இலங்கையில் அறிமுகமாகக் கூடிய புதிய அரசியல்சாசனத்தில் முஸ்லிம்களின் அரசியல் அபிலாஷைகளை அடைவதற்கு அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் முஸ்லிம் நாடுகளின் உதவியை நாடுகின்றது.
ரிஷாத் பதியுதீன் தலைமையிலான அக் கட்சியின் பிரதிநிதிகள் குழுவொன்று சவுதி அரேபியா சென்று 57 முஸ்லிம் நாடுகளை கொண்ட இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்பின் தலைவர்களை சந்தித்து இது தொடர்பான கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளதாக கூறப்படுகின்றது.
புதிய அரசியல் யாப்பில் முஸ்லிம்களின் பாதுகாப்பும் இருப்பும் சர்வதேச மத்தியஸ்தம் மூலம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை இதன்போது வலியுறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
புதிய அரசியல் சாசனத்தில் இனப் பிரச்சினைக்கான தீர்வாக வடக்கு-கிழக்கு இணைப்பு இருக்கக் கூடாது, தற்போதுள்ளது போன்று இரண்டு மாகாணங்களும் தனித் தனி மாகாணங்களாக இருக்க வேண்டும் என்பதே முஸ்லிம்களின் அரசியல் அபிலாஷை என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கூறுகின்றது.
அண்மைக் காலமாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் வடக்கு – கிழக்கு இணைப்பை வலியுறுத்தி வருவது முஸ்லிம்களிடையே ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக இச் சந்திப்புகளில் கலந்துகொண்டவர்களில் ஒருவரான அக்கட்சியின் துணைத் தலைவர் ஏ.எம். ஜெமீல் கூறுகின்றார்.
இதனை முறியடிப்பதற்கான முன் நடவடிக்கையாகவே இலங்கைக்கு உதவும் நாடுகள் உட்பட முஸ்லிம் நாடுகளின் உதவியை தாங்கள் நாடியுள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.
வடக்கு – கிழக்கு இணைப்புக்கு பிரித்தானியா, அமெரிக்கா மற்றும் இந்தியா போன்ற நாடுகளின் பின்புலம் இருப்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கூறுகின்றது.
இலங்கை முஸ்லிம்களுக்கான ஒரேயொரு சர்வதேச சக்தி இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு என தங்களின் சந்திப்புகளின்போது வலியுறுத்திக் கூறியதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.
தங்களின் கோரிக்கைகள் தொடர்பாக செவிமடுத்த முஸ்லிம் நாடுகளின் தலைவர்கள், புதிய அரசியல் யாப்பில் முஸ்லிம்களின் பாதுகாப்பும் இருப்பும் உறுதிப்படுத்தப்படுத்த வேண்டும் என்றும் இது தொடர்பாக ஜனாதிபதி மற்றும் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு வரப்படும் என உறுதிமொழியும் உத்தரவாதமும் அவர்களால் தரப்பட்டதாகவும் ஏ. எம். ஜெமீல் கூறுகின்றார்.