Breaking
Sun. Nov 24th, 2024

வடமாகாண மீன்பிடி, போக்குவரத்து, கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களின் வழிகாட்டலில் கிராம அபிவிருத்தி திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படும் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகள், மாவீரர் குடும்பங்களுக்கான 2017 ஆண்டுக்கான வாழ்வாதார உதவித்திட்டங்கள் பெறும், தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கான விசேட கலந்துரையாடல் கடந்த 11.07.2017 செவ்வாய்க்கிழமை மதியம் 2 மணியளவில் வவுனியா உள்ளகசுற்றுவட்ட வீதியில் அமைந்துள்ள கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் கேட்போர்கூடத்தில் திணைக்களத்தின் மாகாண பணிப்பாளர் ஜே.ஜே.சி.பெலிசியன் தலைமையில் நடைபெற்றது.

கடந்த 2014 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட குறித்த வேலைத்திட்டத்தில் இதுவரையில் 1360 பேருக்கான வாழ்வாதார உதவித்திட்டங்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில், இவ்வருடம் 5 மாவட்டங்களிலும் இருந்து ஒரு மாவட்டத்திற்கு 60 பயனாளிகள் வீதம் முன்னுரிமை அடிப்படையில் தெரிவுசெய்யப்பட்ட 300 பயனாளிகளுக்கு தலா 50,000 ரூபா வீதம் அவர்களின் வாழ்வாதாரத்தினை முன்னேற்றும் வகையில் திட்டங்கள் வழங்கப்படவுள்ளன.

அந்தவகையில் வவுனியா மாவட்டத்தில் முன்னுரிமை அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட 60 பயனாளிகள் திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள் மூலமாக வாழ்வாதார செயற்ப்பாடுகளை முன்னெடுப்பது தொடர்பாக அறிவுறுத்தப்பட்டு சரியான திட்டத்தினை தெரிவு செய்வது சம்மந்தமாக நேர்முகத்தேர்வுகளும் நடாத்தப்பட்டதுடன் அவர்களினால் தெரிவுசெய்யப்பட திட்டங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

அந்நிகழ்வில் முதன்மை அதிதியாக அமைச்சர் டெனிஸ்வரன் கலந்துகொண்டு பயனாளிகளை அறிவுறுத்துகையில், முயற்சி இருந்தால் முன்னேற முடியுமென தெரிவித்துள்ளதோடு, அவர்கள் தமக்கு ஏற்புடைய உதவித்திட்டங்களை பெற்றுக்கொண்டு அதன்மூலம் நம்பிக்கையோடு முயற்சி செய்தால் அதிக வருவாயினைப் பெற்று வினைத்திறன் உடையதாக மாற்றிக்கொள்ள முடியுமெனவும், கடந்த காலங்களில் உதவித்திட்டங்களை பெற்ற பலர் அயராத முயற்ச்சியால் மாதாந்தம் கணிசமான வருமானம் பெறுவதாகவும் சுட்டிக்காட்டியதோடு அவற்றின் மூலம் தமது பிள்ளைகளின் எதிர்காலத்தினை கருத்தில்கொண்டு அவர்களுக்கு நல்லதொரு கல்வியினை வழங்கவேண்டுமென்றும் அதுவே எமது சமூகத்திற்கான நிலையான சொத்து எனவும் அறிவுறுத்தினார்.

குறித்த நிகழ்வில் வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், வடமாகாண சபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன், அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன், மற்றும் திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகள் கலந்து கொண்டனர்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *