நாட்டின் நீதி அமைச்சராக கடமையாற்றிய காலத்தில் விஜயதாச ராஜபக்ச என்ன செய்தார் என நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஐ.எஸ் தீவிரவாதத் தாக்குதல் சம்பவத்திற்கு முஜிபுர் ரஹ்மானும் பொறுப்பு என அண்மையில் விஜயதாச ராஜபக்ச பகிரங்க குற்றச்சாட்டு சுமத்தியிருந்தார்.
இந்தக் குற்றச்சாட்டுக்கள் குறித்து கொழும்பு ஊடகமொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்துடன் முஸ்லிம் குடும்பங்களுக்கு தொடர்பு உண்டு என கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நாடாளுமன்றில் கூறிய போது விஜயதாச ராஜபக்ச நீதி அமைச்சராக கடமையாற்றினார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டின் நீதி அமைச்சர் என்ற ரீதியில் இந்தப் பிரச்சினைக்கு அவர் எவ்வாறான தீர்வுத் திட்டங்களை முன்வைத்தார் என்பதனை தெளிவுபடுத்த வேண்டுமென முஜிபுர் ரஹ்மான் வலியுறுத்தியுள்ளார்.
தன்னிடம் உள்ள அனைத்து தகவல்களையும் தாமதமின்றி விஜயதாச ராஜபக்ச புலனாய்வுப் பிரிவினர் மற்றும் பாதுகாப்பு தரப்பினரிடம் ஒப்படைக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு குறைபாடுகளினால் ஏற்பட்ட இந்த பாரிய அனர்த்தம் தொடர்பிலான கவனத்தை திசை திருப்பவும், இதற்கு பொறுப்பு சொல்ல வேண்டியவர்களை பாதுகாக்கவும் விஜயதாச ராஜபக்ச இவ்வாறு பொய் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தமக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் எந்த மட்டத்திலான விசாரணைகளுக்கும் தயார் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.