நல்லாட்சியில் நாட்டில் வன்புணர்வு உள்ளிட்ட சட்டவிரோத செயல்கள் அதிகரித்து வருவது கவலையளிக்கின்றது. குறிப்பாக வன்புணர்வுகளுக்குள்ளாக்கப்பட்ட சிறுவர்களின் கொலை அதிகரித்து வருகிறது இது சமூகங்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த காலங்களில் மாணவி வித்யா, கொட்டதெனிய சிறுமி சேயா சந்தவமியும் அதேபோன்று கடந்த (16)ம் திகதி வவுனியா விபுலானந்தா கல்லூரி மாணவியாகிய சிறுமி க.ஹரிஸ்ணவி ஆகியோர் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டு மனதை உருக்கும் மனிதாபிமானமற்ற செயலை வன்மையாக கண்டிக்கின்றோம்.
மனதில் இரக்கமற்று காமுக அரக்கர்களால் செய்யப்பட்ட செயல் மிகவும் கொடூரமானது. இவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். நல்லாட்சியில் இவ்வாறான செயல்கள் நடப்பது கவலையளிக்கின்றது. எனவே காவற்துறையினர் குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவதன் மூலம் இவ்வாறான குற்ற செயல்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிறுவர் உள்ளங்களில் இறைவன் குடிகொண்டிருப்பார் என சொல்வார்கள் இதுவே உண்மையாதும் கூட, ஆனால் பிஞ்சு சிறார்களை இரக்கமற்று வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்படுவது கண்டு நாம் அதிர்ச்சியும் கவலையும் அடைகின்றோம். சிறுவர்கள் தொடர்பாக பெற்றோர் அதிக கவனம் எடுக்க வேண்டும்.
சிறுவர்களோ நாட்டின் எதிர்காலம் எனவே இவ்வாறான குழந்தைகள் இரக்கமற்ற முறையில் அரக்கதனமாக வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்படுவது கண்டு கவலையும் மிகுந்த வேதனையும் அடைகின்றோம்.
ஹரிஸ்ணவியை இழந்து தவிக்கும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு மன்னார் ஆயர் இல்லம் சார்பாகவும் குருக்கள் சார்பாகவும் எனது சார்பாகவும் எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம். இறைவன் அவர்களை ஆற்றுவாராக.