வடக்கு முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு இப்போது 25 வருடங்கள் ஆகிவிட்டது. அவர்கள் மீண்டும் அங்கு செல்லும்போது அவர்கள் வசித்த இடங்களெல்லாம் காடாகி விட்டன. இதுதான் உண்மையான நிலை. அவர்கள் சொந்தக் காணியை துப்புரவு செய்ய முயற்சித்த வேளை காட்டை அழிக்கிறார்கள் என்று பிரச்சினையை கிளப்புகிறார்கள். எமது முஸ்லிம்களின் காணியை இராணு முகாம்கள் பிடித்து வைத்துள்ளன.
இந்த உண்மை நிலையை அங்குள்ள அரச உயரதிகாரிகள் ஏற்றுக் கொண்டுள்ளனர். தற்போது எமது மக்கள்கள் கோருவது அவர்களது காணியைத்தான். அரசாங்கத்தின் ஓர் இஞ்சிக் காணித்துண்டும் எமது அவர்களுக்குத் தேவையில்லை என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். நவவி தெரிவித்தார்.அவர் எங்கள் தேசத்திற்கு வழங்கிய நேர்காணலிலேயே அவ்வாறு தெரிவித்தார். அவருடனான நேர்காணலை இங்கு தொகுத்துத் தருகின்றோம்.
எங்கள் தேசம்: அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக நீங்கள் தேசியப் பட்டியல் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளீர்கள். இந்த வாய்ப்பை எவ்வாறு பார்க்கிறீர்கள்?
எம்.எச்.எம். நவவி எம்.பி.: இலங்கை அரசியலில் விருப்புவாக்கு முறை அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் எங்களது தொகுதியில் எந்தவொரு முஸ்லிம் வேட்பாளரும் பாராளுமன்றத்திற்கு தெரிவாகவில்லை. அத்தொகுதியில் ஐக்கிய தேசியக் கட்சி – சுதந்திரக் கட்சி ஆகியன பலம் வாய்ந்து காணப்பட்டதாலும் வேட்பாளர்களுக்குள் ஒற்றுமையின்மையாலும் ஆயிரம், இரண்டாயிரம் வாக்குகளால் தோல்வியடைய வேண்டிய நிலை எமக்கேற்பட்டது.
1994 இல் டாக்டர் இல்யாஸ் அவர்கள் யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று புத்தளத்துக்கு சேவையாற்றினார். பிறகு, முஸ்லிம் காங்கிரஸ் பாயிஸ் அவர்களுக்கு தேசியப் பட்டியல் கொடுத்து அவரும் சற்று சேவைகளைச் செய்தார். இந்நிலையில், அமைச்சர் றிஷாத் பதியுதீன் அவர்கள் என்னை தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக ஆக்கியிருக்கிறார். புத்தளம் தொகுதிக்கு ஒரு பாராளுமன்ற உறுப்பினர் இன்மையால் முஸ்லிம்கள் மாத்திரமல்ல, அங்கு வாழும் அனைத்து இன மக்களும் பின்னடைவுகளை எதிர்கொண்டனர். ஏனென்றால், வெளித் தொகுதியிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் எமக்குச் சேர வேண்டியதை தராதமையால் பிரச்சினைகள் எழுந்தன.
அந்த வகையில், புத்தளம் மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் அமைச்சர் றிஷாத் பதியுதீன் அவர்கள் இந்தத் தேசியப் பட்டியலைத் தந்தமைக்கு புத்தளம் மக்கள் சார்பாக நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம். இந்த தேசியப் பட்டியல் உறுப்புரிமையூடாக புத்தளம் மக்களுக்கும் மன்னார் மாவட்ட மக்களுக்கும் எம்மாலான இயன்ற உதவிகளைச் செய்து வருகின்றோம்.
எங்கள் தேசம்: புத்தளம் மாவட்டத்தில் அடையாளப்படுத்தப்பட்ட குறிப்பான பிரச்சினைகளாக எவற்றைக் காண்கிறீர்கள்? அவற்றைத் தீர்ப்பதற்காக என்னென்ன தீர்வுகளை முன் வைக்கிறீர்கள்?
எம்.எச்.எம். நவவி எம்.பி.: புத்தளம் மாவட்டத்தில் பல பிரச்சினைகள் காணப்படுகின்றன. கல்வி, சுகாதாரம், விவசாயம், தொழில்வாய்ப்பு போன்றவற்றில் இவ்வாறு பிரச்சினைகள் உள்ளன. கல்வித்துறையை எடுத்துப் பார்த்தால் எமது கோட்டத்திலுள்ள பாடசாலைகளில் பல குறைபாடுகள் உள்ளன. புத்தளம் கோட்ட வலயத்தில் 210 பள்ளிக் கூடங்கள் இருக்கின்றன. இது அதிகமான பாடசாலைகளைக் கொண்டிருந்தாலும் ஏனைய கோட்டங்களைப் போன்றே ஒதுக்கீடுகள் கிடைக்கப் பெறுகின்றன. எனவே, இதற்கு சரியான தீர்வொன்றைப் பெறுவதுடன் பாடசாலைகளிலில் நிலைவும் வளக் குறைபாடு மற்றும் ஆசிரியர் பற்றாக்குறை போன்றவற்றையும் நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது.
அடுத்த பிரச்சினைதான் சுகாதார வசதிகள் தொடர்பானது. கற்பிற்டி, வண்ணாத்தீவு, கலாவௌ, ஆனமடுவ போன்ற பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் சிகிச்சைக்காக இந்த புத்தளம் தள வைத்தியசாலைக்குத்தான் வருகிறார்கள். அது அல்லாமல், இராணுவம் மற்றும் கடற்படை முகாம்கள் 15 க்கும் மேல் இங்கு காணப்படுகின்றன. எனவே, அவர்களும் சிகிச்சைக்கு இங்குதான் வருவார்கள். அத்தோடு, மன்னாரிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் என்று பெரும்பாலானவர்கள் இந்தப் புத்தளம் தள வைத்தியசாலைக்கே மருத்துவ சிகிச்சைக்கு வருவதனால் சரியான சிகிச்சை நடைபெறுவதில்லை என்ற அதிருப்தி மக்களிடம் பரவலாக காணப்படுகிறது. இதனால், இன்னும் இரண்டு வருடங்களில் இந்த வைத்தியசாலையின் வசதிகளை அதிகரிப்பதற்கான திட்டமொன்றை வகுத்துள்ளோம்.
கற்பிட்டிப் பகுதியிலுள்ள மக்கள் இன்றைக்கு 16038 ஏக்கர் நிலப் பரப்பில் விவசாயம் செய்து கொண்டிருக்கின்றனர். இந்த விவசாய உற்பத்தி முயற்சியை எந்த நிலையில் ஆரம்பித்தார்களோ அதே நிலையில்தான் இப்பொழுதும் இருக்கிறார்கள். ஏனென்றால் அங்கு ஒற்றுமை, ஒருங்கிணைப்பு என்பன கிடையாது. உதாரணத்திற்கு, நுவரெலியா, பதுளை மாவட்டங்களை எடுத்துக் கொண்டால் அங்குள்ள விவசாயிகள் ஒன்றுபட்டு செப்டெம்பர், ஒக்டோபர் மாதங்களில் சுமார் 4 ஆயிரம் ஏக்கர் அளவில் உருளைக்கிழங்கு பயிர் செய்கிறார்கள். இவர்களது அருவடைக் காலங்களில் அரசாங்கம் இறக்குமதியை நிறுத்தி விடுவதனால் அம்மக்களுக்கு நல்ல விலை கிடைக்கிறது. ஆனால், இப்படியான ஓர் ஒருங்கிணைப்பு எமது பகுதியில் இல்லை.
அத்தோடு, எமது பிரதேச விவசாய நிலங்கள் மணல் மண்ணாக இருப்பதால் அறுவடைச் செலவு கூடுதலாக உள்ளது. மணலாக இருப்பதால் நீர் மற்றும் உரம் கூடுதலாக பாவிக்க வேண்டும். இது சம்பந்தமாக றிஷாத் அமைச்சருடனும் பாராளுமன்றத்திலும் பேசி ஒரு வருட திட்டமொன்றையும் வகுத்துள்ளோம். அதன்படி, 10 விவசாயக் கிராமங்களைத் தெரிவு செய்து அப்பிரதேசங்களில் ஒரே வகையான பயிர்களை ஒரே நேரத்தில் பயிரிடுவதுடன் இதனை அறுவடை செய்யும் காலத்தை அரசாங்கத்துக்கு தெரியப்படுத்தி தன் ஒத்துழைப்பைப் பெறுவது எமது திட்டமாகும். அதேபோன்று, பல்வேறு மானியங்களையும் உதவித் திட்டங்களையும் எமது விவசாயிகளுக்கு பெற்றுக் கொடுத்து அவர்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்த பல்வேறு முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றோம்.
எங்கள் தேசம்: புத்தளம் நகரின் வடிகால் அமைப்பு முறையற்றதாக இருப்பதால் சுகாதாரச் சீர்கேடுகள் நிலவுகின்றன. நீண்டகால இப்பிரச்சினைக்கு என்ன தீர்வை நீங்கள் முன்வைக்கிறீர்கள்?
எம்.எச்.எம். நவவி எம்.பி.: கடந்த காலங்களில் புத்தளம் நகர சபையால் மேற்கொள்ளப்பட்ட தேவை மதிப்பீடு சரியாக செய்யப்படாததன் விளைவுதான் தற்பொழுது நாம் எதிர்கொண்டுள்ள இந்தப் பிரச்சினைக்கு முக்கிய காரணமாகும்.
அமைச்சர் சம்பிக்க மற்றும் நாவின்ன ஆகியோரோடு நாம் பேசியதையடுத்து முழு புத்தளத் தொகுதியிலும் எந்த மட்டத்தில் வடிகான் கட்டுவது என்ற மதிப்பீட்டை செய்து கொண்டிருக்கிறார்கள். இம்மதிப்பீடு முடிவடைந்ததும் வடிகான் கட்டுவதைத் தொங்குவோம். ஏற்கனவே 50 மில்லியன் ரூபா பணம் கிடைத்து, கூடுதலான வெள்ளப் பாதிப்பை எதிர்நோக்கும் கடையாக்குளம் பகுதி வடிகான் திட்டத்தைத் துவங்கியுள்ளோம். இதனையடுத்து கிடைக்கின்ற நிதியைப் பொறுத்து ஏனைய பகுதிகளிலும் வேலைத் திட்டத்தை முன்னெடுப்போம். அதேபோன்று, நகரத்தில் மோசமான நிலையில் காணப்படும் பாதைகளையும் பெப்ரவரி மாதமளவில் அபிவிருத்தி செய்வதற்கும் நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.
எங்கள் தேசம்: வடக்கு முஸ்லிம்கள் அகதிகளாக இடம்பெயர்ந்து வாழ்கின்றனர். இம்மக்களின் உரிமைகளை மீளப் பெற்றுக் கொள்ள உங்களால் முன்னெடுக்கக் கூடிய நடவடிக்கைகள் என்ன?
எம்.எச்.எம். நவவி எம்.பி.: வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்டு புத்தளத்தில் குடியேறியவர்களுக்கு அகதிகள் என்ற பெயரை பயன்படுத்துவதில்லை. புத்தளத்தில் குடியேறியவர்கள் புத்தளத்தான் என்பதுதான் எனது கொள்கை. வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த முஸ்லிம்களில் 18 ஆயிரம் பேர் புத்தளத்தில் வாக்காளர்களாக உள்ளனர். இவர்களில் சிலர் எம்மோடு இரண்டறக் கலந்துள்ளனர் சிலர் சொந்த இடத்துக்கு திரும்பிப் போக வேண்டும் என்று வரும்புகிறார்கள். அவர்களுக்கு கிடைக்க வேண்டிய சலுகைகளில் எமக்கு பிரிவினையும் கிடையாது.
வடக்கு முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு புத்தளம் வந்தபோது இறைவனுக்குப் பயந்து நாங்கள் உதவி செய்தோம். அவர்கள் எமக்குச் செய்த உதவிதான் புத்தளத்தில் முஸ்லிம்கள் 40 வீதமாக இருந்தது இன்று 60 வீதமாக உயர்வதற்கு காரணமாகியது. எனினும், புத்தளத்துக்கு இடம்பெயர்ந்த மக்கள் அனைவரும் மீளக் குடியமர செய்யவில்லை. அவர்களில் அரைப் பகுதியினரே சென்றுள்ளனர். இருந்தாலும், எமக்கொரு பொறுப்பிருக்கிறது அவர்களுக்கான உரிமைகள் கிடைக்கப் பெற வேண்டும் என்பதற்காக, அமைச்சர் றிஷாத் பதியுத்தீன் தலைமையில் மாவை சேனாதிராஜாவோடு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். அவர்கள் முஸ்லிம் மக்கள் மீளக் குடியேருவதில் உடன்பட்டிருக்கிறார்கள். அத்தோடு, வடக்கிலுள்ள காணிப் பிரச்சினைகளை முதலாவது தீர்க்க வேண்டியுள்ளது. அதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றNhம்.
எங்கள் தேசம்: வில்பத்து பிரச்சினை மீண்டும் மீண்டும் தூபமிடப்பட்டுக் கொண்டே வருகிறது. இந்தப் பிரச்சினை தொடர்பாக உங்களது பார்வையென்ன?
எம்.எச்.எம். நவவி எம்.பி.: வடக்கு முஸ்லிம்கள் இரண்டு மணித்தியாலங்களுக்குள் உடுத்த உடையுடன் வெளியேற்றப்பட்டதால் அவர்கள் காணி உறுதிப் பத்திரம் எடுத்துக் கொண்டு வரவில்லை. வடக்கு முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு இப்போது 25 வருடங்கள் ஆகிவிட்டது. அவர்கள் மீண்டும் அங்கு செல்லும்போது அவர்கள் வசித்த இடங்களெல்லாம் காடாகி விட்டன. இதுதான் உண்மையான நிலை. அவர்கள் சொந்தக் காணியை துப்புரவு செய்ய முயற்சித்த வேளை காட்டை அழிக்கிறார்கள் என்று பிரச்சினையை கிளப்புகிறார்கள். எமது முஸ்லிம்களின் காணியை இராணு முகாம்கள் பிடித்து வைத்துள்ளன. இந்த உண்மை நிலையை அங்குள்ள அரச உயரதிகாரிகள் ஏற்றுக் கொண்டுள்ளனர். தற்போது எமது மக்கள்கள் கோருவது அவர்களது காணியைத்தான். அரசாங்கத்தின் ஓர் இஞ்சிக் காணித்துண்டும் எமது அவர்களுக்குத் தேவையில்லை
எங்கள் தேசம்: வில்பத்து பிரச்சினையை அமைச்சர் றிஷாத் பெரிதுபடுத்தி தன்னை ஒரு முஸ்லிம் தலைவராக காண்பிக்க முயற்சிக்கிறார் என்ற விமர்சனம் உள்ளது. இது சம்பந்தமாக உங்களது கருத்து?
எம்.எச்.எம். நவவி எம்.பி: எமது முஸ்லிம் தலைவர்களைப் பாருங்கள். அமைச்சர் பௌசி கொழும்பு. அமைச்சர் ரவூப் ஹக்கீம் கண்டி. அமைச்சர் றிஷாத் மன்னார். எனவே, அமைச்சர் றிஷாத் பதியுதீனுக்கு மன்னார்தான் அவரது ஊர். அவர் தன்னுடைய பிரதேசத்தைப் பற்றியும் அவரது மக்களினுடைய கஷ்டத்தைப் பற்றியும் பேசி வருகிறார். அவருக்கு வாக்களித்த மக்கள் கஷ்டப்படும்போது அம்மக்கள் சார்பாக பேசுவதற்கு அவருக்கு உரிமையிருக்கிறது. அத்தோடு அவர் இலங்கை முஸ்லிம்கள் தொடர்பாக பேசியும் குரல் கொடுத்தும் வருகிறார். இலங்கையில் முஸ்லிம் அரசாங்க அதிபர் ஒருவர் இல்லையென்பதை பகிரங்கமாக பாராளுமன்றத்தில் பேசினார். இதை வேறுயாரும் பேசவில்லை. இன்று அரசாங்கம் ஏற்றுக் கொண்டிருக்கிறது. இந்த வருடத்தில் இரண்டு முஸ்லிம் அரசாங்க அதிபர்களை நியமிப்பதற்கு பொதுத்துறை நிர்வாக அமைச்சு உடன்பட்டிருக்கிறது. அவர் தேசியத் தலைவராகவில்லை. மக்கள் அவரைத் தேசியத் தலைவராக ஆக்கியுள்ளனர்.
வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்டு புத்தளத்தில் குடியேறியவர்களுக்கு அகதிகள் என்ற பெயரை பயன்படுத்துவதில்லை. புத்தளத்தில் குடியேறியவர்கள் புத்தளத்தான் என்பதுதான் எனது கொள்கை.