Breaking
Sat. Apr 20th, 2024

-சுஐப் எம். காசிம்-

மத்தியகிழக்கில், வல்லரசாக நிலைப்படும் ஈரானின் முயற்சிகள், வெற்றியின் இலக்கை எட்டும் கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் 1500க்கும் அதிகமான தடைகளுக்குள்ளும் இந்த இலக்கை ஈரான் எப்படி நெருங்கியது. இதுதான், அந்த நாடுகளுக்கு ஏற்பட்டுள்ள அச்சம். யுரேனியம் செறிவூட்டலில், எண்பது வீதத்தின் எல்லைக்கு ஈரான் வந்துள்ளதால் இன்னும் சில வாரங்களில், அணுகுண்டையும் தயாரித்து விடும் அந்நாடு.

இவ்வளவு காலமாக, இந்த ரகசியத்தை ஈரான் பத்திரப்படுத்திய விடயம் இருக்கிறதே, அந்நாட்டு உளவுத்துறையின் திறமைக்கு இதுதான் ஆதாரம். அமெரிக்காவின் எத்தனையோ ஜனாதிபதிகளின் கண்களை, சுட்டு விரலால் குத்திவிட்டுத்தான் இந்தக் காரியம் ஆற்றப்பட்டுள்ளது.

யுரேனியத்தை செறிவூட்டி வரும் ஈரான், இறுதி இலக்கை அடைவது அமெரிக்கா, ஐரோப்பாவுக்கு மட்டுமல்ல அருகிலுள்ள அரபு நாடுகளுக்கும் ஆபத்துத்தான். என்ன விலை வழங்கியும், ஏன்? எண்ணெய் வளங்கள் அத்தனையையும் அள்ளிக் கொடுத்தாவது இதைத் தடுக்குமாறு அருகிலுள்ள அரபு நாடுகள் அமெரிக்காவைக் கேட்பதும் இதற்காகவே.

துரதிஷ்டமாக முஸ்லிம் உலகுக்குள் ஏற்பட்டுள்ள ஷியா, சுன்னி என்கிற மத ரீதியிலான கருத்து பேதங்கள்தான், குறிப்பாக மத்திய கிழக்கின் இருப்பை ஆட்டிவித்துக் கொண்டிருக்கிறது. 2015இல், ஈரானுடன் பேச்சை ஆரம்பித்த வல்லரசுகள், அந்நாட்டுக்கு விதித்த நிபந்தனைகள் அத்தனையும் அரபு நாடுகளின் நலன்களுடன் நெருங்கியதாக இருந்ததை, ஈரான் கவனிக்கத் தவறவில்லை. இதனால் தான், எல்லாவற்றுக்கும் தலையாட்டியவாறு இணங்கி, கடைசியில் அனைவருக்கும் வாலை ஆட்டிச் சென்றுவிட்ட து. இதில்,அமெரிக்காவுக்கு இருந்த சந்தேகம்தான், 2018 இல் பேச்சுவார்த்தையை விட்டு வெளியேற வைத்ததோ தெரியாது.

மூன்று வருடங்களின் பின்னர், அவுஸ்திரியாவின் தலைநகர் வியன்னாவி ல், மீளவும் இந்தப் பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகியிருக்கின்றன. கடந்த வாரம் ஆரம்பமான இந்தப்பேச்சுவார்த்தைகளில், பழைய கட்டுப்பாடுகளை ஏற்க முடியாதென்றும், இந்தப்பேச்சு வெற்றியளிக்க வேண்டுமானால் இரண்டு நிபந்தனைகளை ஏற்க வேண்டும் என்றும் ஈரான் நிபந்தனை விதித்துள்ளது.

இதில் தான், விழித்திருக்கின்றன இந்த வல்லரசுகள். எதைத் தடுக்க வேண்டுமென இந்த வல்லரசுகள் விரும்பியதோ, அது, இன்று நிகழ்ந்து விட்டது. இவ்வளவு காலமும் ஈரானுக்கு இருந்த தைரியம், அணுகுண்டின் ஆற்றலோடு அனைத்தையும் சாதித்து விடுமென்றுதான் இப்போது அஞ்சப் படுகிறது.

இதற்காகத்தான், ஈரானின் நட்பு நாடுகளுடன் சகவாசத்துக்கான சமிக்கைகளை அரபு நாடுகள் காட்டத் தொடங்கியுள்ளன. சிரிய ஜனாதிபதி பஷர் அல் அஸாத்துடன் கை குலுக்கும் அளவுக்கு சில அரபு நாடுகள் ஆயத்த மாகியிருப்பது, ஆபத்துக்களை தணிப்பதற்கான ஆரம்ப முயற்சிகள் என்று தான் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

மறுபுறத்தில், ஹிஸ்புல்லா, ஹமாஸ், ஹுதி உள்ளிட்ட முஸ்லிம் உலகின் ஷியா அமைப்புக்கள் இதில், ஆனந்த கூத்தாடுகின்றன. இப்புதிய நிலைமைகள் தான் மத்திய கிழக்கின் இருப்பை எப்படி ஆட்டப்போகிறதோ தெரியாது.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *