Breaking
Sun. Nov 24th, 2024

வட மாகாண முதலமைச்சரின் முக்கிய அறிவுறுத்தல்கள்

  • வட மாகாண அமைச்சர்களான தி.குருகுலராசா மற்றும் பொ.ஐங்கரநேசன் ஆகியோர் தாமாகவே தமது பதவிகளைத் தியாகம் செய்யவேண்டும்
  • குற்றச்சாட்டுக்கு இலக்கான ஏனைய இரு அமைச்சர்களும் விசாரணை முடிவடையும் வரை விடுமுறையில் விலகி இருக்க வேண்டும்.
  • அவர்களின் அமைச்சுப் பொறுப்புக்கள் முதலமைச்சரால் தற்காலிகமாக ஏற்றுக்கொள்ளப்படும்
  • இரண்டு அமைச்சர்களின் இராஜினாமாக் கடிதங்களும் மற்றைய இருவரின் விடுமுறைக் கடிதங்களும் நளை (15) நண்பகலுக்கு முன்னர் முதலமைச்சரிடம் கையளிக்கப்பட வேண்டும்

வட மாகாண அமைச்சர்களான தி.குருகுலராசா, பொ.ஐங்கரநேசன் ஆகியோர் தாமாகவே தமது பதவிகளைத் தியாகம் செய்ய வேண்டுமென வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

குற்றஞ்சாட்டப்பட்ட அமைச்சர்கள் குற்றவாளிகளாகக் காணப்பட்டார்களோ இல்லையோ, அல்லது எதிர்காலத்தில் குற்றவாளிகளாகக் காணப்படுவார்களோ இல்லையோ, இன்றைய நிலையில் அவர்கள் பதவியில் தொடர்ந்தால் மக்களின் ஏளனப் பார்வைக்கு ஆளாக நேரிடும் என்பதோடு, அவர்களின் கீழ் பணிபுரியும் அலுவலர்களின் விமர்சனங்களுக்கும் ஆளாக நேரிடும் என முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வட மாகாண அமைச்சர்கள் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டாலும், இல்லாவிட்டாலும் நடைமுறை மாற்றம் ஒன்றை மாகாண சபை உறுப்பினர்களும் மக்களும் விரும்புவதாகத் தெரிகின்றதென முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

குற்றச்சாட்டுக்கு இலக்கான ஏனைய இரு அமைச்சர்களுக்கும் எதிராக புதிய விசாரணையொன்று நடைபெறும் என குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், விசாரணை முடிவடையும் வரை இயற்கை நீதியையம் நல்லாட்சி விழுமியங்களையும் கருதி, குறித்த இரு அமைச்சர்களும் விடுமுறையில் விலகி இருக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

புதிய விசாரணைகளுக்கு முகங்கொடுக்கவுள்ள அமைச்சர்கள் இருவரும் அவர்களது அமைச்சு விடயங்களில் பங்கேற்றக்கூடாது என வலியுறுத்தியுள்ள முதலமைச்சர், அவர்களின் பிரத்தியேக ஆளணியினரும் அமைச்சு விடயங்களில் பங்குபற்றக்கூடாது என அறிவித்துள்ளார்.

விசாரணை நிறைவுபெறும் வரை அவர்களின் அமைச்சுப் பொறுப்புக்களை தான் தற்காலிகமாக ஏற்றுக்கொள்வதாகவும் குறித்த அமைச்சர்களின் செயலாளர்கள் தனக்கு பொறுப்புக்கூற வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

விசாரணைக்குழுவின் அறிக்கைக்கு அமைய, குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்ட அமைச்சர்களின் இராஜினாமாக் கடிதங்களையும் மற்றைய இருவரின் ஒரு மாதத்திற்கான விடுமுறைக் கடிதங்களையும் நளை (15-06-2017) நண்பகலுக்குள் தாம் எதிர்பார்ப்பதாகவும் முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.

கூடிய விரைவில் புதிய விசாணைக்குழு நியமிக்கப்படும் என குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், விடுமுறையில் உள்ள அமைச்சர்களின் விடுமுறைக்காலம் தேவைக்கேற்றபடி நீடிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

வட மாகாண சபையின் இரண்டு அமைச்சர்கள் மீது சுமத்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டுள்ளதாக மாகாண சபையில் கடந்த வாரம் சமர்ப்பிக்கப்பட்ட விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கமைய, மாகாண கல்வி அமைச்சர் தியாகராசா குருகுலராசா மற்றும் அவரது ஊழலுக்கு உடந்தையாக செயற்பட்ட அமைச்சின் செயலாளர் ஆகியோர் பொறுப்புக்களில் இருந்து விலக்கப்பட வேண்டும் என முதலமைச்சரால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழு பரிந்துரைத்திருந்தது.

மூவரடங்கிய விசாரணைக்குழுவின் அறிக்கையில் வட மாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் மீதான குற்றச்சாட்டும் நிரூபிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கமைய, அமைச்சர் ஐங்கரநேசனும் அவரது செயலாளரும் பொறுப்புக்களில் இருந்து நீக்கப்பட வேண்டும் என அந்த அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டிருந்தது.

வட மாகாண சபையின் அமைச்சர்களான ப.சத்தியலிங்கம் மற்றும் பா.டெனீஸ்வரன் ஆகியோருக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை முன்வைத்தவர்கள் விசாரணைகளின் போது சமூகமளிக்காததால் அவர்கள் இருவரும் குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில், மாகாண சபை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட கால அவகாசத்தை அடுத்து, வட மாகாண சபையின் அமர்வு இன்று நடைபெற்றது.

இதன்போது அமைச்சர்களுக்கு எதிரான முறைப்பாடுகளை விசாரித்த மூவரடங்கிய குழுவின் அறிக்கை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

விசாரணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரனே இறுதி முடிவை எடுப்பார் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று நடைபெற்ற மாகாண சபை அமர்வில் அவர் தனது தீர்மானத்தை அறிவித்திருந்தார்.

முதலமைச்சர் சி.வி. விக்னேஷ்வரன் வட மாகாண சபை அமர்வில் ஆற்றிய முழுமையான உரை 

 

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *