கட்டுரைகள்பிரதான செய்திகள்

வாழ்க்கையை வாழத் தெரியாத ரிசாத் பதியுதீன்!

 

(ஒரு கடிதம்)

அன்புள்ள ரிசாத் பதியுதீன் அவர்களுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும்.

பரிதாபத்திற்குரிய இலங்கை முஸ்லிம்கள் என்ற சமூகத்தின் உரிமைகளுக்காகவும் விடுதலைக்காகவும் நெஞ்சம் நிமிர்த்தி களத்தில் நின்று போராடும் ஒரு வீரத் தளபதியான உங்களுக்கு இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.

பெரும்பான்மைகளுக்கு மத்தியில் எங்கெல்லாம் இஸ்லாமிய சமூகம் சிறுபான்மையாக வாழ்கின்றதோ அங்கெல்லாம் அந்தச் சமூகத்துக்கு எதிரான அட்டூழியங்களும் அநியாயங்களும் நடந்து வருவதே உலகின் விதியாகிப் போய்விட்டது. ஆனாலும், அந்த அட்டூழியங்களையும் அநியாயங்களையும் எதிர்த்துப் போர் தொடுக்க அஞ்சா நெஞ்சமும் ஆண்மைத் திறனுமிக்க ஒருவரை எல்லாம் வல்ல அல்லாஹ் அவ்வப்போது அந்தச் சமூகத்திலிருந்து உருவாக்கிவிடுகின்றான். அந்த வகையில் இலங்கையில் மூன்றாவது சிறுபான்மையினரான நமது சமூகத்தைத் தமது இஷ்டத்துக்குப் பந்தாடி வந்த ஏனைய இரு பெரும்பான்மையினரிடமிருந்தும் விடுவிக்க அல்லாஹ் முதலில் தேர்ந்தெடுத்த அகத் துணிவும் அழுக்கற்ற இதயமும் கொண்ட மா வீரர்தான் மர்ஹூம் அஷ்ரப் அவர்கள்.

அஷ்ரப் நமது சமூகத்தின் தலைவராக உருவான காலம் முதல் அவருக்கெதிராக மேற்கொள்ளப்பட்ட காட்டிக்கொடுப்புகளும் கழுத்தறுப்புகளும் கொஞ்ச நஞ்சமல்ல. ஏனைய இரு பெரும்பான்மைச் சமூகங்களும் அவரை அடியோடு ஒழித்துவிட கங்கணம் கட்டிச் செயற்பட்டார்கள். அதையும்விட, நமது சமூகத்துக்குள்ளிருந்தே பலர் அவரை அழித்துவிட முயன்றார்கள்.

சிங்கள இனவாதிகள் அவரை இஸ்லாமியத் தீவிரவாதியென்றார்கள். கிழக்கிஸ்தானை உருவாக்கப் போகிறார் என்று கூச்சலிட்டார்கள். மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து ஆயுதங்களைக் கொண்டு வந்து கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் இளைஞர்களுக்குப் பயிற்சி வழங்குகிறார் என்று ஓலமிட்டார்கள். தனது துறைமுக அமைச்சில் முஸ்லிம்களுக்கு மட்டுமே தொழில் வாய்ப்புகளை வழங்குகிறார் என்று குற்றம் சுமத்தினார்கள்.
மறுபுறம் தமிழ் இனவாதிகளும் அஷ்ரப் அவர்கள் மீது வெறுப்பை உமிழ்ந்தார்கள். தமிழர்களின் காணிகளை சுவீகாரம் செய்கின்றார் என்றார்கள். தமிழர்களைக் கொன்று குவிக்கிறார் என்று கூப்பாடு போட்டார்கள். தமிழர்களின் போராட்டங்களைக் காட்டிக் கொடுக்கிறார் என்று கொக்கரித்தார்கள்.

சிங்களவர், தமிழர்கள் என்ற இந்த இரு சாரார் போக, நமது சமூகத்திலிருந்த சில புல்லுருவிகளும் அஷ்ரப் அவர்களுக்கு எதிராக இயங்கினார்கள். முன்னர் ஜே.ஆரிடமும் பிரேமதாஸாவிடமும் பின்னர் சந்திரிகாவிடமும் அஷ்ரப் அவர்களைப் பற்றிக் கட்டுக்கதைகளை இட்டுக்கட்டிச் சொன்னார்கள். சிங்களக் கடும்போக்குவாதிகளிடம் அஷ்ரப் அவர்களைப் பற்றிப் போட்டுக் கொடுத்தார்கள்.

ஆனால் அவை அத்தனையையும் தாண்டி அஷ்ரப் அவர்கள் தனது சமூகத்திற்கான பணிகளை மன உறுதியோடும், உள உவகையோடும் ஆற்றினார். அந்தத் தூய்மையான பணியின் பயணம் சதி மோச, நாசகாரக் கும்பலொன்றின் நயவஞ்சகத்தால் 2000ம் ஆண்டு இடையிலேயே முடிந்து போனது. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்!

அன்று அஷ்ரப் அவர்களை சிங்களக் கடும்போக்கு இனவாதிகளும் தமிழ்த் துவேஷ சிந்தனாவாதிகளும் எவ்வாறெல்லாம் எதிர்த்துப் பாடாய்ப்படுத்தினார்களோ அவ்வாறே இன்று முஸ்லிம் சமூகத்தின் தானைத் தலைவனாக வீறுடன் எழுந்து நிற்கும் உங்களையும் கொடுமைகளுக்கும் அவதூறுகளுக்கும் உட்படுத்தி இல்லாதொழிக்கப் பார்க்கிறார்கள்.

உங்கள் வீரம், உங்கள் அஞ்சாமை, உங்கள் வேகம், உங்கள் விவேகம், ‘எனது மக்கள்…எனது சமூகம்’ என்ற உங்கள் வேட்கை, உங்கள் ஓய்வற்ற உழைப்பு, தளராத சேவை எல்லாமே சிங்களத் தமிழ் இனவாதிகளை மட்டுமல்ல, நமது முஸ்லிம் சமூகத்திலிருக்கும் சில சாக்கடை அரசியல்வாதிகளையும் அவர்களின் அடிவருடிகளையும் கூட அடிவயிறு கலங்கச் செய்திருக்கிறது. அதன் விளைவாகத்தான் உங்கள் மீது அபாண்டங்களையும் அவதூறுகளையும் அள்ளியிறைத்து முஸ்லிம் சமூகத்துக்கான அரசியற் பயணத்திலிருந்து உங்களை ஓரம் கட்ட அவர்கள் முனைகிறார்கள்.

அன்றும் கடும் போக்குப் புத்த பிக்குகள் மா தலைவர் அஷ்ரப் அவர்களோடு மோதினார்கள். சோபித தேரர் தொலைக்காட்சியில் நேரடி விவாதமே செய்தார். அது போன்றே இன்று புத்த பிக்குகளிற் பலர் உங்களோடு மோதுகிறார்கள். ஆனந்த தேரர் தொலைக்காட்சியில் உங்களோடு விவாதம் புரிகின்றார்.

பாராளுமன்ற உறுப்பினரானோம், பிரதியமைச்சரானோம், அரசியல் அந்தஸ்துள்ள அமைச்சருமாகிவிட்டோம் என்று நீங்கள் அரசுக்கும் இனவாதிகளுக்கும் தலை சாய்த்து, உங்கள் சொகுசைப் பார்த்துக் கொண்டு வாய்மூடி இருப்பீர்களானால் உங்களுக்கு எந்தப் பிரச்சினைகளும் இல்லை. ஒரு ஹக்கீமைப் போல, ஒரு ஹலீமைப் போல, ஒரு கபீர் ஹாஷிம் போல, சமூக அக்கறையில்லாமல் வளைந்து கொடுத்து வாழ்வீர்களானால் மௌத்து வரையிலும் யாருடைய எதிர்ப்புமின்றிச் சகல சுகபோகங்களுடனும் சந்தோஷமாக நீங்கள் வாழலாம்.

ஆனால், தெற்கிலும் மேற்கிலும் நமது சமூகம் பாதிப்புக்குள்ளாகும் போது குரல் கொடுக்கிறீர்கள். முஸ்லிம்களின் வீடுகளும் கடைகளும் எரிக்கப்படும் போது நள்ளிரவென்றும் பாராது உடுத்த உடையுடன் ஓடிச் சென்று மேலும் அழிவுகள் ஏற்படாதவாறு பாதுகாக்கிறீர்கள். அல்லாஹ்வையும் குர்ஆனையும் அவமதிப்போரை எதிர்த்து அறிக்கைகள் விடுகிறீர்கள். போதாதற்கு அவர்களுக்கெதிராக வழக்குகள் தாக்கல் செய்கிறீர்கள். நமது சமூகம் எதிர்நோக்கும் பயங்கரவாதத்தைச் சர்வதேசத்துக்கு எடுத்துச் செல்கிறீர்கள்.

