வவுனியா

வவுனியா வடக்கில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி ஏனைய தமிழ் கட்சிகளுடன் இணைந்து போட்டியிடும்!

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வவுனியா வடக்கு பிரதேச சபையில் தமிழ்க் கட்சிகள் இணைந்து போட்டியிடுவது தொடர்பாக ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி ஏனைய கட்சிகளுடன் கலந்துரையாடவுள்ளதாக அதன் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ஈபிஆர்எல்எப் கட்சியின் செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் பங்காளிக் கட்சிகளுக்கிடையிலான கலந்துரையாடல் ஒன்று வவுனியாவில் இடம்பெற்றது. அதன்பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பொதுமக்களின் ஆலோசனைகளையும், அபிப்பிராயங்களையும் கேட்டறிந்து மக்கள் மத்தியில் நன்மதிப்பை பெற்ற வேட்பாளர்களை இனம்கண்டு களம் இறக்குவது தொடர்பாக கலந்துரையாடியுள்ளோம்.

அந்தவகையில், வவுனியா வடக்கு பிரதேச சபைக்காக ஏனைய தமிழ்க் கட்சிகளோடு இணைந்து போட்டியிடுவதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியானது நீண்ட காலமாக சிங்கள குடியேற்றம், பௌத்தமயமாக்கல் செயற்பாடுகளால் அதன் இனவிகிதாசாரத்தில் பாரிய மாற்றம் ஏற்படும் நிலமை உள்ளது.

எனவே, தமிழரசுக்கட்சி மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியோடும் பேசி அங்கு இணைந்து போட்டியிட முடியுமா என்பது தொடர்பாக கலந்துரையாடவுள்ளோம்.

கடந்த ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத் தேர்தல்கள் போல இந்த தேர்தல் அமையாது. ஏனெனில் தேசிய மக்கள் சக்தி மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் திணறுகின்ற நிலைமையை அவதானிக்கிறோம். தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்த பெரும்பாலான தமிழ் மக்கள் இன்று வருத்தப்படுகின்ற நிலையை காண்கின்றோம்.

எனவே, உள்ளூராட்சி மற்றும் மாகாணசபை தேர்தல்களில் தமிழ் மக்கள் சரியான முடிவை எடுக்க வேண்டும். எமது பிரதேசத்தில் நாங்களே ஆளுமை செய்ய வேண்டிய நிலமையை உருவாக்க வேண்டும். அந்தவகையில் பலமான கூட்டணியான ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் கரங்களை பலப்படுத்த வேண்டியது வட-கிழக்கு தமிழ் மக்களின் கடமையாக இருக்கிறது எனத் தெரிவித்தார்.

Related posts

வவுனியா – பண்டாரிக்குளம் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக..!

Maash

வவுனியா மரக்கடத்தல் வாகனத்தை விரட்டிப் பிடித்த போலீசார் . .!

Maash

வாக்காளர் அட்டைகளுடன் ஆளும்கட்சி வேட்பாளரின் சகோதரனும், தபால் ஊழியரும் கைது .

Maash