வெளிநாட்டவர்களை பதிவு திருமணம் செய்துகொள்ளும் இலங்கையர்கள், பாதுகாப்பு அமைச்சிடம் இருந்து “பாதுகாப்பு தடைநீக்கல் அறிக்கை” பெற்றுக்கொள்ள வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டவர்களை திருமணம் செய்துகொள்ளப்போகும் இலங்கையர்களின் திருமணம் மேலதிக மாவட்டப் பதிவாளர் ஊடாக மாத்திரமே பதிவு செய்துகொள்ள முடியும் என பதிவாளர் நாயகம் வெளியிட்டுள்ள சுற்றுநிரூபத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு நபர்களைப் பதிவு திருமணம் செய்துகொள்வதால் தேசிய பாதுகாப்புக்கு ஏற்படும் அச்சுறுத்தல்களை தடுப்பதற்காகவும், மேலும் சமூக சிக்கல்களை குறைப்பதற்காகவுமே இவ்வாறு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை பதிவாளர் நாயகம் வௌியிட்டுள்ள சுற்றுநிரூபத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கையர்களை திருமணம் செய்துகொள்ள விரும்பும் வெளிநாட்டவர்கள் அந்தந்த நாடுகளின் பாதுகாப்புப் பிரிவிடமிருந்து குற்றவாளி அல்ல என்பதற்கான சான்றிதழின் மூலப் பிரதியை, அவரின் சுகாதார நிலைமைகள் தொடர்பான அறிக்கை என்பனவும் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.