Breaking
Mon. Nov 25th, 2024
(மறிச்சுக்கட்டி ரஸ்மி)
வில்பத்து வர்த்தமானி பிரகடனத்தை இரத்துச் செய்வதில் ஏற்பட்டுள்ள இழுபறிக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸே முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொள்ளவேண்டும்.

”வில்பத்துக் காட்டை முஸ்லிம்கள் நாசமாக்குகின்றார்கள்”, “காடுகளை அழித்து முஸ்லிம்களை ரிஷாட் குடியேற்றுகின்றார்”,”வெளிநாடுகளில் இருந்து முஸ்லிம்களை வரவழைத்து அரபுக் கொலணியை உருவாக்க முயற்சிக்கின்றார்” என்று 2014 ஆம் ஆண்டு தொடக்கம் இனவாதிகள் கூக்குரல் இட்ட போது இந்தக் குற்றச்சாட்டுக்கள் அபாண்டமான பொய் என்றும் முஸ்லிம்கள் மீது வீண் பழி சுமத்த வேண்டாமென்றும் தன்னந்தனியனாக நின்று அமைச்சர் ரிஷாட் போராடியிருக்கின்றார். இன்றும் போராடி வருகின்றார்.

கொழும்பிலும், களத்திலும் ஊடகவியலாளர்களை அழைத்து உண்மை நிலையை தெளிவு படுத்தினார். எனினும் இனவாத ஊடகங்கள் அவர் மீது சுட்டு விரலை நீட்டின. மொத்தத்தில் தனது சமூகத்திற்காக பரிந்து பேசிய, உண்மை நிலையை உரத்துப் பேசிய அமைச்சர் ரிஷாட்டை இனவாதி என முஸ்லிம் விரோதிகள் முத்திரை குத்தினர்.

முஸ்லிம்களின் சமூகக் கட்சியென மார் தட்டி வரும் ஹக்கீம் காங்கிரஸும் அதன் தலைவர் ஹக்கீமும் வில்பத்து விவகாரத்தில் பேசா மடந்தையாக இருந்தனர்.

பேரினவாதிகளையும், இனவாத ஊடகங்களையும் பகைத்துக்கொண்டால் தனது அரசியல் இருப்பு பாதிக்கப்படும் என்ற ஓர் எண்ணமும் தனக்குச் சமனாக வளர்ந்து வரும் அமைச்சர் ரிஷாட்டின் எழுச்சியை மழுங்கடிப்பதற்கு கிடைத்த ஆயுதத்தை சரி வரப் பயன்படுத்த வேண்டுமென்ற நோக்கமுமே ஹக்கீமின் இலக்காக இருந்தது. இதற்காக அவர் தனது அரசியல் எதிரியை அழிக்கும் நோக்கில் தனது ஊது குழல்களை நன்கு பயன்படுத்தத் தொடங்கினார்.

முசலிப் பிரதேசத்திற்கு ஒரு பிரபல தனியார் இலத்திரனியல் ஊடகத்தை கொண்டு சென்று முகம் தெரியாத தமிழர் ஒருவரையும் முகத்தை மறைத்து இரண்டு முஸ்லிம்களையும் வைத்து ரிஷாட்டுக்கு எதிராக வசை பாடச் செய்தவர் தற்போது ஹக்கீம் காங்கிரஸில் ஒட்டியிருக்கும் நயவஞ்சகன் ஹுனைஸ் பாரூக்கே!

அமைச்சர் ரிஷாட் ஆனந்தத் தேரருடன் தனியார் சிங்களத் தொலைக்காட்சியொன்றில் விவாதத்திற்கு சென்ற போது, ரிஷாட் தொடர்பில் பொய்யான ஆவணங்களையும் இட்டுக் கட்டப்பட்ட விடயங்கள் அடங்கிய பைல்களையும் புகைப்படங்களையும் கொடுத்து அனுப்பியவர் மன்னார் சித்தி தங்கமாளிகை கொள்ளைகாரன் குவைதீர்கானே!

அதுமட்டுமன்றி தேரரிடம் புனித குர்ஆனை வழங்கி சத்தியம் வாங்குமாறு ஐடியா கொடுத்தவனும் ஐ ஆர் சி குவைதிர்கானே!

”வில்பத்து ரிஷாட்டின் ஒரு நாடகம் – அவர் பிரபலமாகவே இந்த விவகாரத்தை தூக்கிப் பிடிக்கின்றார். வில்பத்துத் தொடர்பில் முஸ்லிம்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. அவர் 600 ஏக்கர் காணியை அடாத்தாக வைத்துள்ளார் என்று இற்றை வரை காலம் கூறி வந்த ஹுனைஸ் பாரூக் தற்போது வில்பத்துப் பிரச்சினையின் பொய்யான அக்கறை காட்டுவதேன்?

இந்த விவகாரம் தொடர்பில் இற்றை வரை வாய் திறக்காதிருந்த கொழும்பிலே இடம்பெற்ற முஸ்லிம் அரசியல்வாதிகள் நடாத்திய ஊடக மாநாட்டை பகிஷ்கரித்த ஹக்கீமும், ஹக்கீம் காங்கிரஸ்காரர்களும் முண்டியடித்துக் கொண்டு இந்த விவகாரத்தை ஆர்வம் காட்டுவதன் உள்நோக்கம் தான் என்ன?

சரிந்து போய்க்கொண்டிருக்கும் தனது செல்வாக்கை நிலை நிறுத்துவதற்கு இதனையாவது துரும்பாகப் பாவிக்கலாம் என ஹக்கீம் கனவு காண்கின்றார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன ரஷ்யாவில் வைத்து வர்த்தமானி பிரகடனத்தை வெளியிட்ட போது அமைச்சர் ரிஷாட் பதறியடித்தார். ஜம் இய்யதுல் உலமா, முஸ்லிம் கவுன்ஸில், ஷூரா கவுன்ஸில் முஸ்லிம் சட்டத்தரணிகள், முஸ்லிம் ஆர்வலர்கள், முஸ்லிம் எம் பிக்கள் ஆகியோருடன் சந்திப்புக்களை மேற்கொண்டு அடுத்தகட்ட நகர்வு தொடர்பில் ஆலோசனை நடத்தினார். இவைகள் மூடிய அறைக்குள் நடந்த மூடு மந்திரங்கள் அல்ல. அந்த ஆலோசனைக் கூட்டத்தின் பின் மேற்கொண்ட முடிவுகளுக்கு இணங்கவே ஜனாதிபதியின் செயலாளருடன் ஒரு அவசரச் சந்திப்பு நடைபெற்றது. இந்த விவகாரங்களை ஜனாதிபதியிடம் எடுத்துரைத்து மூன்று நாட்களுக்குள் முடிவு எட்டப்படுமென ஜனாதிபதியின் செயலாளர் அந்த உயர்மட்டக் கூட்டத்தில் அறிவித்திருந்தார்.

அதுமட்டுமன்றி, முன்னதாக ஜனாதிபதியுடன் தொலைபேசியிலும், பிரதமருடன் நேரடியாக இந்த விடயங்களை அமைச்சர் ரிஷாட் காட்டமாக எடுத்துரைத்ததன் பிரதிபலிப்பே ஜனாதிபதியின் செயலாளருடனான உயர்மட்டச் சந்திப்பும் அவரது அறிவிப்புமாகும்.

நிலைமை இவ்விதமிருக்க, இந்த விடயத்தில் தங்களது கட்சியும் ஏதாவது செய்திருக்கிறோம் என மக்களிடம் காட்டுவதற்காக புதிதாக அந்தக் கட்சியில் சேர்ந்த ஹுனைஸ் பாரூக் அமைச்சர் ஹக்கீமிடம் சென்று ரிஷாட் மேற்கொண்ட விடயங்களை எடுத்துக் கூறினார். பின்னர் ஹக்கீம் காங்கிரஸ்காரர்கள் ஜனாதிபதியின் செயலாளரை தாங்களும் சந்தித்தனர். அரைத்தமாவையை மீண்டும் மீண்டும் அரைப்பதிலேயே வல்லவரான ஹக்கீம் இந்த சந்திப்பை நடத்தியதன் தாக்கத்தையே இப்போது முசலி சமூகம் அனுபவிக்கின்றது.

