ஏ.எல்.நிப்றாஸ் (ஊடகவியலாளா்)
மாகாண சபைகள் எல்லை மீள்நிர்ணய வரைபு பாராளுமன்றத்திற்கு வருகின்றது. நாளைய பாராளுமன்ற ஒழுங்குப்பத்திரத்தில் 14ஆவது நடவடிக்கையாக இவ்விடயம் எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
குத்துக்கரணம் அடித்தாவது அதனை நிறைவேற்றிக் கொள்ள அரசாங்கம் முயற்சிக்கும்.
முஸ்லிம் எம்.பி.க்களே நீங்கள் இதற்கும் ஆதரவளிக்கப் போகின்றீர்களா?
18ஆவது திருத்தம், திவிநெகும,
கிழக்கு மாகாண சபையில் 20ஆவது திருத்தம், உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் தோ்தல் திருத்தச்சட்டங்கள்…. ஆகியவற்றுக்கு வாக்களித்தது போல இதற்கும் வாக்களிக்கப் போகின்றீா்களா?
இப்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ள மாகாண சபைகள் எல்லை மீள் நிர்ணய அறிக்கை முஸ்லிம்களுக்கு சாதகமே கிடையாது. அந்தக் குழுவின் உறுப்பினரான பேராசிரியா் ஹஸ்புல்லாவின் முஸ்லிம் சாா்பு நிலைப்பாடுகள் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. “உனது வாயை மூடு“ என்று ஒரு தடவை அவருக்கு சொல்லப்பட்டதாக அறிகின்றேன்.
1. முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தும் முஸ்லிம் பெரும்பான்மை தொகுதிகள் இல்லை
2. இரட்டை அங்கத்தவா் தொகுதிகள் இல்லை
3. முஸ்லிம் பிரதேசங்களின் பிரதிநிதித்துவம் குறையும் விததில் வேறு பிரதேசங்களுடன் இணைத்து தொகுதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
4. இதனால் 15 மாகாண சபை உறுப்பினர்களை பெறுவது கூட கல்லில் நார் உரிக்கின்ற வேலையாக இருக்கும்.
(இப்படி இன்னும் பல….)
இந்த இலட்சணத்தில் –
நீங்கள் இதற்கு ஆதரவளிக்கப் போகின்றீர்களா?
இப்படித்தான் கிளிப்புள்ளைக்கு சொல்வது போல் எத்தனை முறை சொல்லியும் எழுதியும் வந்தோம். வட்டார எல்லை நிர்ணயம் வரை எல்லாவற்றுக்கும் கண்ணை மூடிக் கொண்டு வாக்களித்தீர்கள்.
உலகிலேயே பிழை என்று தெரிந்து கொண்டு வாக்களித்தவர்கள் நீங்கள் மட்டுமாகவே இருப்பீர்கள்.
இம்முறையும் அப்படிச் செய்ய வேண்டாம்… என்று மிகவும் வினயமாக முஸ்லிம் சமூகத்தின் சார்பாக வேண்டிக் கொள்கின்றோம்.
இரவில் படுக்கையில் சிறுநீர் கழிக்கும் சிறுவன் காலையில் வீட்டாருக்கு அளிக்கும் விளக்கம் போல.. எல்லாவற்றுக்கும் ஆதரவளித்து விட்டு சமூகத்தின் முன்னால் வந்து மொக்குத்தனமாக விளக்கமளிக்க நினைக்க வேண்டாம்.