Breaking
Tue. Nov 26th, 2024

வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் விக்னேஸ்வரன், பொலிஸ் சேவையில் தமிழ் இளைஞர் , யுவதிகள் இணைந்து செயற்படவேண்டும் என தெரிவித்திருக்கும் கருத்துக்கு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் சிவமோகன் பதில் கருத்தினை வெளியிட்டுள்ளார்.

 

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் சிவமோகன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு ,

அண்மையில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தமிழ் இளைஞர் யுவதிகளை பொலிஸ் படையில் இணைந்துகொள்ளுமாறு பகிரங்கமாகவே ஊடகங்களில் கருத்துத் தெரிவித்துள்ளார்.

இவரைப் பின்பற்றிய வடக்கின் அமைச்சர் அனந்தி சசிதரனும் இதே கருத்தினைப் பதிவுசெய்துள்ளார். இலங்கை அரசினால் வடமாகாண சபைக்குரிய அதிகாரங்களான காணி மற்றும் பொலிஸ் போன்றவை வழங்கப்படாமல் இழுத்தடிப்புச் செய்துவரும் நிலையே தொடர்கின்றது என்பதை அனைவரும் அறிவர். 13 ஆம் திருத்தச்சட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள இவ்வதிகாரங்கள் சிங்கள அரசினால் இன்னமும் முழுமையாக தமிழ் மக்களுக்கு வழங்கப்படவில்லை. பாராளுமன்றத்தாலும் செயற்படுத்தப்படும் வாய்ப்பும் இல்லை. இதற்கு சிங்களப் பேரினவாதிகள் உடன்படவும் மாட்டார்கள் என்பதே வரலாறு.

அரசினால் தமிழருக்குரிய பொலிஸ் அதிகாரம் வழங்கப்படாத நிலையில் வடக்கின் முதலமைச்சர் தமிழ் இளைஞர் யுவதிகளை பொலிஸ் படையில் இணையச்சொல்வது சர்ச்சைக்குரிய விடயமாகும்.

இவ்விடயம் முதல்வரின் திராணியற்ற தன்மையையே வெளிக்காட்டுகிறது. இவ்வாறு தமிழ் இளைஞர் யுவதிகள் பொலிஸ் படையணியில் இணைகின்றபோது தமிழர்களை வைத்தே தமிழ் மக்களை அடக்கியாளும் திட்டத்தை சிங்கள அரசு மேற்கொள்ள இது மிகப்பெரிய வாய்ப்பாக அவர்களுக்கு அமையும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

அதேசமயம் தமிழர்களை வைத்தே தமிழர் போராட்டங்களை எதிர்காலத்தில் முறியடிக்கும் சிங்களவர்களின் தந்திரங்கள் நிறைவேறும்போது நாம் சிங்கள அடக்குமுறை தொடர்கின்றது என்று சர்வதேசத்திற்கு வெளிக்காட்ட முடியாமல் போகும் தர்மசங்கட நிலையை ஏற்படுத்தும் என்பதை முதலமைச்சர் உணரமாட்டாரா?

கடந்த காலங்களில் தமிழ்ப் பெண்கள் பொலிஸ் படையணியில் இணைந்தபோது பல கொடூரமான சித்திரவதைகளை எதிர்நோக்கிய சம்பவங்கள் பதிவாகியிருக்கின்றன. சித்திரவதைகளை எதிர்கொள்ள முடியாமல் பலர் வீடுநோக்கி ஓடியதும், பின்னர் கைது செய்யப்பட்ட சம்பவங்களும் இருக்கின்றன.

ஓர் நீதியரசராக, தமிழ் மக்களின் பிரதிநிதியாக, வடமாகாண சபையின் முதல்வராக சிங்கள அரசினால் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அத்தனை வன்முறைகளையும் அறிந்த வடக்கின் முதலமைச்சர்  தமிழ் மக்களை இவ்வாறான தவறான பாதையில் வழிநடாத்துவதென்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

ஒரு தனிநபர் தன்னுடைய வாழ்வியல் பொருளாதார வங்குரோத்து காரணமாக தனது சுயவிருப்பின் அடிப்படையில் பொலிஸ் படையணியில் இணைந்துகொள்வதை நான் தவறு என்று கூறவில்லை. அது அவர்களது சுயவிருப்பம். நாங்கள் அதனைத் தடுக்க இயலாது. ஆனால் ஒரு பொறுப்புமிக்க தமிழ் மக்களின் பிரதிநிதியாக செயற்படும் ஒருவர் எமக்கென அதிகாரங்கள் எதுவும் வழங்கப்படாத நிலையில் பொலிஸ் படையணியில் இணையுமாறு ஊடகங்கள் வாயிலாக கருத்துக்கள் வெளியிடுவதையும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கொள்கைகளுக்கு மாறாக இவ்வாறு செயற்படுவதையும் தமிழ் மக்களின் பிரதிநிதி என்ற வகையில் நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

தமிழ் மக்களுக்குரிய அதிகாரங்கள் அரசினால் முற்றுமுழுதாக வழங்கப்படும்வரை நாம் எமது உரிமைகளுக்காக, எமது எதிர்கால சந்ததியின் நலன்கருதி போராடவேண்டிய சூழ்நிலையே உருவாகியுள்ளது. சிங்கள அரசினால் தமிழ் மக்களுக்காக வழங்கப்பட்ட வாக்குறுதிகள் எதனையும் நிறைவேற்ற முடியாத நிலை, தமிழ் மக்கள் மத்தியில் உள்ள பிரச்சினைகளுக்கான தீர்வுகள் இழுபறி நிலையில் தொடர்கையில், தமிழ் மக்களது பிரதிநிதிகளாகிய நாம் ஒற்றுமையாக, சிந்தித்து, நிதானமாக தமிழ் மக்களைத் தவறான வழியில் கொண்டுசெல்லும் நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் மக்களின் நலனைக் கருத்திற்கொண்டு செயற்படவேண்டும் என்பதுவே எனது கருத்தாகும் என அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *