சமகால அரசாங்கத்தில் விரைவில் மேற்கொள்ளப்படவுள்ளதாக கூறப்படும் முதல் அமைச்சரவை மறுசீரமைப்பு நடவடிக்கையின் போது நீர்வழங்கல் அமைச்சில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது நீர்வழங்கல் அமைச்சராக வாசுதேவ நாணயக்கார செயற்படுகின்றார்.
இந்நிலையில், நீர்வழங்கல் அமைச்சராக முன்னர் செயற்பட்ட அமைச்சரிடம் இந்த அமைச்சு பதவியை வழங்குவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக குறித்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அமைச்சரும் தனது தற்போதைய அமைச்சர் பதவியில் அவ்வளவு அக்கறை காட்டவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.
நாடாளுமன்ற உறுப்பினர் என்ற நீண்ட வரலாற்றைக் கொண்ட வாசுதேவ நாணயக்கார முதல் முறையாக அமைச்சரவை அமைச்சராக தற்போதைய அரசாங்கத்தில் நியமிக்கப்பட்டுள்ளார்.
வாசுதேவ நாணயக்கார 1970ம் ஆண்டு முதன்முதலில் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தினார். தற்போதைய பிரதமர் மகிந்த ராஜபக்சவும் 1970ம் ஆண்டில் முதல் முறையாக நாடாளுமன்றத்திற்கு தெரிவானார்.
வாசுதேவ நாணயக்கார தனது நாடாளுமன்ற வரலாற்றில் பல அரசாங்கங்களை பிரதிநிதித்துவப்படுத்தியிருந்தாலும், அவர் எந்தவொரு அமைச்சரவை அமைச்சு பதவியையும் வகித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.