வாக்குமூலம் ஒன்றை பதிவு செய்து கொள்வதற்காக இன்றைய தினம் குற்ற விசாரணை பிரிவிற்கு வருமாறு இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
எனினும் தன்னை பொலிஸார் கைது செய்யக்கூடும் என்ற அச்சத்தின் காரணமாக வேறொரு திகதிக்கு மாற்றிக் கொண்டதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
அதற்கிணங்க எதிர்வரும் திங்கட்கிழமைக்கு மாற்றி கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வித்தியா கொலை வழக்கின் பிரதான சந்தேக நபரான சுவிஸ் குமாரை, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்க விடுவித்த சம்பவம் தொடர்பில் அவரிடம் விசாரணை மேற்கொள்வதற்காக விஜயகலா அழைக்கப்பட்டிருந்தார்.
விஜயகலா மகேஸ்வரன் மற்றும் கொழும்பு சட்டபீட பேராசிரியர் தமிழ்மாறனிடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்ளுமாறு ஊர்காவற்துறை நீதிபதி அப்துல் மஜிட் மொகமட் றியாழ் கடந்த செவ்வாய்க்கிழமை குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவிட்டிருந்தார்.
அதற்கமைய நேற்றையதினம் தமிழ் மாறன் குற்றப்புலனாய்வுப் பிரிவிற்கு அழைக்கப்பட்டிருந்த நிலையில் அவரிடம் வாக்குமூலம் ஒன்று பதிவு செய்து கொள்ளப்பட்டுள்ளது. புங்குடுதீவில் பிறந்த நபரான தமிழ் மாறனிடம் சுவிஸ் குமாரை காப்பாற்றுமாறு இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனினாலே ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
அப்போதைய யாழ் மாவட்ட சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்க, தமிழ் மாறனின் கீழ் கொழும்பு பல்கலைக்கழகத்தில் மனிதாபிமான சட்டம் தொடர்பில் கற்று வந்ததனை நன்கு அறிந்த விஜயகலா மகேஸ்வரன் இதனை சாதகமாக பயன்படுத்தி சுவிஸ் குமாரை பாதுகாப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
குற்ற விசாரணை பிரிவினரால் இதற்கு முன்னர் விஜயகலாவிடம் வாக்குமூலம் ஒன்று பெற்றுள்ள போதிலும் இந்த தொடர்பை அவர் தனது அரசியல் பலத்தை பயன்படுத்தி மறைத்துள்ளதாக குறித்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.