முதலமைச்சராக தொடர்ந்தும் பதவி வகிக்க வேண்டும் என வலியுறுத்தியே பொது மக்கள் தனது வீட்டின் முன்னால் அணி திரண்டார்கள் என சீ.வி.விக்னேஸ்வரன் நினைக்க வேண்டாம்.
அவ்வாறு முதலமைச்சர் நினைப்பாராக இருந்தால் அது தவறான ஒன்று என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
தனது கட்சி அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
மாகாண சபையில் முதலமைச்சரை தொடர்ந்தும் வைத்திருப்பதால் எங்களுக்கு நன்மை இல்லை. எங்களுக்கு ஓர் அமைச்சுப் பதவியும் இல்லை.
வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், சரியான கொள்கையை வெளிப்படுத்தி, மாகாணசபையை ஆரம்பப் புள்ளியாகக் கூட ஏற்றுக் கொள்ள முடியாது என்ற கொள்கையில் இருப்பதால் அவர் பழி வாங்கப்படுகின்றார்.
அதைத் தடுத்து நிறுத்த வேண்டும். அதுதான் எங்களின் ஒரே நோக்கம். அதற்காகத்தான் அவருக்கு ஆதரவாக அணி திரண்டோம். மற்றவர்கள் செயற்பட்டது தொடர்பில் இன்று கேள்வி கேட்க வேண்டியிருக்கின்றது.
விக்னேஸ்வரனை மீண்டும் முதலமைச்சராக நிறுத்த வேண்டும் என்பதற்காக நாங்கள் மக்களை அணி திரட்டவில்லை.
அணி திரண்ட மக்கள் தான் மீண்டும் முதலமைச்சராகத் தொடர வேண்டும் என்பதற்காகத்தான் ஒன்று கூடினார்கள் என்று விக்னேஸ்வரன் நினைத்தால் அது தவறான ஒன்று என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.