தற்போதைய காலத்தில் திறன்பேசி பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது. நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் மிகவும் எளிமையாக தொடர்புகொண்டு பேசுவதற்கு வாட்ஸ் அப் செயலி மிகவும் உதவிகரமாக இருக்கிறது.
பல செயலிகள் அறிமுகப்படுத்தப்பட்டாலும் எளிய முறையில் புகைப்படங்கள், வீடியோக்களை ஷேர் செய்துகொள்ள முடிவதால் பலர் வாட்ஸ் அப்பையே விரும்புகின்றனர்.
ஊரடங்கு காலத்தில் பலர் அதிக நேரமாக வாட்ஸ் அப் பயன்படுத்துவதால் அதில் பல புதிய அப்டேட்டுகளை வாட்ஸ் அப் நிறுவனம் கொடுத்துவருகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியான அப்டேட்டில், டார்க் மோட் மற்றும் குரூப் காலில் புதிய வசதிகளை அறிமுகப்படுத்தியது வாட்ஸ் அப். இந்த நிலையில், தற்போது மேலும் பல புதிய அப்டேட்டுகளை அந்நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.
அதன்படி, வாட்ஸ் அப்பில் ஒருவரிடம் சேட் செய்யும்போது அனிமேஷன் ஸ்டிக்கர்களை பயன்படுத்திக்கொள்ளலாம் எனவும் அதற்கான சோதனை தற்போது வெற்றி பெற்றுவிட்டதாகவும் விரைவில் அது அறிமுகமாகவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்றொரு வசதியாக QR Code மூலம் ஒருவரை தொடர்புகொள்ளும் முறை அறிமுகமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வசதியின் மூலம் ஒருவரை தொடர்புகொள்ள அவரது அலைபேசி எண்ணை பதிவு செய்யத்தேவையில்லை. QR Code-ஐ ஸ்கேன் செய்தால் அவர்களிடம் தொடர்புகொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது மட்டுமல்லாமல் கணினியில் வாட்ஸ் அப் பயன்படுத்தும்போது டார்க் மோட் வசதி மற்றும் குரூப் வீடியோ கால்களை மேம்படுத்துவதற்கான புதிய அப்டேட்டுகள் இன்னும் சில வாரங்களில் வர இருப்பதாகவும் வாட்ஸ் அப் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.