அறிவைப் பெற்றுக்கொடுக்கும் வேலைத்திட்டங்கள் துரிதப்படுத்தப்பட வேண்டுமென ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

தற்போது அரச சேவையில் உள்ள எந்தவொரு நபரும் அல்லது பல்நோக்கு வேலைத்திட்டத்தின் கீழ் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட ஒரு ஊழியர் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்குச் செல்வதற்கு உள்ள தடைகளை நீக்குவது குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டது. அதில் சிரேஷ்டத்துவத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக செல்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டுமென வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் மனுஷ நாணாயக்கார தெரிவித்துள்ளார். வெளிநாட்டு பணப்பரிமாற்றலுக்காக (Foreign remittances) வாகன அனுமதிப்பத்திரம், வீட்டுக் கடன்கள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு வசதிகளை வழங்குவதன் மூலம் அவர்களை ஊக்குவிக்க முடியும் என அமைச்சர் சுட்டிக்காட்டினார். தூதரகங்களின் பங்களிப்புடன் தொழில் வாய்ப்புக்களை உருவாக்குவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டுமெனவும் அமைச்சர் தெரிவித்தார்.

ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத், ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி அநுர திஸாநாயக்க மற்றும் அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் துறை சார் நிறுவனங்களின் தலைவர்களும் இச்சந்தர்ப்பத்தில் கலந்துகொண்டனர்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு
25.05.2022

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *