வவுனியாவில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் காபெற் வீதிகளை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டத்தில் சேதமடைந்த பல வீதிகள் உள்வாங்கப்படவில்லை என விசனம் முன்வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆய்வு செய்து சேதமடைந்த வீதிகளுக்கு முன்னுரிமை வழங்கி அதனை சீரமைப்பதற்குரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று சாந்தசோலை கிராம அமைப்புக்கள் கோரியுள்ளனர் .
இது தொடர்பில் சாந்தசோலை கிராம அமைப்புகள் மேலும் கோருகையில்,
வவுனியாவில் பல வீதிகளை காபெற் வீதிகளாக அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டங்கள் ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களால் ஆரம்பிக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் பாரியளவில் சேதமடைந்து பொதுமக்கள் பயணம் செய்ய முடியாதளவிற்கு உள்ள பல வீதிகள் கவனிப்பாரற்று கைவிடப்பட்டுள்ளன.
எனினும் போக்குவரத்து செய்யும் நிலையில் காணப்படும் வீதிகள் தற்போதைய ஆட்சிக்காலத்தில் காபெற் வீதிகளாக அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றது என்பது கவலைக்குரியதாகும்.
பல ஆண்டுகளாக கிரவல் கூட இட்டு புனரமைப்புச் செய்யப்படாமல் சாந்தசோலை கிரேஷர் வீதி காணப்படுகின்றது.
இதனைச் சீரமைத்து தருமாறு கடந்த ஆட்சியாளர்கள் உட்பட பிரதேச சபை என பல்வேறு தரப்பினரிடம் கோரியும் அது நடைபெறவில்லை.
எனவே சேதமடைந்த வீதிகளைச் சீரமைப்பதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது பிரத்தியேக செயலாளர் ஊடாக ஆய்வு செய்யப்பட்டு மக்கள் அதிகம் பயன்படுத்தும் வீதிகளை காபெற் வீதிகளாக அபிவிருத்தி செய்ய முன்வர வேண்டும் என்று மேலும் கோரியுள்ளனர்.