பிரதான செய்திகள்

வெல்லாவெளி பிரதேசத்திற்கு 272 வீடுகள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி

(எஸ்.எம்.எம்.முர்ஷித்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்வரும் ஐந்து வருடங்களில் வீடுகள் இல்லாமல் இருக்கும் மக்களின் பிரச்சனைகள் தீர்க்கப்படும் என்று எதிர்பார்க்கின்றோம் என கிராமிய பொருளாதார பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

செமட்ட செவன வீடமைப்பு திட்டத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் வெல்லாவெளி பிரதேச செயலாளர் பிரிவில் 272 வீடுகளுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வின் பிரதான நிகழ்வு விளாந்தோட்டத்தில் நேற்று திங்கட்கிழமை மாலை இடம்பெற்ற போதே மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்.

நல்லாட்சி அரசாங்கத்தின் மூலம் வெல்லாவெளி பிரதேசத்திற்கு 272 வீடுகள் கிடைத்துள்ளது. இன்னும் இரண்டாயிரம் வீடுகள் தேவைப்படுவதாக பிரதேச செயலாளர் என்னிடத்தில் தெரிவித்துள்ளார். இந்த நல்லாட்சியை கொண்டு வந்த எங்களுக்கு நல்லாட்சி அரசு செய்த நன்றிகளில் ஒன்றாக இந்த வீட்டுத் திட்டம் உங்கள் கைகளுக்கு கிடைத்துள்ளது.

கடந்த காலத்தில் பட்ட துயரங்கள், எதிர்காலத்தில் எங்களை துரத்தாமல் விட்டு அதில் இருந்து விடுபட்டு சிறந்த ஒரு வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதற்காக 272 குடும்பங்கள் நன்மை பெறுகின்றது என்றால் நாட்டின் ஜனாதிபதி மற்றும் பிரதமர், வீடமைப்பு அமைச்சர் சஜீத் பிரேமதாச ஆகியோருக்கு நன்றி கூற கடமைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகப்படியான வீடுகள் தேவை என்று அமைச்சர் சஜீத் பிரேமதாசவிடம் கூறியதற்கிணங்க சிங்கள பிரதேசத்தில் அமைக்கும் வீடுகளை குறைத்து மட்டக்களப்பு மாவடத்திற்கு இந்த சந்தர்;ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஐந்து வருட காலத்திற்குள் மட்டக்களப்பு மாவட்டத்தில் வீடுகள் இல்லாமல் இருக்கும் பல்லாயிரக் கணக்கான மக்களின் பிரச்சனைகள் தீர்க்கப்பட வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கின்றோம். அத்தோடு எனது கிராமிய பொருளாதார அமைச்சின் மூலம் மாவட்டத்தில் மூவாயிரம் மலசல கூடங்கள் அமைக்கும் திட்டத்தை ஆரம்பித்துள்ளோம்.

இந்த அரசாங்கம் ஒரு நிம்மதிப் பெருமூச்சு விடும் அளவிற்கு இந்தச் சந்தர்ப்பம் வழங்கியுள்ளது. விளாந்தோட்ட கிராமத்தில் காணப்படும் தண்ணீர் பிரச்சனைக்கு முதல் கட்டமாக கிராமிய பொருளாதார அமைச்சின் மூலம் ஒரு பொது கிணற்றை அமைத்து தருவேன்.

உங்களது பிள்ளைகளை கல்வி கற்க வைத்து போதையற்ற சமூகமாக நீங்கள் இருக்க வேண்டும். போதைக்கு அதிகம் செலவழிக்கும் சமூகமாக இருந்தால் வீடு கட்ட முடியாது. முஸ்லிம் பகுதிகளில் பாருங்கள் பெரிய வீடுகள் அமைத்து இருக்கின்றார்கள்.

98 வீதமான முஸ்லிம்கள் போதைக்காக செலவழிப்பது கிடையாது, எங்கள் மார்க்கத்தில் போதைக்கு தடைவிதித்திருந்து போதும் இரண்டு வீதமானவர்கள் போதைக்கு அடியானவர்களாக காணப்படுகின்ற போதும், பணத்தை சேமிப்பதிலும், பிள்ளைகளுக்கு வீடு கட்டுவது, நகைகள் வாங்குவது மற்றும் கல்வி கற்பிப்பதிலும் அதிகம் செலவு செய்கின்றார்கள். ஏன் நீங்கள் அதனை செய்ய முடியாது. இதனை யோசித்தால் நாம் முன்னேற முடியும் என்றார்.

நல்லாட்சி அரசாங்கத்தின் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் ஆலோசனைக்கமைய வீடமைப்பு அமைச்சர் சஜீத் பிரேமதாசாவின் வழிகாட்டலில் சமட்ட செவன வீடமைப்பு திட்டத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் வெல்லாவெளி பிரதேச செயலாளர் பிரிவில் 272 வீடுகளுக்கு அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது.

அந்த வகையில் வெல்லாவெளி பிரதேச செயலாளர் பிரிவில் விளாந்தோட்டம், பாலையடிவெட்டை, சுரவணையடியூற்று, திக்கோடை, தும்பங்கேணி, மாலையர்கட்டு, சின்னவத்தை போன்ற கிராமங்களில் 272 வீடுகள் அமைக்கப்படவுள்ளது.

குறித்த வீடுகளுக்கு மானியமாக ஐந்து இலட்சம் ரூபாய் அரசாங்கத்தினால் வழங்கப்படவுள்ளதுடன், 550 சதுர அடியைக் கொண்ட வீடாகவும், வீதி, குடிநீர், மின்சார உட்கட்மைப்பு வசதிகள் செய்து கொடுக்கப்படும் என்று மட்டக்களப்பு மாவட்ட வீடமைப்பு அதிகார சபையின் முகாமையாளர் எஸ்.ஜெகநாதன் தெரிவித்தார்.

வெல்லாவெளி பிரதேச செயலாளர் எஸ்.ஆர்.ராகுலநாயகி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் ஐக்கிய தேசிய கட்சியின் பட்டிருப்புத் தொகுதி அமைப்பாளர் எஸ்.கணேசமூர்த்தி, பிரதேச செயலக திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.சசிகுமார், பிரதியமைச்சரின் இணைப்பாளர் எஸ்.கண்ணன், செயலக உத்தியோகத்தர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

 

Related posts

பொத்துவில் மாணவர்களுக்கு கானல் நீராகும் கல்வி

wpengine

மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக 122 பாராளுமன்ற உறுப்பினர்கள்

wpengine

ரீசார்ஜ் செய்ய வந்த 17 வயது பெண் பலி

wpengine