Breaking
Sun. Nov 24th, 2024

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வீடுகளில் சிகிச்சை பெற்றுவரும் அரச ஊழியர்களுக்கு, அக்ரஹார காப்புறுதி நிதியிலிருந்து இழப்பீடுகளை பெற்றுக் கொடுக்கும் வகையிலான திட்டமொன்றை வகுக்குமாறு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அறிவுறுத்தியுள்ளார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தொழிற்சங்கம் மற்றும் ஒருங்கிணைந்த தொழிற்சங்க பிரதிநிதிகளுடன், அலரி மாளிகையில், இன்று (14) நடைபெற்ற கலந்துரையாடலின் போதே, பிரதமர் இவ்வாறு அறிவுறுத்தியுள்ளார்.

இதன்போது, அரச சேவையை செயற்றிறன் மிக்கதாக மாற்ற வேண்டியதன் அவசியம் குறித்து, பிரதமரிடம் தொழிற்சங்கத்தினர் எடுத்துரைத்தனர்.

இதற்கு, அரச நிறுவனங்களின் செயற்றிறன் மற்றும் உற்பத்தி திறனை மேம்படுத்த வேண்டும் என சுட்டிக்காட்டிய பிரதமர், அதற்கு பொறுப்புவாய்ந்த அதிகாரிகளின் செயற்பாடு அவசியம் எனவும் கூறினார்.

அதற்கு அரச ஊழியர்களுக்கான தேசிய மற்றும் சர்வதேச ரீதியிலான பயிற்சி நடவடிக்கைகளுக்கான வாய்ப்புகளை அதிகரிக்க வேண்டும் எனவும்,பிரதமர் தெரிவித்தார்.

2016ஆம் ஆண்டுக்குப் பின்னர், அரச சேவையில் இணைந்து கொண்டவர்களின் ஓய்வூதிய கொடுப்பனரவை, அதாவது, கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது இழந்த ஓய்வூதிய கொடுப்பனவை மீண்டும் பெற்றுக் கொள்வது தொடர்பில் தொழிற்சங்க பிரதிநிதிகள் இதன்போது சுட்டிக்காட்டினர்.

இது தொடர்பில் ஆராயுமாறு, அரச சேவைகள் அமைச்சின் செயலாளருக்கு அச்சந்தர்ப்பத்திலேயே பிரதமர் அறிவுறுத்தினார்.

அத்துடன், வாழ்க்கை செலவு அதிகரிப்பதற்கு ஏற்ப ஓய்வூதிய கொடுப்பனவை அதிகரிப்பது தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

மேலும், ரயில் திணைக்களத்தின் கொள்முதல்களில் காணப்படும் சில முறைகேடுகள் தொடர்பிலும் இதன்போது, பிரதமருக்கு தொழிற்சங்க பிரதிநிதிகள் விளக்கமளித்தனர்.

கொரோனா  தொற்று காரணமாக நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ள இச்சூழலில், அரச நிறுவனங்களின் செலவுகளை மட்டுப்படுத்துவது தொடர்பில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பிரதமர், ரயில் திணைக்களத்தினுள் காணப்படும் முறைகேடுகள் தொடர்பில் ஆராயுமாறும் பணிப்புரை விடுத்தார்.

குறித்த கலந்துரையாடலில், அமைச்சர்களான காமினி லொகுகே, நிமல் சிறிபால டி சில்வா, அரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி, தொழில் அமைச்சின் செயலாளர் எம்.பீ.டீ.யூ.கே. மாபா பதிரண, பிரதமரின் மேலதிக செயலாளர் சட்டத்தரணி குமாரி அத்தநாயக்க, தேசிய வரவு – செலவுத்திட்ட திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஜுட் நிலூக்ஷன், முற்போக்கு தொழிற்சங்க தேசிய மத்திய நிலையம், ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி தொழிற்சங்க பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *