(MFM.Fazeer)
பிரபல றக்பி வீரர் வஸீம் தாஜுதீனின் படு கொலை விசாரணைகளில் மேலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
வஸீம் தாஜுதீனின் கொலை இடம்பெற்ற தினத்தன்று நாரஹேன்பிட்டி பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியாக இருந்த பிரதான பொலிஸ் பரிசோதகர் டேனியல் பெரேராவுக்கு ஜனாதிபதி செயலகத்தில் இருந்து வந்த சந்தேகத்துக்கு இடமான அழைப்புக்கள் குறித்த மேலதிக விசாரணைகளிலேயே இம்முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
இந் நிலையில் இந்த அழைப்பை ஜனாதிபதி செயலகம் ஊடாக ஏற்படுத்தியவர் யார் என்பதைக் கண்டுபிடிக்க புலனாய்வுப் பிரிவினர் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கொலை இடம்பெற்ற 2012.05.17 அன்றும் அதற்கு முத்திய தினமான 2012.05.16 அன்றும் பிரதான பொலிஸ் பரிசோதகர் டேனியல் பெரேராவுக்கு 4 தொலைபேசி அழைப்புக்கள் ஜனாதிபதி செயலகம் ஊடாக வந்துள்ளதாகவும் இதில் ஒரு அழைப்பு கொலை இடம்பெற்ற தினத்தன்று அதிகாலை 5.30 மணிக்கு வந்துள்ளதாகவும் குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசாரணைகளில் உறுதியாகியுள்ளது.
தொலைபேசி அழைப்புக்கள் குறித்த மேலதிக விசாரணைகளில், ஜனாதிபதி செயலகத்தின் அழைப்புக்கள் பதிவாகும் சி.பி.யூ. இயந்திரத்தில் இருந்த தகவல்கள் அழிக்கப்பட்டிருந்த நிலையில் அவை மீளப் பெறப்பட்டுள்ளதாக நேற்று கொழும்பு மேலதிக நீதிவானுக்கு அறிக்கை சமர்ப்பித்த குற்றப் புலனாய்வுப் பிரிவின் மனிதப் படுகொலைகள் தொடர்பிலான விசாரணைகளுக்கு பொறுப்பான அதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் விமலசிறி ரவீந்திர, அதனூடாக சந்தேகிக்கத்தக்க மேலும் நான்கு தொலைபேசிகள் தொடர்பிலான தகவல்களை வெளிப்படுத்தியுள்ளதாக நீதிவானுக்கு அறிக்கை ஊடாக அறிவித்துள்ளார்.
வஸீம் தாஜுதீன் படு கொலை வழக்கு நேற்று கொழும்பு மேலதிக நீதிவான் நிஸாந்த பீரிஸ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இதன் போது முறைப்பாட்டாளர் சார்பில் அரசின் பிரதி சொலிசிற்றர் ஜெனரல் டிலான் ரத்நாயக்க ஆஜராகியிருந்ததுடன் விசாரணையாளர்கள் சார்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பிரதான பொலிஸ் பரிசோதகர் விமலசிறி ரவீந்திர ஆஜராகியிருந்தார். பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி மிஸ்பாஹ் சத்தார் ஆஜரானார்.
இந் நிலையில் விசாரணைகள் ஆரம்பமானபோது குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மேலதிக விசாரணை அறிக்கை மன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.
அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,
வஸீம் தாஜுதீனின் படு கொலை இடம்பெற்ற 2012.05.17 அன்று நாரஹேன்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய டேனியல் பெரேராவின் இலக்கத்துக்கு சந்தேகத்துக்கு இடமான நான்கு அழைப்புகள் ஜனாதிபதி செயலகத்திலிருந்து மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது தொடர்பிலான தகவல்களை தேடிய போது ஜனாதிபதி செயலகத்தின் தொலைபேசி பதிவுகள் பதிவாகியிருந்த கணினியின் சி.பி.யூ.விலிருந்து அழிக்கப்பட்டிருந்தன.
எனினும் நீதிமன்ற உத்தரவுக்கு அமைய அந்த மென்பொருளை தயார் செய்த தனியார் நிறுவனத்தின் பொறியியலாளர் ஊடாக அழிக்கப்பட்ட தகவல்கள் மீளவும் பெறப்பட்டுள்ளன.
இதன் போது நாரஹேன்பிட்டி பொலிஸ் பொறுப்பதிகாரியாக இருந்த டேனியல் பெரேராவுக்கு கொலை இடம்பெற்ற தினம் அதிகாலை 5.30 மணிக்கு ஜனாதிபதி செயலக தொலைபேசி இலக்கம் ஊடாக அழைப்பு கிடைத்துள்ளமை தெரியவந்தது.
இதனைவிட குறித்த சி.பி.யூ.விலிருந்து சந்தேகிக்கத்தக்க மேலும் நான்கு தொலைபேசி இலக்கங்கள் கண்டறியப்பட்டன. வஸீமின் கொலை இடம்பெற்ற காலப்பகுதிக்குள் நான்கு தொலைபேசி இலக்கங்களுக்கும் சந்தேகத்துக்கு இடமான அழைப்புக்கள் ஜனாதிபதி செயலக தொலைபேசி ஊடாக சென்றுள்ளன. இது குறித்து நாம் விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளோம்.
அத்துடன் ஜனாதிபதி செயலகத்தின் இலக்கங்கள் ஊடாக அழைப்பை ஏற்படுத்தியோர் யார் என்பதை கண்டறிய, அவ்விலக்கங்களுக்கு பொறுப்பாக கடமையாற்றியோர் தொடர்பிலான விபரம் ஜனாதிபதி செயலகத்தின் உள்ளக விவகார முகாமையாளரிடம் கோரப்பட்டுள்ளதுடன் அவரின் அறிக்கை கிடைத்தவுடன் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
நேற்று பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பில் மன்றில் ஆஜரான சிரேஷ்ட சட்டத்தரணி மிஸ்பாஹ் சத்தார், வழக்கின் இரண்டாவது சந்தேக நபரான மேல் மாகாணத்துக்கு பொறுப்பான முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனநாயக்க விளக்கமறியலில் வைக்கப்பட்ட காலப்பகுதிகளில் தேசிய வைத்தியசாலையின் கட்டணம் அறவிடும் அறையில் சிகிச்சை பெறுவது குறித்து வாதிட்டார். இது குறித்து கடந்த தவணையின் போது, தேசிய வைத்தியசாலை மற்றும் சிறைச்சாலை வைத்தியசாலையிடம் கோரிய அறிக்கைகள் பற்றி இதன் போது அவர் கேள்வி எழுப்பினார்.
இந் நிலையில் இப்படுகொலை தொடர்பிலான முதல் சந்தேக நபர் நாரஹேன்பிட்டி பொலிஸ் நிலையத்தின் முன்னாள் குற்றவியல் பொறுப்பதிகாரி சுமித் சம்பிக்க பெரேரவுக்கு பிணை கோரப்பட்டது.
எனினும் பிணை கோரிக்கையை நிராகரித்த நீதிவான் நிஸாந்த பீரிஸ், சுமித் சம்பிக்க பெரேரா, அனுர சேனநாயக்க இருவரையும் எதிர்வரும் ஒக்டோபர் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
அத்துடன் அன்றைய தினம் அனுர சேனநாயக்க தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவது, வைத்திய சபையின் விசாரணைகள் தாமதமடைவது குறித்து பொருத்தமான உத்தரவுகளை உரிய சட்டங்களை ஆராய்ந்து பிறப்பிப்பதாகவும் நீதிவான் அறிவித்தார்.
மீட்கப்பட்ட உடற்பாகங்கள் மீது டி.என்.ஏ. சோதனை
மாலபே தனியார் மருத்துவ கல்லூரியான சைட்டமிலிருந்து புலனாய்வுப் பிரிவினரால் சோதனை நடவடிக்கையின்போது மீட்கப்பட்ட 26 உடற்பாகங்கள் மீது டி.என்.ஏ. சோதனை செய்யவும் பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.
வஸீம் தாஜுதீன் படு கொலை வழக்கு நேற்று கொழும்பு மேலதிக நீதிவான் நிஸாந்த பீரிஸ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
இதன்போது குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் சமர்ப்பிக்கப்பட்ட மேலதிக விசாரணை அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்விவகாரம் குறித்து அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
நீதிமன்ற உத்தரவுக்கு அமைய மாலபேயில் உள்ள சைட்டம் எனும் தனியார் மருத்துவக் கல்லூரியின் நூதனசாலையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பின் போது வஸீம் தாஜுதீனுடையதாக இருக்கலாம் எனும் சந்தேகத்தில் 17 தொடை எலும்புகளும் 7 நெஞ்சு எலும்புகளும் மேலதிக ஆய்வுக்காக எடுக்கப்பட்டன. அவற்றில் வஸீம் தாஜுதீனுடைய உடற்பாகங்களை உறுதி செய்ய டி.என்.ஏ. சோதனையை ஜீன் டெக் நிறுவனம் ஊடாக நடத்த எதிர்பார்க்கின்றோம்.
இதற்கான செலவினங்கள் உள்ளிட்டவற்றை ஈடு செய்ய பொலிஸ் மா அதிபருடன் இது குறித்து ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கவுள்ளோம். இதனைவிட குறித்த சுற்றி வளைப்பின் போது 19 பெட்டிகளில் அடைக்கப்பட்ட உடற்பாகங்கள் பலவற்றை முத்திரையிட்டு வழக்குப் பொருட்களாக மீள மன்றிடம் கையளித்துள்ளோம்.
இந் நிலையில் குறித்த சுற்றி வளைப்பின் போது அந்த தனியார் மருத்துவ கல்லூரியின் செயற்திட்ட அதிகாரியான விதாத் ஹுஸ்னி ரசீத்திடம் நாம் வாக்கு மூலம் பதிவு செய்தோம். நான்கு நிபந்தனைகளின் அடிப்படையில் 2013.05.21 அன்று இந்த உடற்பாகங்களை வைத்திய நிபுணர் ஆனந்த சமரசேகர கல்லூரிக்கு கொன்டு வந்ததாக அவர் கூறியதுடன் கல்லூரியில் வைப்பதற்கான அனுமதியை வெல்லம்பிட்டி பொலிஸார் ஊடாக பெற்றுக்கொண்டுள்ளதாகவும் தேவையற்றவற்றை தலஹேன் பொது மயானத்தில் புதைக்குமாறும் கூறி கடந்த 2016.09.27 ஆம் திகதி முதல் விடுமுறையில் சென்றுள்ளதாகவும் அவர் வாக்கு மூலத்தில் கூறினார்.’ என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந் நிலையில் வஸீமின் சடலம் மீது முதலில் பிரேத பரிசோதனையை முன்னெடுத்த வைத்தியர் ஆனந்த சமரசேகரவுக்கு எதிராக வைத்திய சபை முன்னெடுத்து வரும் விசாரணைகள் தாமதமடைவது குறித்து அரச சட்டவாதி டிலான் ரத்நாயக்க சந்தேகம் வெளியிட்டார்.
எனினும் வைத்திய சபை சார்பில் ஆஜரான சட்டத்தரணி வைத்தியர் ஆனந்த சமரசேகர மீதான விசாரணைகள் நவம்பர் மாதம் 6 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாகவும் விசாரணையாளர்கள் தொடர்பில் திகதியை ஒதுக்கீடு செய்வதில் உள்ள பிரச்சினையே தாமதத்துக்கு காரணம் எனவும் சுட்டிக்காட்டினார்.