(ரொமேஸ் மதுசங்க)
வடக்கும் கிழக்கும் இணைந்த மாகாணத்துக்கு சமஷ்டி ஆட்சி முறைமை வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை உள்ளிட்ட பல கோரிக்கைகளை அரசியலமைப்புத் திருத்தத்தில் உள்ளடக்க வேண்டும் என வட மாகாண சபையில் முன்வைக்கப்பட்ட யோசனை, நேற்று வெள்ளிக்கிழமை (22) ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் இந்த யோசனை, சபையில் முன்வைக்கப்பட்டது. இந்த யோசனையைத் தயாரிப்பதற்காக, வட மாகாணசபையினால் விசேட குழுவொன்றும் நியமிக்கப்பட்டிருந்தது. இக்குழு, வடக்கின் பல பிரதேசங்களுக்கும் செய்து பொதுமக்களின் கருத்துக்களைக் கேட்டறிந்தே, மேற்படி யோசனையைத் தயாரித்திருந்தது.
இதில், வடக்கையும் கிழக்கையும் ஒன்றிணைத்து, அங்கு சமஷ்டி ஆட்சிமுறை கொண்டுவரப்பட வேண்டும் என்று, யோசனை முன்வைக்கப்பட்டிருந்தது.
வட மாகாணசபையின் அனுமதிக்காக இந்த யோசனை முன்வைக்கப்பட்ட போது, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினர்களாக வி.ஜயதிலக்க மற்றும் தர்மபால செனவிரத்ன ஆகியோர், இந்த யோசனையை கடுமையாக எதிர்த்தனர். இருப்பினும், வட மாகாணசபையின் எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவரும், இந்த யோசனைக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
இன்று நிறைவேற்றப்பட்ட இந்த யோசனை, எதிர்வரும் 28ஆம் திகதியன்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் கையளிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.