ஊடகப்பிரிவு –
வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்கள் கொரோனா வைரஸ் தாக்கத்தின் பின்னர் எதிர்நோக்கும் கஷ்டங்கள் தொடர்பில், சரியான வேலைத்திட்டமொன்றை இலங்கை அரசு முன்னெடுப்பதோடு, துன்பத்தில் வாழும் பணியாளர்களுக்கு விமோசனம் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
“அங்கு வாழும் பலர் தொழில்களை இழந்துள்ளனர். இன்னும் ஒரு பகுதியினர் சம்பளம் கிடைக்காது கஷ்டத்தில் வாழ்கின்றனர். தங்குவதற்குக் கூட சரியான இடமின்றி தவிக்கின்றனர். அன்றாட உணவுக்கே பிரச்சினையான நிலை பலருக்கு ஏற்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ள அவர் மேலும் கூறியதாவது,
“இந்த நிலையில், இலங்கையில் வாழும் தமது குடும்பங்கள் பற்றி அவர்கள் கவலை கொண்டுள்ளனர். சரியான தொடர்பாடல் வசதிகள் கிடைக்காமையினால், குடும்ப உறவுகள் தொடர்பில் அறிய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
பல நாடுகளின் தூதுவராலயங்கள் மூடப்பட்டுக் கிடப்பதால் அவற்றுடன தொடர்புகொண்டு, தமது பிரச்சினைகளைக் கூறுவதற்கு முடியாதுள்ளது.
எனவே, இலங்கை அரசு இவர்களின் விடயத்தில் கவனஞ்செலுத்த வேண்டும். இந்த நாட்டுக்குப் பெருமளவு அந்நியச்செலாவணியை உழைத்துத் தருபவர்கள் வெளிநாட்டுப் பணியாளர்கள் என மார்தட்டும் நாம், இவர்களின் விடயத்தில் அக்கறை காட்டுவதே தார்மீகக் கடமையாகும்”. இவ்வாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.