முல்லைத்தீவு மாவட்டத்தில் பாரிய குளங்களில் ஒன்றான வவுனிக்குளத்தின் நீர்ப்பாசன மற்றும் கழிவு வாய்க்கால்களை புனரமைக்குமாறு விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
வவுனிக்குளத்தின் கீழ் ஆறாயிரத்து 60 ஏக்கர் நிலப்பரப்பில் 2000 இற்கும் மேற்பட்ட விவசாயிகள் நெற்செய்கையில் வருடாந்தம் ஈடுபட்டு வருகின்றதாக இந்த பகுதி விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
30 ஆண்டுகளுக்கு மேலாக புனரமைக்கப்படாது இருந்த குளத்தின் புனரமைப்புப் பணிகள் மீள்குடியேற்றத்தின் பின்னர் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
முரண்பாடுகளால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை அபிவிருத்தி செய்கின்ற கருத்திட்டத்தின் கீழ் 600 மில்லியன் ரூபா செலவில் குளத்தின் புனரமைப்புப்பணிகளும், ஏனைய முன்னுரிமை அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட பிரதான மற்றும் நீர்ப்பாசனக் கால்வாய்களும் புனரமைக்கப்பட்டன.
அத்துடன்,செயலிழந்து காணப்பட்ட ஏற்று நீர்ப்பாசனத் திட்டங்களும் மீள்புனரமைப்பு செய்யப்பட்டன. இதன் மூலம் 6060 ஏக்கர் நெற்செய்கையும், 1325 ஏக்கர் மேட்டு நிலச்செய்கையும் மேற்கொள்ளக்கூடிய வகையில் குளம் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது.
இந்த குளத்தின் கீழான பிரதான நீர் விநியோக வாய்க்கால்களின் சில பகுதிகளும், கிளைவாய்க்கால்களும், நீர்ப்பாசன வீதிகளும் புனரமைக்கப்படாது இருக்கின்றன.
எனவே இவற்றைப் புனரமைத்துத் தருமாறு இந்த பகுதி விவசாயிகள் மற்றும் விவசாய அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.