27 வருடங்கள் அகதி முகாம்களில் வாழ்ந்த மக்கள் தமது சொந்த நிலங்களுக்குச் சென்று குடியேற உதவி செய்கிறீர்கள். காடு மண்டிப் பாழடைந்து கிடக்கும் பூமியைச் சுத்தம் செய்து அந்த மக்கள் படுத்துறங்க வீடுகளைக் கட்டிக் கொடுக்கிறீர்கள். இதனாலல்லவா வில்பத்துவில் காடுகளை நீங்கள் அழிப்பதாகவும் காணிகளைப் பிடிப்பதாகவும் அவர்கள் கதை கட்டிவிடுகிறார்கள். ஹக்கீம் போல, எவன் செத்தால் என்ன, எவன் பிழைத்தால் என்ன என்று நீங்களும் இருந்தால், உங்களுக்கேன் பிரச்சினைகளும் எதிர்ப்புகளும் வரப் போகின்றன?

வடக்கில் வாழும் முஸ்லிம்களை மட்டுமன்றி அங்கு வாழும் இனவாதச் சிந்தனையற்ற தமிழ் மக்களையும் கூட உங்களின் கண்களாகப் பாவித்து நீங்கள் சேவைகளைச் செய்து வருகிறீர்கள். வீடில்லாதவர்களுக்கு வீடுகளும் கல்வி கற்கப் பாடசாலைகளும் போக்குவரத்திற்குப் பாதைகளும், பள்ளிவாசல்களும், மத்ரஸாக்களும், தொழிற்பேட்டைகளும், சுயதொழில் வாய்ப்புகளும், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளுமென எண்ணற்ற முன்னேற்றங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள். இதனாலல்லவா அங்குள்ள தமிழ் இனவாதிகள் தங்கள் இருப்புப் போய்விடுமேயென்ற பயத்தில் உங்கள் மீது வசைமாரி பொழிகின்றார்கள். தங்களின் அரசியல் எதிர்காலம் அஸ்தமனமாகிவிடுமென்றல்லவா உங்களை இல்லாமலாக்க வேண்டுமென்று சதித்திட்டங்கள் தீட்டிச் செயற்படுகிறார்கள். ஹக்கீம் போல டயஸ்போறாக்களின் காலை நக்கிக் கொண்டும் நம் சமூகத்தை அவர்களிடம் அடகு வைத்தும் நீங்கள் வாழ்வீர்களென்றால், அங்குள்ள தமிழ் அரசியல்வாதிகளினால் நீங்கள் உச்சத்தில் வைத்துப் போற்றப்படுவீர்களே…!

நீங்கள் நரகத்துக்குப் போவீர்கள் என்றல்லவா இன்று ஞானசார தேரர் சாபமிடுகின்றார். அல்லாஹ்வின் தீர்ப்பை ஏற்கனவே அறிந்துவிட்டவர் போலல்லவா அவர் கூறுகின்றார். முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளைப் பற்றியும், விடுதலையைப் பற்றியும் பேசாமல், அல்லாஹ்வை அவர் நிந்தனை செய்வதனைப் பொருட்படுத்தாமல், முஸ்லிம்களின் சொத்துகளைத் தீயிடுவதை வெறுமனே வேடிக்கை மட்டும் பார்ப்பவராக நீங்கள் இருந்தால் உங்களையேன் இந்த ஞானசார தேரர் திட்டப் போகிறார்…? மாறாக, உங்களைக் கட்டியணைத்து முத்தமல்லவா தருவார். அந்த முத்தங்களுக்குக்காகத்தானே ஹக்கீம் கூட அவரை எதிர்த்து ஒரு வார்த்தை பேசாது இருக்கின்றார்.

நீங்கள் எதனையுமே யோசிக்க மாட்டீர்கள். எத்தனை சோதனைகள் வந்தாலும், எவ்வளவுதான் வேதனைகள் வந்தாலும் ‘எனது மக்கள்…எனது சமூகம்…எனது சமூகத்தின் உரிமை…எனது சமூகத்தின் விடுதலை… என் சமூகத்தின் எதிர்கால இருப்பு, எனது மக்களின் நல்வாழ்வு’ என்றுதான் துடியாய்த் துடிக்கிறீர்கள்.

