Breaking
Fri. Nov 22nd, 2024
(செட்டிகுளம் சர்ஜான்)

அரசாங்கத்தினால் சீனாவுக்கு வழங்கப்பட்டுள்ள 15,000 ஏக்கர் காணியில், அபிவிருத்தி என்னும் போர்வையில் மேற்கொள்ளப்படும் காடழிப்புகளை மூடி மறைக்கவே வில்பத்து விவகாரம் மீண்டும் திட்டமிட்டவகையில் பூதாகரமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வில்பத்து வனப்பிரதேசத்தை முஸ்லிம்கள் ஆக்கிரமித்து வருவதாக செய்திகள் சில ஊடகங்களில் பரப்பப்பட்டுவருகின்றன. இந்நிலையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சந்தித்த ஜனாதிபதி, வில்பத்து வனப் பிரதேசத்தை  மேலும் விஸ்தரித்து வர்த்தமானியில் பிரசுரிக்குமாறு ஆலோசனை வழங்கினார். குறித்த சந்திப்பில் வில்பத்து வனப் பிரதேசத்துக்கு எந்தவித சூழலியல் பாதிப்புக்களும் எற்படுத்தப்படவில்லை என அதிகாரிகள் ஜனாதிபதிக்கு விளக்கியமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு வில்பத்து வனம் விஸ்தரிக்கப்படுமானால், மன்னார் மாவட்டத்தின் முசலி பிரதேசமும் சரணாலயப் பிரதேசமாக பிரகடனப்படுத்தப்படும் சாத்தியக்கூறுகள் அதிகம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் வில்பத்து விஸ்தரிப்பினால் எதிர்காலத்தில் அங்குள்ள பொது மக்களுக்கு காணித் தட்டுப்பாடுகள் ஏற்படும் அபாயமும் காணப்படுகின்றது.

இந்த விவகாரம் தொடர்பாக பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் 21 முஸ்லிம் உறுப்பினர்களும் ஒன்றிணைந்து எதிர்வரும் 9ம் திகதி பாராளுமன்றில் கலந்துரையாடிய பின்னர், ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்திப்பதாக கடந்த திங்கட் கிழமை கொழும்பில் நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது இவ்வாறிருக்க, வில்பத்து விவகாரம் பாரிய அளவில் பேசப்படுவதன் பின்னணியில் அரசாங்கத்தினால் அபிவிருத்தி என்ற போர்வையில் சீனாவுக்கு வழங்கப்படும் 15,000 ஏக்கர் காணியில் காடழிப்பு இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.

சீனாவுக்கு வழங்கப்படவுள்ள 15 ஆயிரம் ஏக்கர் காணியில், சுமார் 5 ஆயிரம் ஏக்கர் காணிகள் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் இனங்காணப்பட்டுள்ளதுடன். ஏனைய 10 ஆயிரம் ஏக்கர் காணிகள், மொனராகல, மாத்தரை ஆகிய மாவட்டங்களில் ஒதுக்கப்பட்டுள்ளன. அத்துடன் குறித்த பகுதிகளிலுள்ள சுமார் 200 வீடுகள் இத்திட்டத்திற்காக இடமாற்றம் செய்யப்படவுள்ளதுடன் அவர்களுக்கான நஷ்டஈடும் வழங்கப்படவுள்ளதாக தெரியவருகின்றது.

நெடுஞ்சாலை அபிவிருத்திக்காக காணிகள் பெறப்படுவதில் கையாளப்படும் அதே அணுகுமுறை தான் இங்கும் கையாளப்படுவதுடன், 15 ஆயிரம் ஏக்கர் காணிகளும் ஒரே தடவையில் முதலீட்டாளர்களிடம் வழங்காது மூன்று கட்டங்களாக வழங்கப்பட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு காடுகள் அழிக்கப்பட்டு அமைக்கப்படவுள்ள  சிறப்பு பொருளாதார வலயத்தில் 2,400 தொழிற்சாலைகள் உருவாக்கப்படவுள்ளதுடன் இதன்மூலம் 4 இலட்சம் வேலைவாய்ப்புக்கள் உருவாக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அழிக்கப்படும் 15,000 ஏக்கர் காணியில்  இயற்கை எரிவாயு மின் நிலையம், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம், கப்பல்களை பழுதுபார்க்கும் தளம் என்பனவும் அமையவுள்ளன. இதன் மூலம் இலங்கைக்கு 4 பில்லியன் டொலர் முதலீடுகள் கிடைக்கும் வாய்ப்புகள் காணப்படுகின்றதுடன் நாட்டின் வேறு பகுதிகளில் இருக்கும் தொழிற்சாலைகளும் இப்பகுதிக்கு மாற்றப்படவுள்ளன.

அரசாங்கத்தினால் சீனாவுக்கு இவ்வாறு வழங்கப்படும் 15,000 ஏக்கர் காணியின்  மூலம் பாரியளவு காடழிப்பு  இடம்பெறவுள்ளதுடன், இதன்மூலம் மக்கள் பாரியளவிலான விளைவுகளை சந்திக்க நேரிடுவதுடன் அந்த வனங்களில் வாழும் உயிர் பல்வகைமைக்கும் பாதிப்புக்கள் ஏற்படும்  என சமூக மற்றும் சூழல் அவதானிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

எனினும் இந்த திட்டத்தில் சிக்கல் நிலைமை ஏற்படாமலிருக்கவே, வில்பத்துவில் காடழிப்பு இடம் பெறுவதாகவும், முஸ்லிம்கள் சூழலை அழிப்பதாகவும் பெரும்பான்மை ஊடகங்கள் மூலம் பாரிய பிரச்சார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக சமூக நலன் விரும்பிகள் விசனம் தெரிவித்துள்ளனர்.

அபிவிருத்தி என்னும் போர்வையில் ஏற்படவுள்ள  பாரிய அழிவைப்பற்றி மக்கள் சிந்திக்காதவரை வில்பத்து விவகாரம் பேசப்பட்டுக்கொண்டே இருக்கும். எனவே வில்பத்து விடையத்தில் பாதிக்கப்பட்டுள்ள மன்னார் மக்களை காப்பாற்றவேண்டிய அவசியம் காணப்படுவதுடன், சீனாவுக்கு வழங்கப்படும் 15,000 ஏக்கர் காணி தொடர்பாக அனைத்து மக்களும் சிந்தித்து இலங்கையில் இயற்க்கை வனத்தை ஓரளவாவது பாதுகாக்க முயல்வதே சாலச்சிறந்த தீர்வாக அமையும்.
vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *