Breaking
Sun. Nov 24th, 2024

(கலாபூஷணம் எஸ்.எம்.சஹாப்தீன்)

நாடு முழுவதும் எதிர்பார்க்கப்பட்ட – எண்ணிப்பார்க்கப்பட்ட உள்ளுராட்சி மன்றத் தேர்தல் கடந்த 10ஆம் திகதி நடந்து முடிந்துவிட்டது. அதன் முடிவுகள் வெளியாகி, அரசியல் அரங்கில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தி, பலரின் சிந்தனையை முடுக்கிவிட்டிருப்பது இன்று ஊரறிந்த உண்மையாகிவிட்டது. உள்ளுராட்சித் தேர்தலை தொடர்ந்து நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் கொதிநிலை மக்களை வெறுப்படையச் செய்துள்ளது. அதற்குக் காரணம் இத்தேர்தல் நாட்டில் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தி இருப்பதுதான். தேர்தல் முடிவுகள் நல்லாட்சி அரசுக்கு சாதகமாக இல்லாமையால், அரசியல் ஸ்திரமற்ற சூழல் உருவாகியுள்ளது. இதில் எல்லாக் கட்சிகளுமே தத்தம் பலத்தை பரீட்சித்துப் பார்த்த நிலைக்கு ஆளாகியுள்ளன. இந்தக் கட்சிகளுள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் நிலையையும், பெற்ற விலையையும் சற்று சிந்திப்பது பயனுடையதாகும்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் நாட்டின் பென்னாம் பெரிய கட்சியோ, பெரும்பான்மை மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் கட்சியோ, நீண்டகால வரலாற்றுப் பாரம்பரியத்தைக் கொண்ட கட்சியோ அல்ல. இக்கட்சி கடந்த 2010இல் அங்குரார்ப்பணஞ் செய்யப்பட்டு, நான்கு ஆண்டுகளில் – 2014 இல் அரசியல் ராஜபாட்டையில் அடியெடுத்து வைத்து நடக்கத்துவங்கிய, தன் அரசியல் பயணத்தை ஆரம்பித்து, நாட்டு மக்கள் அனைவரினதும், மூவினத்தாரினதும் விடியலுக்காகப் பணி செய்யத் துவங்கிய கட்சியாகும் என்பது, நாடும், ஏடும் அறிந்த உண்மையாகும்.
மக்கள் காங்கிரஸ் இந்த எட்டு வயதில் ( 2010-2018) இந்தளவு சுறுசுறுப்பாக வளர்ச்சி காணவும், தேசந் தழுவி நடைபெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தல் களத்தில் போட்டியிட பக்குவமும் – பலமும் பெற்றமைக்கு அடிப்படை காரணம், அதனை வழிநடத்தும் தலைவராகிய அமைச்சர் ரிஷாத் பதியுதீன் என்ற யதார்த்தத்தை அரசியல் அறிஞர்கள் ஏற்றுக்கொள்கின்றனர். “தலை சரியாக இருந்தால் எல்லாம் சரி” என நம் பாட்டியார் சொல்லும் ஜனரஞ்சக வார்த்தைகள், இந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸைப் பொறுத்தவரை நூறு சதவீத உண்மையேயாகும்.
இந்த உண்மையை நடந்து முடிந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள் உறுதி செய்கின்றன. எப்படி என்கிறீர்களா?

பெப்ரவரி 10 இல் நடந்து முடிந்த பிரஸ்தாப தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்தும், ஐக்கிய மக்கள் கூட்டமைப்பாகவும், தனித்தும் போட்டியிட்டது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ். 15 மாவட்டங்களில் அபேட்சகர்களை களமிறக்கி, மொத்தம் 166 ஆசனங்களைப் பெற்றுள்ளமை, இலங்கை வரலாற்றில் பெரும் வெற்றியாகும்,

இதோ… வெற்றி பெற்றோரின் விபரப்பட்டியல்:-

1. மன்னார் – 34 9. குருணாகல் – 5
2. அம்பாறை – 31 10. அநுராதபுரம் – 4
3. திருகோணமலை – 18 11. களுத்துறை – 2
4. வவுனியா – 20 12. கொழும்பு – 2
5. மட்டக்களப்பு – 14 13. கிளிநொச்சி – 2
6. முல்லைத்தீவு – 12 14. யாழ்ப்பாணம் – 1
7. கண்டி – 08 15. கம்பஹா – 1
8. புத்தளம் – 12

மொத்தம் 166 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.

நாட்டிலுள்ள மற்ற பென்னாம் பெரிய கட்சிகளுடன் ஒப்பிடும்போது, இந்த குறுகிய எட்டாண்டு கால வளர்ச்சி, இந்தளவு நிறுத்தப்பட்ட 15 மாவட்டங்களிலும் 166 பிரதிநிதிகள் தெரிவாகியுள்ளனர் என்ற தேன் செய்தி, அரசியல் அரங்கில் அரசியல் நோக்கர்களின் கவனத்தை ஈர்ந்துள்ளது. இதற்கு காரணம், அக்கட்சித் தலைவரான அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் கடுமையான முயற்சியும், தூர நோக்குடன் திட்டமிட்ட அரசியல் வியூகமுமேயாகும் என்றால், அக்கூற்று பொய்யல்ல.
வெற்றி பெற்ற உறுப்பினர்களின் விபரப்பட்டியலை நோக்கமிடத்து வட புலத்தில் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் போன்ற மாவட்டங்களிலும், கிழக்கு மாகாணத்தில் அம்பாறை, திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களிலும், மக்கள் காங்கிரஸ் உறுப்பினர்கள் வெற்றி பெற்றிருப்பது, அக்கட்சியை வலுவடையச் செய்துள்ளது என சாதாராண மக்களும் பேசத் தலைப்பட்டுவிட்டனர்.

அதேவேளை, கொழும்பு, கண்டி, அநுராதபுரம், களுத்துறை, புத்தளம், கம்பஹா போன்ற மாவட்டங்களிலும் மக்கள் காங்கிரஸின் உறுப்பினர்கள் தெரிவாகியிருப்பது, குறுகிய காலத்தில் இக்கட்சி பெற்றுள்ள மக்கள் செல்வாக்கை சொல்லாமற் சொல்கிறது.

அதுமட்டுமா? சம்மாந்துறை, ஓட்டமாவடி, மாந்தை மேற்கு – மாந்தை கிழக்கு போன்ற பிரதேச சபைகளில் இணைந்து நிர்வகிக்கக்கூடிய சாத்தியக் கூறுகளை இத்தேர்தல் முடிவுகள் தோற்றுவித்திருப்பதன் மூலம், இக்கட்சி மக்கள் ஆதரவை, வரவேற்பை பெருவாரியாகப் பெற்றிருப்பதை புரியவைக்கிறது.

இத் தேர்தல் மக்கள் காங்கிரஸை விட வளர்ச்சியும், முதிர்ச்சியும் கண்டதாக சொல்லப்படும் கட்சிகளின் வெற்றி ஆசனங்கள், அவை வாக்கு வங்கியில் பாரிய பின்னடைவை கண்டிருப்பது சூசகமாக சுட்டிக்காட்டுகின்றன. இது மக்களின் விருப்பம் எத்தகையது என்பதை உணர்த்தி நிற்கிறதை சொல்லாமல் இருக்க முடியவில்லை.
ஓட்டுமொத்தமாக இந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலில் கட்சிகள் போட்டியிட்டதையும், அதில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பெற்ற வெற்றி ஆசனங்களையும் அலசி ஆராய்ந்து பார்க்கும்போது, மக்கள் காங்கிரஸ் மகத்தான வெற்றியையும், வளர்ச்சியையும் கண்டுள்ளமை குன்றின் மேலிட்ட விளக்காக தெட்டத் தெளிவாகின்றது.

இத் தேர்தல் முடிவுகள் உணர்த்தும் உண்மை என்ன? அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தோற்றம், அதன் படிப்படியான வளர்ச்சி, நாட்டில் எழும் – எரியும் பிரச்சினைகளை அக்கட்சியின் தலைவரும், அமைச்சருமான ரிஷாத் பதீயுதீனின் அணுகுமுறை, காய் நகர்த்தும் சாணக்கியம், மக்கள் தலைவரின் வியூக நடவடிக்கைகளை உள்வாங்கும் விதம், அதனால் மக்களிடம் அத்தலைவருக்கும், கட்சிக்கும் கிட்டும் வரவேற்பு என்பனவற்றை நடந்து முடிந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலின் முடிவுகள் அங்கீகரித்துள்ளன என்பதையே காட்டுகிறது.

இதே வழியில் இக்கட்சி செயற்படுமேயானால் நாளடையில் நாட்டின் பிரதான அரசியல் சக்தியாக தோற்றம் பெறும் என்பதில் சந்தேகமில்லை.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *