யாழ். பருத்தித்துறை வியாபாரிமூலை கலைமணி சனசமூக நிலையத்தின் கல்விக் கௌரவிப்பு நிகழ்வு வியாபாரிமூலை நாச்சிமார் ஆலய முன்றலில் நேற்றுமாலை (14.04.2017) 4.30மணியளவில் உயர் தொழிநுட்பவியல் நிறுவன முன்னாள் பணிப்பாளர் திரு.க.கதிரமலை அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வின் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கலந்து கொண்டிருந்ததோடு. சிறப்பு விருந்தினர்களாக வட மாகாணசபை உறுப்பினர் க.தர்மலிங்கம், வடமராட்சி வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ்.புஸ்பலிங்கம், பிரதேசசபை செயலாளர் சி.ஸ்ரீபாஸ்கரன் ஆகியோரும், கௌரவ விருந்தினர்களாக யாழ். பல்கலைக்கழக கணினி விஞ்ஞான சிரேஸ்ட விரிவுரையாளர் சோ.சுதாகர், இளைப்பாறிய அதிபர் ந.பரமானந்தம், சமாதான நீதவான் கலாபூசணம் ஏ.என்.எஸ். திருச்செல்வம் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
ஆரம்ப நிகழ்வாக விருந்தினர்கள் கௌரவித்து அழைத்துவரப்பட்டதைத் தொடர்ந்து சிறுவர்களின் கும்மி நடனம் இடம்பெற்றது. இதனைத் தொடர்ந்து மங்கல விளக்கேற்றல், இறைவணக்கம், ஆசியுரை. வரவேற்புரை, தலைமையுரை, விருந்தினர்கள் உரை என்பன இடம்பெற்றன.
தொடர்ந்து கல்வியில் சிறந்த பேறுபேறுகளைப் பெற்ற வடமராட்சி மாணவ, மாணவியர்க்கான கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றது. இடையிடையே சிறார்களின் பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. தொடர்ந்து பரிசளிப்பு விழா இடம்பெற்று, நன்றியுரையுடன் நிகழ்வுகள் யாவும் இனிதே நிறைவுபெற்றன. இந்நிகழ்வில் பெருந்தொகையான பெற்றோர், இளைஞர், யுவதிகள், பொதுமக்கள் கலந்து சிறப்பித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.