முசலியில் நடைபெற்று வரும் தொடர்ச்சியான சாத்வீக வழிப் போராட்டத்திற்கு முஸ்லிம் காங்கிரஸே வகை சொல்ல வேண்டும். கொடு வெயிலிலும், உணவின்றி, நீரின்றி கட்டாந்தரையில் அமர்ந்து தமது பூர்வீக மண்ணை மீட்பதற்காக போராடி வரும் அப்பாவி அபலைகளின் கண்ணீருக்கு பொறுப்புக் கூறவேண்டியவர்கள் ஹக்கீம் காங்கிரஸ்காரர்களே!

மூன்று நாட்களுக்குள் சாதகமான முடிவை தருவதாக வாக்குறுதியளித்த ஜனாதிபதியின் செயலாளரைச் சந்தித்து தான் வெளிநாடு ஒன்றுக்கு பயணம் போவதாகவும், நாடு திரும்பிய பின்னர் அந்த இடத்திற்கு அதிகாரிகளைக் கொண்ட குழுவொன்றை அழைத்துச் செல்வதற்கு திகதி குறிப்பிட்டு ஜனாதிபதியின் செயலாளரிடம் விடுத்த வேண்டுகோளே முசலி முஸ்லிம்களின் இந்த சீரழிவுக்குக் காரணம்.

முசலி மக்களின் சுமார் ஒரு இலட்சம் ஏக்கர் விஸ்தீரணம் கொண்ட மேட்டு நிலக்காணிகள், மேய்ச்சல் தரைகள், விவசாயக் காணிகள் கபளீகரம் செய்யப்பட்டிருப்பது வெளிப்படையாக தெரிந்த போதும் அதிகாரிகளைக் கொண்ட குழுவொன்றை அழைத்துச் செல்ல ஹக்கீம் காங்கிரஸ் ஆலோசனை வழங்கியதேன்?

அவ்வாறாயினும் ஹக்கீம் வெளிநாட்டுக்குச் சென்று திரும்பும் வரை இந்த எரியும் பிரச்சினையை நீடிக்க விட்டதன் மர்மம் தான் என்ன? ஜனாதிபதியின் செயலாளருக்கோ, அவரது உயர் அதிகாரிகளுக்கோ ஒரு சில மணித்தியாளங்களில் ஹெலிகொப்டரில் அந்தப் பிரதேசத்திற்குச்சென்று திரும்பிவர முடியாதா? இதில் ஏதோ ஒர் மர்மம் இருப்பதாகவே கூறப்படுகின்றது.

சமாதானப் பேச்சுவார்த்தையில் தனித்தரப்பை வலியுறுத்த வேண்டாமெனவும், புலிகளுக்கும் சர்வதேசத்திற்கும் சங்கடங்களைக் கொடுக்க வேண்டாமெனவும் நோர்வே பல கோடி ரூபாய்களை ஹக்கீமிடம் கொடுத்ததாக அக்கட்சியின் உச்ச பீட உறுப்பினர்களே தற்போது ஒப்புக் கொள்கின்றனர்.

அதே போன்று மறிச்சுக்கட்டி வர்த்தமானி அறிவித்தலை மலினப்படுத்துமாறும் ஆவேசம் கொண்டுள்ள முஸ்லிம்களை ஆசுவாசப்படுத்துமாறும் வெளிநாட்டு நிதியுதவியுடன் இயங்கும் இனவாதச் சூழலியலாளர்கள், ஹக்கீமிற்கு கோடி கோடியாக பணம் கொட்டினார்களா? ஹக்கீமுடன் தற்போது ஒட்டியிருக்கும் நெருங்கிய முக்கியஸ்தர்கள் அவருடன் முரண்பட்டு வெளியேறும் போது இந்த உண்மையை வெளிப்படுத்த இறைவன் உதவி செய்ய வேண்டும்.
vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *