Breaking
Thu. Apr 25th, 2024

வாக்குப்பதிவு மையத்திற்குள் செல்பி எடுக்கவும், செல்போன் பயன்படுத்தவும் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி செய்தியாளர்களிடம் கூறும்போது, ”தமிழகத்தில் வருகின்ற 16-ம் தேதி (திங்கட்கிழமை) காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் 100 சதவீதம் முடிவடைந்து, தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள 66,001 வாக்குப்பதிவு மையங்களுக்கு தேவைான 1,04,500 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர், சின்னம், படம் ஒட்டும் பணி முடிந்து தயாராக உள்ளது. நாளை காலை பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு மையங்களுக்கு மின்னணு இயந்திரங்கள் அனுப்பி வைக்கும் பணி நடைபெறும்.

பொதுமக்கள் வாக்களிக்க வசதியாக, தேர்தல் ஆணையம் சார்பில் வீடு வீடாக பூத் சிலிப் வழங்கும் பணி 86.44 சதவீதம் முடிந்துள்ளது. மீதமுள்ள பூத் சிலிப் அந்தந்த தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் சீல் வைத்து ஒப்படைக்கப்பட்டுள்ளது. பூத் சிலிப் கிடைக்காதவர்கள் வாக்காளர் அடையாள அட்டை அல்லது தேர்தல் ஆணையம் அனுமதித்துள்ள 11 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்களிக்கலாம். வாக்குச்சாவடி மையம், வரிசை எண் தெரிந்துகொள்ள 1950 என்ற எண்ணுக்கு எப்பிக் நம்பர் மட்டும் எஸ்.எம்.எஸ். அனுப்பி இலவசமாக தெரிந்து கொள்ளலாம்.

தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட சில இடங்களில் இரவு நேரங்களில் மின்தடை  ஏற்படுத்தி அரசியல் கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக புகார்  வந்ததை தொடர்ந்து, தமிழக அரசின் மின்சாரத்துறை செயலாளரிடம் தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டிருந்தது. அரசு சார்பில் வந்துள்ள பதிலில், ‘தமிழகத்தில் சில இடங்களில் அதிக மின் அழுத்தம் அல்லது குறைந்தழுத்த மின்சாம் காரணமாகவும், தொழில்நுட்ப கோளாறு காரணமாகவும் மின்தடை ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து  கண்காணிப்பதுடன், தலைமை பொறியாளரையும் அனுப்பி பரிசோதனை செய்துள்ளோம்’ என்று  தெரிவிக்கப்பட்டு உள்ளது ஆனாலும், தமிழகத்தில் வருகின்ற 16-ம் தேதி மாலை 6 மணி வரை மின்வெட்டு இருக்கக்கூடாது என்று தேர்தல் ஆணையம் சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. அதையும் மீறி மின்வெட்டு ஏற்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

சென்னை, எழும்பூரில் உள்ள ஒரு விடுதியில் தேர்தல் தொடர்பான சூதாட்டம் நடைபெறுவதாக புகார் வந்தது. தேர்தல் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அங்கு ரூ.2 லட்சம் பணமும் இருந்தது. விசாரணையில், தேர்தல் தொடர்பான சூதாட்டம் நடக்கவில்லை என தெரியவந்தது. பணத்துக்கு உரிய ஆவணங்கள் இருந்ததால் பறிமுதல் செய்த பணமும் திரும்ப ஒப்படைக்கப்பட்டது. வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக 18 பேர் கைது செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் சிறைகளில் உள்ள 1,780 கைதிகளுக்கும் தபால் வாக்குப்போட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நாள் அன்று எக்காரணத்தை கொண்டும் தமிழகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட மாட்டாது. வாக்குச்சாவடிகளில் வாக்களிக்க வரும் பொதுமக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் பறக்கும் படை மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் இதுவரை ரூ.102 கோடி கைப்பற்றப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் ஒரே நாளில் மட்டும் ரூ.1 கோடியே 43 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும், வாக்குப்பதிவு நாளான வருகின்ற 16-ம் தேதி வாக்குப்பதிவு மையத்துக்குள் இருக்கும் வேட்பாளர்களின் முகவர்கள் யாரும் செல்போன் எடுத்து வரக்கூடாது. அதேபோன்று, வாக்களிக்க வரும் பொதுமக்களுக்கும் வாக்குப்பதிவு மையத்திற்குள் செல்போன் கொண்டு வர அனுமதி இல்லை. மீறி கொண்டு வந்தாலும், செல்போனை வாக்குப்பதிவு மையத்திற்குள் பயன்படுத்தக் கூடாது. ஒருவேளை வாக்குப்பதிவு மையத்திற்குள் பொதுமக்கள் செல்போனை பயன்படுத்தினாலோ அல்லது வாக்களிப்பதை செல்பி எடுக்க முயற்சி செய்தாலோ, உடனடியாக செல்போன் பறிமுதல் செய்யப்படும்” என்றார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *