வடமாகாண சபை கடந்த காலங்களில் ஊழல் நிறைந்த சபையாக செயற்பட்டு உலகத்திற்கு வெளிவந்திருப்பது வெட்கக் கேடானது என்று வடக்கு கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் அ. வரதராஜப் பெருமாள் வருத்தம் வெளியிட்டுள்ளார்.
யாழ். நல்லூர் யூரோவில் மாநாட்டு மண்டபத்தில் நேற்றைய தினம் (17) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின் வடக்கு மாகாண சபையில் ஏற்பட்டுள்ள குழப்பநிலை தொடர்பில் எமது செய்திச் சேவைக்குக் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் இது குறித்து மேலும் தெரிவிக்கையில்,
முதலமைச்சர் தன்னுடைய அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுச் சுமத்துகிறார். அமைச்சர்கள் ஏனைய அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுச் சுமத்துகிறார்கள்.
அவர்களுடைய கட்சியின் தலைமைக்கெதிராக அவர்களே பிரசாரம் செய்கிறார்கள். கட்சியின் தலைமை தன்னுடைய உறுப்பினர்களுக்கெதிராகப் பிரசாரம் செய்கிறது.
இவ்வாறானவர்கள் எவ்வாறு மக்களுக்குச் சேவை செய்யப் போகிறார்கள்? இவ்வாறானவர்களை நம்பி வாக்களித்த எமது மக்களின் கதி என்ன? என வடக்கு, கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் அ. வரதராஜப் பெருமாள் வருத்தம் வெளியிட்டுள்ளார்.
வடக்கு மாகாண சபை உருவாகும் போது எமது மக்கள் பெரும் எதிர்பார்ப்புக்களுடன் இருந்தார்கள். ஒரு பெரும் யுத்த அழிவுகளுக்குப் பின்னர் உருவான வடக்கு மாகாண சபை எமது மக்களின் விடிவுக்காக உழைக்கும் என்ற எதிர்பார்ப்பு எமது மக்கள் மத்தியிலிருந்தது.
யாழ்ப்பாண மக்கள், வடக்கு மாகாண மக்கள் மாத்திரமன்றி உலகம் முழுவதும் பரந்து வாழும் மக்கள் மத்தியிலும் இந்த எதிர்பார்ப்பிருந்தது.
ஆனால், மக்களுக்கு நன்மை செய்வோம் என்று கூறிக் கொண்டு ஆட்சிக்கு வந்த மாகாண சபை எமது மக்களுக்கு நன்மை எதுவும் செய்யாதது மாத்திரமன்றி தங்களுக்குள்ளும் சண்டையிட்டுக் கொள்கிறார்கள் எனவும் அவர் கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார்.