இந்த அரசு வீழ்ச்சியை நோக்கிப் போய்க்கொண்டிருக்கின்றது என கூட்டு எதிர்க் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்றைய தினம் அவர் கருத்துரைக்கும் போது,
அரசின் பிழையான, மக்கள் விரோதச் செயற்பாடுகள் காரணமாக அரசில் இருந்து பல அமைச்சர்கள் விலகி எம்முடன் இணையவுள்ளனர்.
அரசின் ஆயுட் காலம் சுருங்கியுள்ளது. அரசில் இருந்து விலகினாலும் எமது அணியில் இருந்து பலர் அரசுடன் இணைந்து அந்த வெற்றிடத்தை நிரப்புவதற்குத் தயாராக இருக்கின்றனர் என்று அரசு கூறுகின்றது. ஒருபோதும் அப்படி நடக்காது.
இன்று மக்கள் விரும்பும் ஒரேயொரு தலைவன் மகிந்த தான். மகிந்தவுக்கு இருக்கின்ற மக்கள் செல்வாக்கு ரணிலுக்கோ மைத்திரிக்கோ இல்லை.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மகிந்த ராஜபக்ச தனிக் கட்சியில் போட்டியிட்டிருந்தால் அவர் தலைமை அமைச்சராகவோ அல்லது எதிக்கட்சித் தலைவராகவோ ஆகியிருப்பார். தனிக் கட்சியில் போட்டியிடுமாறு நான் மகிந்தவிடம் கூறினேன். கேட்கவில்லை.
இப்போது மக்கள் மகிந்த ஆட்சிக்கு வர வேண்டும் என்று விரும்புகின்றனர். அதற்கான சந்தர்ப்பத்தை மகிந்தவுக்கு வழங்குவதற்கு மக்கள் காத்துக்கொண்டு இருக்கின்றனர்.
நாட்டில் ஏற்பட்டுள்ள எந்தவொரு பிரச்சினைக்கும் இந்த அரசிடம் தீர்வு கிடையாது. ஆட்சி மாற்றமே எல்லாவற்றுக்கும் ஒரே தீர்வு.
10லட்சம் தொழில் வாய்ப்புகள் வழங்கப்படும் என்று அரசு வாக்குறுகி வழங்கினாலும்கூட அதற்கான தேவை அரசுக்கு இல்லை.
இளைஞர்கள் இன்று போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளனர். அவர்கள் வேலை வாய்ப்புகள் கேட்டுப் போராடும் நிலையில் இல்லை. இதனால் அரசுக்குத்தான் லாபம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.