இன்று உங்களை அமைச்சுப் பதவியிலிருந்து தூக்கிவிட ஒரு பெரிய சதியே அரங்கேறிக் கொண்டிருக்கிறது. சிங்கள இன துவேஷிகள், தமிழ் இனவாதிகள், முஸ்லிம் கோடரிக் காம்புகள் என்பன இணைந்த முக்கூட்டுச் சதி இது. இப்போது கூட ஒன்றும் காலம் கடந்துவிடவில்லை. வில்பத்துவில் அகதிகள் குடியிருக்கும் குடிசைகளின் நிலங்களெல்லாம் அரசுக்கே சொந்தமென்று ஓர் அறிக்கை விடுங்கள். சிங்கள பௌத்த இனவாதிகள் உங்கள் அமைச்சுப் பதவியைப் பாதுகாத்துத் தருவார்கள். அதுமட்டுமல்ல, இந்த நாட்டின் துணைப் பிரதமராக உங்களை நியமித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

‘வடக்குக் கிழக்கு இணைவதை ஆதரிக்கிறேன். முல்லைத்தீவில் முஸ்லிம்களுக்கு எந்த உரிமைகளும் இல்லை. விடுதலைப் புலிகள் முஸ்லிம்களுக்கு எதிராக ஒரு போதும் இயங்கவில்லை. வடக்கிலிருந்து முஸ்லிம்கள் தாமாகவே சுயவிருப்பத்துடன் வெளியேறினார்கள். அவர்களைப் புலிகள் வெளியேற்றவில்லை!’ என்று சொல்லிப் பாருங்கள். இப்போது உங்களை எதிர்த்து நிற்கின்ற அதே தமிழ்த் தலைமகள் உங்களை வீட்டுக்குக் கூட்டி வந்து விருந்து வைப்பார்கள். உங்களுக்கு மிகச் சிறந்த இன்னொரு அமைச்சையும் சேர்த்து வழங்கும்படி அரசாங்கத்திடம் சிபாரிசு பண்ணுவார்கள். இலண்டனிலும் கனடாவிலும் பெரும் ஆடம்பர மாளிகைகளைப் பரிசாக வழங்குவார்கள்.

‘சமூகத்தின் உரிமையாவது மண்ணாங்கட்டியாவது. சும்மா இந்த மக்களை இறுதிவரை ஏய்த்துக் கொண்டிருப்போம். தாருஸ்ஸலாத்தையும் பைத்துல் மால் நிதியையும் நீங்களே வைத்துக் கொள்ளுங்கள். எத்தனை பெண்களோடு நீங்கள் இருந்தாலும், என்ன ஹராத்தை நீங்கள் செய்தாலும் நான் அதனைக் கண்டு கொள்ளவே மாட்டேன். தமிழ் டயஸ்போறாக்களுக்கு இந்த சமூகத்தை நீங்கள் விற்பதில் எனக்கொன்றும் ஆட்சேபனைகள் கிடையாது. கடைசி வரை நீங்கள்தான் சர்வ அதிகாரம் பொருந்திய தலைவர்.’ என்று ஹக்கீமிடம் சொல்லிப் பாருங்கள். உங்களைத் தனது பிரதித் தலைவராகவும் மிகச் சிறந்த நண்பராகவும் ஆக்கிக் கொள்வார். அத்தோடு யார் காலைப் பிடித்தாவது உங்களுக்கு ஒரு பிரதி அமைச்சர் பதவியையாவது பெற்றுத் தருவார்.

ம்க்கும்…வாழ்க்கையை வாழத் தெரியவில்லையே உங்களுக்கு.

எனவே, அன்புமிக்க ரிசாத் பதியுதீன் அவர்களே!

இந்த நேரத்தில் நிதானத்துடன் சிந்தித்து ஒரு முடிவுக்கு வாருங்கள்.

இந்த சமூகமா? உங்கள் சௌக்கியமா?

இந்த மக்களா…? உங்கள் மகிழ்ச்சியா..?

முஸ்லிம்களின் உரிமைக்கான போராட்டத்தில் உங்கள் இழப்புகளா..? உங்கள் எதிர்கால வாழ்வுக்கான சுபீட்சங்களா…?

வஸ்ஸலாம்!

Related posts

மன்னார்-அடம்பனில் கட்சி காரியாலயத்தை திறந்த றிஷாட் (படம்)

wpengine

வவுனியா நகரசபையினரின் உடல் வலுவூட்டல் நிலையம் குறைபாடுகளுடன்

wpengine

கட்டாரை அச்சுறுத்தும் அரபு கூட்டணி

wpengine